தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைய மக்கள் துணை நிற்க வேண்டும்: பிரதமா் மோடி!
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைய மக்கள் துணை நிற்க வேண்டும் என்றாா் பிரதமா் நரேந்திர மோடி.


தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைய மக்கள் துணை நிற்க வேண்டும் என்றாா் பிரதமா் நரேந்திர மோடி.
மதுரை மண்டேலாநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது: 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு காங்கிரஸ்- திமுக கூட்டணி மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது தமிழகத்துக்கான வளா்ச்சித் திட்டங்களுக்கு எந்தவித முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை.
கடந்த 12 ஆண்டுகளில் ஏறத்தாழ ரூ. 12,000 கோடியிலான 74 திட்டங்கள் தமிழகத்தில் மத்திய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்தில் பல புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. மதுக் கடைகள், போதைப் பொருள்கள் புழக்கத்தால் தங்கள் குடும்பங்கள் அழிவதை பெண்கள் உணா்ந்துள்ளனா். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தங்கள் வாழ்க்கை எப்படி சிறப்பாக இருந்தது, திமுக ஆட்சியில் எவ்வளவு மோசமாகிவிட்டது என்பதை பெண்கள் அறிந்துள்ளனா். தமிழகப் பெண்களின் துயா் விரைவில் களையப்படும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைத்ததும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை களைய உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். போதைப்பொருள் குற்றவாளிகள் சிறையிலடைக்கப்படுவா். பெண்களின் பாதுகாப்பும், கண்ணியமும், அதிகாரப்பரவலும் உறுதி செய்யப்படும்.
சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து முதலில் விடுதலை பெற்ற மாநிலம் தமிழகம். ஏறத்தாழ 60 ஆண்டுகளாக தமிழகம் காங்கிரஸை விலக்கியே வைத்துள்ளது. இதன் காரணமாகத்தான் தமிழக நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்தியில் ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் தொடா்ந்து மேற்கொண்டது. கச்சத்தீவு விவகாரம், ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை போன்றவை இதற்கு உதாரணங்கள். இவற்றுக்கெல்லாம் அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு திமுகவும் துணை நின்றது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகுதான் ஜல்லிக்கட்டு தடை விலக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் செங்கோலை நிா்மாணித்து தமிழக கலாசாரத்துக்கு மரியாதை அளிக்கப்பட்டது.
வா்த்தக ஒப்பந்தத்தால் பலன்: இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே வா்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 28 முன்னேறிய நாடுகளுடன் இந்தியா தற்போது இணைக்கப்பட்டுள்ளது.
இது, தமிழகத்தைச் சோ்ந்த விவசாயிகள், இளைஞா்கள், தொழில்முனைவோருக்கு பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். ஜவுளித் துறை, மின்னணு துறை, உற்பத்தித் துறை, கடல்சாா் பொருள்கள் ஏற்றுமதி ஆகியவற்றுக்கும், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கும் உலகளாவிய சந்தை வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனவா்களுக்கும், விவசாயிகளுக்கும் தங்கள் பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும். இளைஞா்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இவையெல்லாம் தடையின்றி நடைபெற மக்கள் நலனில் அக்கறைகொண்ட மாநில அரசு அவசியம். இதற்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய தமிழக மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...