இணைந்த கைகள்...
இணைந்த கைகள்...பிடிஐ

சொல்லப் போனால்... கூட்டணியில் வலுப்பெறும் பாரதிய ஜனதா?

தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணியில் முடிவெடுக்கும் அளவில் பாரதிய ஜனதா கட்சி வலிமை பெற்றுவருவது பற்றி...
Published on

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதற்கு ஓராண்டுக்கும் முன்னரே அதிமுகவுடன் கூட்டணியை அறிவித்த பாரதிய ஜனதா கட்சி,  தற்போது பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து வந்து மதுராந்தகத்தில்  பிரமாண்டமான கூட்டத்தை நடத்தித் தேர்தல் பிரசாரத்தையும் முன்னதாகத் தொடங்கியிருக்கிறது.

தமிழ்நாட்டில் பிரசாரத்தைத் தொடக்குவதற்காகப் புறப்படுவதற்கு முன்னரே, “... பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளப் போகிறேன். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது... ’ என சமூக ஊடகத்தில் காரமாகப் பதிவிட்ட பிறகுதான் புறப்பட்டார் மோடி.

உடனே, இதற்கு சமூக ஊடகத்திலேயே எதிர்வினையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலினோ, ‘தேர்தல் வந்தால் மட்டும் தமிழ்நாட்டின் பக்கம் அடிக்கடி வரும் பிரதமர் மோடி அவர்களே, தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய ரூ. 3,458 கோடி கல்வி நிதி எப்போது வரும்?’ என்று தொடங்கிப் பத்து கேள்விகளை எழுப்பியதுடன், ‘தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியையே தரும்’ என்று குறிப்பிட்டார்.

மாலை பிரசாரக் கூட்டத்தில் மோடி, ‘தமிழ்நாட்டில் இரட்டை என்ஜின் அரசு அமையும்’ என்று குறிப்பிட, பதிலுக்கு, ‘டப்பா என்ஜின் அரசு’ என்று குறிப்பிட்டு விமர்சித்தார் முதல்வர் ஸ்டாலின். இதன் தொடர்ச்சியாக, ‘நாலரை ஆண்டுகளில் ஓரடிகூட நகராத என்ஜின்’ என்று திமுக அரசைக் குறிப்பிட்டார் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி.

பிரதமரின் பிரசாரக் கூட்டத்துக்குச் சில நாள்களுக்கு முன்னரே தமிழ்நாடு வந்து முகாமிட்ட மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத்துக்கான  தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியதுடன் மட்டுமின்றி, ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த கட்சித் தலைவர்கள் அனைவரையும் சந்தித்துப் பேசினார். கிட்டத்தட்ட 2026 பேரவைத் தேர்தல் கூட்டணியை அவர் மறு உறுதி செய்ததுடன், அனைவரையும்  பிரதமரின் பிரசார மேடையில் தோன்றச் செய்தார்.

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடனும் பேச்சு நடத்திக் கூட்டணிக்குள் கொண்டுவந்தார் பியூஷ் கோயல்.

பழையவர்களில் மீதி இருப்பது தேமுதிகவும் பன்னீர்செல்வமும். யாரும் பேசவில்லை என்று பிரேமலதாவும், தை மாதம் முடிவதற்குள் முடிவைத் தெரிவிப்பேன் என்று பன்னீர்செல்வமும் குறிப்பிட்டுள்ளனர். புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மட்டும் த.வெ.க.வுடன் அணி சேரலாம் என யூகங்கள்.

‘தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும் தமிழ்நாட்டில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் கூட்டணி செயல்படும்’ என ஏற்கெனவே, கடந்தாண்டு ஏப். 11 ஆம் தேதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தாலும் தற்போது தமிழ்நாட்டின் கூட்டணிக் கட்சித் தலைவர்களை பியூஷ் கோயல்தான் சந்தித்தார்.

இவ்வளவுக்குப் பிறகும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால் அமையப் போவது அதிமுக ஆட்சியா, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியா என்பது மட்டும் இன்னமும்கூட தெளிவாகத் தெரியவில்லை.

ஏனெனில், தொடக்கத்திலிருந்தே, தெரிந்தோ, தெரியாமலோ, பாரதிய ஜனதா கட்சியின் உயர் தலைவர்கள் யாரும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றோ, எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்றோ திட்டவட்டமாகச் சொல்லாமலே இருக்கிறார்கள்.

தற்போதைய வருகையின்போது, காலை உணவுக்கு எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் சென்றிருந்த பியூஷ் கோயல், பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோதுகூட அதிமுக ஆட்சி என்றோ, முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்றோ குறிப்பிடவில்லை.

கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர்கள் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை போன்றோர் மட்டும் எடப்பாடி பழனிசாமியை முதல்வராகக் குறிப்பிடுகின்றனர்.

நேர்காணல் ஒன்றில் ஏற்கெனவே கூட்டணி ஆட்சி பற்றிய கேள்விக்கு ‘யெஸ்’ என ஒற்றைச் சொல்லில் பதிலளித்தார் அமித் ஷா. ஆனால், பழனிசாமியோ தொடர்ந்து, அதிமுகதான் ஆட்சியமைக்கும் என்றே குறிப்பிட்டு வருகிறார்.

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் மேடையில் இருந்த மதுராந்தகம் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியும்கூட - இரண்டு முறை -  ‘தமிழ்நாடு இப்போது பாரதிய ஜனதா – தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை விரும்புகிறது’ என்றும் ‘தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா – தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரட்டை என்ஜின் அரசு அமைவது உறுதியாகிவிட்டது’ என்றும்தான் குறிப்பிட்டிருக்கிறார். அதிமுக ஆட்சி என்று அல்ல!

இதே மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமிதான், சட்டப்பேரவைத் தேர்தலில் 210 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லும்; அதிமுக ஆட்சியமைக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கூட்டணி உடன்பாட்டை முன்னதாகவே எட்டியதைப் போல தேர்தல் பிரசாரத்தையும் முன்னதாகவே தொடங்கிவிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளர் என முன்னதாகவே அறிவிக்குமா? அவரை முன்னிறுத்தி பிரசாரம் செய்யுமா? என்பது பற்றி எதுவும் தெரியவில்லை.

நாட்டில் டபுள் என்ஜின் அரசுகள் இருக்கும் மாநிலங்களில் பெரும்பாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகள்தான் இருக்கின்றன. பிரசாரத்தில் டபுள் என்ஜின் அரசு என்றிருக்கிறார் பிரதமர் மோடி. இங்கே மாநிலத்தில் இருக்கப் போகும் என்ஜின்,  தேசிய ஜனநாயகக் கூட்டணியா? அதிமுகவா?

தமிழ்நாட்டில் அதிமுக உள்பட பிற கட்சிகளைக் கூட்டணிக்குள் கொண்டு வருவதிலும் கூட்டணியை உறுதி செய்வதிலும் மிக வலுவாகச் செயல்படுகிறது;  தங்கள் சொல் பேச்சை அனைத்துத் தலைவர்களும் கேட்கிற அளவுக்குத் திறமாகவும் வெற்றிகரமாகவும் காய்களை பாரதிய ஜனதா கட்சி நகர்த்துகிறது. பிரேமலதா, பன்னீர்செல்வம் விஷயங்கள்கூட அனேகமாகக் கொஞ்சம் விட்டுப் பிடிக்கும் உத்தியாக இருக்கலாம்.

அதிமுகவோ, எடப்பாடி பழனிசாமியோ, டிடிவியோ, பன்னீர்செல்வமோ, தமிழ்நாட்டில், தமிழ்நாட்டு அரசியலில் பாரதிய ஜனதாவின் செல்வாக்கு வலுப்பெற்றிருக்கிறது – அதுவும் கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வர் யார்? என்பதை சஸ்பென்ஸில் வைத்திருக்கும் அளவுக்கு!

மாறாக, இவ்வளவு காலமாக வலுவாகக் காணப்பட்ட ஆளும் திமுக கூட்டணியில் போகாத ஊருக்கு வழிகேட்டுச் சிறப்பானதொரு பட்டிமன்றத்தை நடத்திக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். அடுத்து ஆட்சியமைக்கப் போவது நடிகர் விஜய் என்றே முடிவு செய்துவிட்டவர்களைப் போல காங்கிரஸில் பல தலைவர்கள் எதையாவது  கொளுத்திப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

என்ன காரணத்தினாலோ இன்னமும் கூட்டணி நிலைப்பாடு பற்றி காங்கிரஸ் கட்சியின் உயர் தலைவர்கள் தெளிவுபடுத்தாமலேயே காலத்தைக் கடத்துகிறார்கள். பிகார் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர்? என்ற கேள்விக்கு – தேஜஸ்விதான் என்ற தவிர்க்க முடியாத, வெளிப்படையான உண்மை என்பது நன்றாகவே தெரிந்திருந்தும் – காங்கிரஸ் மழுப்பிக் கொண்டிருந்ததன் பலனாக காங்கிரஸ் மீது கூட்டணிக் கட்சியினரே நம்பிக்கையிழக்கும் நிலையேற்பட்டது. தமிழ்நாட்டிலும் பிகார் மாதிரியில் காங்கிரஸின் கூட்டணிச் செயல்பாடுகள் இழுபட்டுக்கொண்டிருக்குமா?

வழக்கு, விசாரணை, ஜன நாயகன் பட ரிலீஸ் என அலைந்துகொண்டிருக்கும் விஜய்யின் த.வெ.க. என்ன செய்யப் போகிறது? தனித்துப் போட்டியிடுமா? கூட்டணி சேருமா? சேர்ந்தால் யாருடன்? என்றெல்லாமும் இன்னமும் தெளிவு கிடைக்காத நிலையில், காங்கிரஸ் மட்டும் உள்ளதை விட்டுப் பனையூர்ப் பக்கம் பாயப் போகிறதா? என்பதும் தெரியவில்லை.

பிரதமர் நரேந்திர மோடியும்கூட பிரசாரக் கூட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் - திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது என்கிற அளவுக்குக் கடுமையாகத் திமுகவை விமர்சித்திருக்கிறார்.

கட்சி நலன், தமிழ்நாட்டின் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் பிரதமரின் அழைப்பை ஏற்றும் எங்கள் மனதிலிருந்த கோபத்தை விட்டுவிட்டு, 2021-ல் முடியாமல்போன ஆட்சியைத் தமிழகத்தில் இந்த முறை உருவாக்கக் கூட்டணிக்கு வந்திருப்பதாக டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

தினகரனைப் போலவே, திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக ஒன்றிணைந்திருப்பதாக, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் அனைவருமே ஒரே குரலில் பேசுகின்றனர். யார் முதல்வர்? என்றால் இவர்கள் எப்படிப் பேசுவார்கள் என இப்போது கூற முடியாது; என்றாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எதிர்கால முடிவுகளில் பாரதிய ஜனதாவின் குரல்தான்  உரத்து ஒலிக்கும் என்பது மட்டும் கடந்த சில நாள்களாகத் தெளிவாகத் தெரியும் வெள்ளிடை மலை!

இணைந்த கைகள்...
சொல்லப் போனால்... திரைப்படங்களும் வெட்டுக் கத்திகளும்!
Summary

Regarding the BJP gaining strength in decision-making in the electoral alliance in Tamil Nadu...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com