கோவையில் அண்ணாமலை தோற்றது எப்படி? யாருக்குச் சென்றன அதிமுக வாக்குகள்?

கோவைத் தொகுதியில் அண்ணாமலை எப்படித் தோற்றார்? அதிமுக வாக்குகள் எங்கே சென்றன? ஓர் அலசல்!
அண்ணாமலை...
அண்ணாமலை...
Published on
Updated on
3 min read

அ.தி.முக.வும் பாரதிய ஜனதாவும் கூட்டணி அமைத்திருந்தால்... அதிமுகவின் அனைத்துப் பிரிவுகளும் ஒன்றாக இருந்திருந்தால்... பா.ஜ.க.வுடன் நெருங்காமல் மறைந்த தலைவர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டையே தொடர்ந்திருந்தால்...

எல்லாமே இருந்தால்தான்... ஆனால், அப்படி எதுவும் இல்லை. இரண்டு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தமிழகத்தில் பாரதிய ஜனதா முன்னெடுத்தது. இந்த அணியில் அதிமுகவில் தலைவர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோரும் போட்டியிட்டுத் தோற்றனர்.

தமிழ்நாட்டில் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் திமுக முன்னெடுத்த இந்தியா கூட்டணியே வெற்றி பெற்றது. எங்கேயும் எதிரணிகள் வெற்றி பெறவில்லை. வரலாற்றில் முதல்முறையாக மக்களவைத் தேர்தலொன்றில் 7 இடங்களில் அதிமுக பிணைத் தொகையையே பறிகொடுக்கவும் நேரிட்டிருக்கிறது. அதிமுகவின் தொண்டர்களுக்கு / ஆதரவு வாக்காளர்களுக்கு என்னவோ நேர்ந்திருக்கிறது.

அண்ணாமலை...
உள்ளபடியே மக்கள் யார் பக்கம்?

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும் வெற்றி பெறும் என்று கடைசி வரை சொல்லிக்கொண்டிருந்தார் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை. ஆளுநர் பதவியிலிருந்து விலகி தமிழிசை சௌந்தரராஜனும் மத்தியில் அமைச்சராக இருந்த எல். முருகனும்கூட போட்டியிட்டனர்; தோற்றனர்.

கட்சித் தலைவர் அண்ணாமலையும், தான் போட்டியிட்ட கோவைத் தொகுதியில் தோற்றார். எனினும், இவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவின் கணபதி ராஜ்குமார் பெற்ற 5,68,200 வாக்குகளைவிட 1,18,068 வாக்குகள் குறைவாக 4,50,132 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தைப் பிடித்தார். இவருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்துக்குத்தான் 2,36,490 வாக்குகளைப் பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ஜி. ராமச்சந்திரனால் வர முடிந்தது. நாலாவது இடத்தில் வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைமணி ஜெகநாதனால் 82,657 வாக்குகளை மட்டுமே பெற முடிந்திருக்கிறது.

தமிழ்நாட்டின் வேறு சில தொகுதிகளைப் போலவே இந்தத் தொகுதியிலும் அ.தி.முக.வும் பாரதிய ஜனதாவும் கூட்டணி அமைத்திருந்தால்... அமைத்திருந்தால்  மிக எளிதாக அண்ணாமலை வெற்றி பெற்றிருப்பார்தான்.

ஆனால், இந்தத் தொகுதியைப் பொருத்தவரை வழக்கமாக அதிமுக பெற்றிருக்க வேண்டிய வாக்குகளேகூட இந்த முறை திமுகவுக்குப் போய்விட்டிருக்கின்றன என்பதுதான் தொகுதிவாரியாக வாக்குகள் விழுந்த விதத்தைக் காட்டும் தேர்தல் அதிசயம்.

அண்ணாமலை...
தமிழ்நாட்டில் வெற்றி கிடைக்காவிட்டாலும்..: குறிப்பிட்டு பேசிய மோடி

2019 மக்களவைத் தேர்தலில் கோவையில் இப்போதுள்ளதைப் போன்றே அமைந்திருந்த திமுக கூட்டணியில் மார்க்சிய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட பி.ஆர். நடராஜன், 571,150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 3,92,007 வாக்குகள் பெற்றுத் தோற்றார். வாக்கு வித்தியாசம் 1.79 லட்சம். மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட்ட ஆர். மகேந்திரன் 1.45 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தார்.

ஆனால், 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்தக் கட்சிகள் எல்லாம் தனித்தனியே போட்டியிட்டன. இப்போது போலவே அதிமுகவும் பாரதிய ஜனதாவும் தனித்தனியே போட்டியிட்டபோது அதிமுகவின் பி. நாகராஜன் 4.31 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தார். பா.ஜ.க.வின் சி.பி. ராதாகிருஷ்ணன் – 3,89,701 (காங்கிரஸின் ஆர். பிரபு – 56,962, மார்க்சிய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட பி.ஆர். நடராஜன் – 34,197). அதிமுகவின் செல்வாக்கு மிக்கதாகக் கூறப்பட்டுவந்த கொங்கு மண்டலத்தில் இந்த 2024 தேர்தலில் அதிமுகவுக்கு 2.36 லட்சம் வாக்குகளே விழுந்திருக்கின்றன. ஆனால், குறைந்துபோன இந்த இரண்டு லட்சம் வாக்குகளும் பாரதிய ஜனதாவுக்குத்தான் சென்றிருக்கும் என்று நினைத்தால் தவறு, அவ்வாறு இல்லை.

2014-ல் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் வாங்கிய 3,89,701 வாக்குகளைவிட 60,431 வாக்குகள் மட்டுமே தற்போது அதிகம் பெற்றிருக்கிறார் 2024-ல் அண்ணாமலை!

அண்ணாமலை...
மூன்று நிகழ்ச்சிகளில் ஒரே உடையில் மோடி!

ஆனால், 2014-ல் தனித்தனியே போட்டியிட்ட திமுக, காங்கிரஸ், மார்க்சிய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் எல்லாமும் சேர்ந்து பெற்ற வாக்குகளைவிட இந்தத் தேர்தலில் 2.6 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறார் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ராஜ்குமார்.

2014 ஆம் ஆண்டைவிட 2024-ல் பதிவான வாக்குகள் 1.9 லட்சம் அதிகம் என்றாலும், இவை எல்லாமே திமுகவுக்குச் சென்றதாக எடுத்துக்கொண்டாலும்,  அதைவிடக் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருக்கிறது திமுக.

சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக 2024 தேர்தல் முடிவுகளை அலசினால் அதிமுகவின் வாக்குகள் பெருமளவில் பாரதிய ஜனதா கட்சியைவிடவும் திமுகவுக்கே சென்றிருக்கின்றன என்றே தெரிகிறது.

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் 2014-ல் திமுக, காங்கிரஸ், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகள் மூன்றுமாகப் பெற்ற மொத்த வாக்குகள் 48,667, இப்போது திமுக பெற்றிருப்பது 1,14,139 (65 ஆயிரத்துக்கும் அதிகம்). அதிமுக பெற்ற வாக்குகளில் சுமார் 40 ஆயிரம் குறைந்திருக்கிறது. பாரதிய ஜனதாவுக்கு 5 ஆயிரம் அதிகரித்திருக்கிறது.

சூலூரில் அதிமுகவின் வாக்குகள் சுமார் 27 ஆயிரம் குறைந்திருக்க, திமுகவின் வாக்குகள் சுமார் 50 ஆயிரமும் பா.ஜ.க.வின் வாக்குகள் 9 ஆயிரமும் அதிகரித்திருக்கிறது.

கவுண்டம்பாளையத்தில் 61 ஆயிரம் வாக்குகளை அதிகம் பெற்றிருக்கிறது திமுக அணி. பாரதிய ஜனதாவும் 22 ஆயிரம் வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருக்க அதிமுகவோ இழந்திருப்பது 43 ஆயிரம் வாக்குகள்.

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 2014-ல் 47,591 வாக்குகள் பெற்ற அதிமுக, தற்போது பெற்றிருப்பது 19,044 மட்டுமே. பா.ஜ.க.வின் வாக்குகளோ 48,930-லிருந்து சுமார் 5 ஆயிரம் வாக்குகளே (53,579) அதிகரித்திருக்கிறது. ஆனால், திமுகவோ சுமார் 20 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறது.

கோவை வடக்கு தொகுதியில் 2014-ல் 62,402 வாக்குகள் பெற்ற அதிமுக தற்போது பெற்றிருப்பது 28,998 மட்டுமே. பா.ஜ.க.வின் வாக்குகளோ 60,384-லிருந்து 11 ஆயிரம் அதிகரித்து 71,174 வாக்குகள் பெற்றிருக்கிறது. ஆனால், திமுகவோ 47 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரமாக 33 ஆயிரம் வாக்குகள் அதிகம் வாங்கியிருக்கிறது.

அண்ணாமலை...
நாட்டுக்கு சரியான நேரத்தில் கிடைத்த சரியான தலைவர் மோடி: சந்திரபாபு நாயுடு புகழாரம்

சிங்காநல்லூரில் அதிமுக 23 ஆயிரம் வாக்குகளை இழக்க பாரதிய ஜனதா 6 ஆயிரம் வாக்குகளையும் திமுக 30 ஆயிரம் வாக்குகளையும் கூடுதலாகப் பெற்றிருக்கின்றன.

சுருங்கச் சொன்னால், இந்த மக்களவைத் தேர்தலில் கோட்டையாகக் கூறப்பட்டுக்கொண்டிருந்த கோவையில் அதிமுக பலத்த அடி விழுந்திருக்கிறது. எதிர்பார்ப்புக்கு மாறாக, அதிமுகவின் பெரும்பாலான வாக்குகள், பாரதிய ஜனதாவுக்குப் பதிலாக, திமுகவைச் சென்றடைந்திருக்கின்றன. பாரதிய ஜனதா கட்சியும் சிறிய அளவிலான பலனைப் பெற்றிருக்கிறது.

கோவையில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. அண்ணாமலையும் வலுவாகவே இருக்கிறார். என்ன செய்யப் போகிறது எம்.ஜி.ஆர். தொடங்கிய, ஜெயலலிதா வழிநடத்திய அதிமுக?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com