

பொங்கலுக்கு ஜனநாயகன் இல்லை; பிறகு எப்போது வெளிவரும்? அதுவா, வரும்போது வரும்! ஏனெனில், உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணையே வரும் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுவிட்டது; இடையே, மேல் முறையீடு செய்திருப்பதால், உச்ச நீதிமன்றத்தில் ஒருவேளை ஏதாவது நடக்குமா என்பது பற்றி இப்போதே எதுவும் கூற முடியாது.
ஆனால், சினிமா பாணியிலேயே சொன்னால், பிரச்சினையின் ஒன்லைன், எங்கோ இருக்கிற, யாரோ ஒருவர் அல்லது சிலர் நினைத்தால் எந்தப் படத்துக்கு வேண்டுமானாலும் தண்ணீர் காட்ட முடியும்; தவிக்கவிட முடியும், என்னதான் ஸ்டாராக இருந்தாலும். அவ்வளவுதான்!
பொங்கலுக்கு முன்னதாக ஜன. 9 ஆம் தேதி ஜனநாயகனை வெளியிடத் திட்டம். டிச. 19 ஆம் தேதி படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், திருத்தங்களைப் பட்டியலிட்டு, மாற்றியதும், படத்துக்கு ஒருமனதாக யு/ஏ சான்றிதழ் வழங்கலாம் என டிச.22ஆம் தேதி பரிந்துரைத்துவிட்டனர்.
எல்லா மாற்றங்கள், திருத்தங்களைச் செய்து டிச. 24 ஆம் தேதி மீண்டும் படத்தைச் சமர்ப்பிக்கின்றனர். டிச. 29 ஆம் தேதி யு/ஏ சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டதாகத் தயாரிப்பாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது.
ஆனால், ஒரு வாரம் – 7 நாள்கள் - கழித்து, படம் வெளியாவதற்கு நான்கு நாள்கள் மட்டுமே இருக்கும்போது, திடீரென்று ஜன. 5 ஆம் தேதி, படத்தை மறுபரிசீலனைக் குழுவுக்கு அனுப்புவதெனத் தணிக்கைக் குழுத் தலைவர் முடிவு செய்திருப்பதாகத் திரைப்படத் தணிக்கை வாரியத்தின் மண்டல அலுவலர் சொல்கிறார். தணிக்கைக் குழுவிலுள்ள ஒருவர், படத்தில் பாதுகாப்புப் படையினரைச் சித்திரித்திருப்பது சரியாக இல்லை என்று புகார் செய்தாராம் (பாதுகாப்புப் படையினரைப் புனிதர்களாகக் காட்டினால் புனிதர்கள் என்றும் பொல்லாதவர்களாகக் காட்டினால் பொல்லாதவர்கள் என்றும் மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைத்தால் எவ்வளவு பெரிய அபத்தம்?).
எல்லாம் முடிந்து சான்றிதழை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்ன பிறகு, திடீரென ரிலீஸுக்கு 4 நாள்களே இருக்கும்போது தணிக்கைக் குழு எவ்வாறு யு டர்ன் அடிக்க முடியும்? (மறுபரிசீலனை என்றால் சாதாரணமாக 4 வாரங்கள் வரை ஆகலாம்). இதே கேள்வியைத்தான் ஜன. 9 ஆம் தேதியன்று காலையில், படத்துக்கு யு/ஏ சான்றிதழை வழங்கச் சொல்லி உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆஷாவும் கேட்டிருக்கிறார். ஆனால், உடனுக்குடனே தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்ய, சில மணி நேரங்களில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோரைக் கொண்ட அமர்வு, சான்றிதழ் வழங்கும் ஒற்றை நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதிக்கிறது; அப்படி என்ன அவசரம் என்று கேட்டு, விசாரணையை 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டது. அவ்வளவுதான். இப்போதைக்கு நோ கமிங், பஞ்சாயத்து முடிந்தது.
கட்!
இன்னொரு ஷாட், கொஞ்சம் பழசு.
2023 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில், தவறான தகவல்களைக் கொண்ட கேரளா ஸ்டோரி என்ற ஹிந்தித் திரைப்படம் வெளியானால் பதற்றம் நேரிடும் என எதிர்ப்புத் தெரிவித்து, படம் வெளிவருவதற்கு முன்னரும் பின்னருமாகப் பல நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட எண்ணற்ற மனுக்கள் ஒரேயடியாக நிராகரிக்கப்பட்டன.
படம் வெளியானது. கேரளத்தில் ஒருகால கட்டத்தில் ஹிந்து, கிறிஸ்துவ மதங்களிலிருந்து வெறும் மூன்று பெண்கள் மட்டுமே இஸ்லாமுக்கு மதம் மாற்றப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், 32 ஆயிரம் பெண்கள் இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டுப் பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்கப்பட்டதாக பூதாகரமாகப் படத்தில் சித்திரிக்கப்படுகிறது. ஆனாலும், சர்ச்சைக்குரிய கேரளா ஸ்டோரியைக் கவலைப்படாமல் திரைப்படத் தணிக்கை வாரியம் அனுமதித்தது.
தொடர்ந்து, வழக்கம்போல நீதிமன்றங்களின் கதவுகள் தட்டப்பட்டன. கடைசியாக, ‘படத்தின் தொடக்கத்தில் முற்றிலும் புனையப்பட்ட நிகழ்வுகளைக் கொண்ட கதை என்றும் 32 ஆயிரம் பெண்கள் மதம் மாற்றப்பட்டனர் என்பன போன்ற தகவல்களுக்கு அதிகாரப்பூர்வமான தரவுகள் எதுவுமில்லை என்றும் பொறுப்புத் துறப்பு அறிவிப்பு சேர்த்தால் போதும்’ என்று தீர்ப்பளித்து, சிக்கலான சில மாநிலங்களில் படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது உச்ச நீதிமன்றம்!
தொடர்ந்து, இந்தப் படத்துக்காக சிறந்த இயக்குநராக சுதீப்தோ சென்னுக்கும் விருதும் வழங்கிப் பெருமைப்படுத்தியது இந்திய அரசு.
கட், ஸ்டார்ட்!
ஜனநாயகனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை நடிகர் விஜய் படத்திற்கான அல்லது த.வெ.க. தலைவர் விஜய்க்கு அரசியல் நெருக்கடி தருவதற்கான - பிரச்சினை என்று கருதுவதும் அவருடைய அரசியலை மட்டுமே மையப்படுத்தி அணுகுவதும்கூட சரியானதாக இருக்க முடியாது; கூடவும் கூடாது.
இந்தப் பிரச்சினைக்குத் தொடர்பில்லாவிட்டாலும், மிகத் தெளிவாக, அரசியலையும் தேர்தலையும் ஒதுக்கிவிட்டு, மத்திய அரசையும் திரைப்படத் தணிக்கை வாரியத்தையும் கடுமையாக விமர்சிப்பதாக, ‘அமலாக்கத் துறை, சி.பி.ஐ., வருமான வரித் துறை வரிசையில் திரைப்படத் தணிக்கை வாரியமும் மத்திய அரசின் ஆயுதமாக மாறிவிட்டது; எனது கண்டனங்கள்’ என்று குற்றம் சாட்டியிருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்.
அல்லாமல் நடிகர்கள் சிம்பு, ரவி மோகன், சிபி ராஜ், சாந்தனு, இயக்குநர்கள் அமீர், பா. ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், விஜய் மில்டன், அஜய் ஞானமுத்து, மாரி செல்வராஜ் போன்ற பலரும் தொடர்ந்து கண்டித்துக் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர், நடிகரும் மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் வரை.
பெரிய கொடுமை என்னவென்றால் இந்தப் பிரச்சினையில் இன்னமும்கூட எதிர்வினையாற்றாத ஒரே நபர் த.வெ.க.வின் தலைவரும் ஜனநாயகனுமான நடிகர் விஜய்தான்! இதற்கு முன் வேறு எந்தப் படத்துக்காவது, வேறு யாருக்காவது, சிக்கலான தருணங்களில், விஜய் குரல் கொடுத்திருக்கிறாரா? என்பது பற்றித் தெரியவில்லை.
இந்தியா போன்ற பலவித பண்பாடுகளைக் கொண்ட மக்கள் வசிக்கும் பரந்த நாட்டில் கலைப் படைப்புகளைக் கையாள்வதில்கூட மிகப் பெரிய கவனம் தேவைப்படுகிறது.
தமிழ்நாட்டிலோ, கேரளத்திலோ இருக்கிற ஒரு விஷயத்தை மும்பையிலும் தில்லியிலும் இருக்கிற தணிக்கைக் குழுவினர், ஆய்வு என்றாலும் மறு ஆய்வு என்றாலும், எவ்வாறு புரிந்துகொள்வார்கள்? எவ்வாறு முடிவு எடுப்பார்கள்? எல்லா மண்ணுக்கும் மக்களுக்கும் எவ்வாறு ஒரே மாதிரியான அளவுகோல் இருக்க முடியும்? (தமிழ்நாட்டில் அக்காள் மகளைத் திருமணம் செய்யும் வழக்கம் இருக்கிறது; ஆந்திரத்திலும் சில பகுதிகளில் உண்டு. ஆனால், இந்தியாவில் வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இப்படியொரு திரைக் கதையென்றால் குழம்பிப் போய்விட மாட்டார்கள்?).
சிவகார்த்திகேயன் நடித்து நேற்று, ஜன. 10-ல் வெளிவந்த பராசக்தியில் – 25 திருத்தங்களை / மௌனிப்புகளை / வெட்டுகளைச் செய்திருக்கிறது தணிக்கைக் குழு.
ஹிந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் பற்றியதுதான் கதையே, ஹிந்திக்கு எதிராகப் போராடுகிற ஒருவன், ஹிந்தி அரக்கி என்று சொல்லாமல் சிங்கள அரக்கி என்றா சொல்வான்? அண்ணா பேசாத ஒன்றைப் பேசியதாகக் காட்டினால்தான் தவறு. பேசியதைப் பேசுவதாகக் காட்டினால் தவறாமோ? போராட்டம் என்றால் போஸ்டர்களில் தொடங்கி எங்கே வேண்டுமானாலும் சாணிதான் அடிப்பார்கள்; அந்தக் காலப் பழக்கம் அது. அஞ்சலகப் பலகையில் சாணி பூசக் கூடாதென வெட்டியிருக்கிறார்கள்.
அரசியல்ரீதியான, ஒரு மாநிலத்தின், வெகுமக்களின் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட ஒரு படத்தில் ரொம்ப மெனக்கெட்டு பலவற்றையும் தணிக்கைக் குழுவினர் வெட்டிப் போட்டிருக்கிறார்கள். ஆனால், என்ன பெரிய நகைமுரண் என்றால், பராசக்தி படம் திரைக்கு வரும் முன்னரே வெட்டப்பட்ட காட்சிகளில் பல துண்டுதுண்டாக வெளிவந்து சமூக ஊடகங்களில் கொண்டாடப்படுகின்றன. தணிக்கைக் குழுவின் புண்ணியத்தால் இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு, திரையில் பார்க்கக் கூடாதென தடுக்கப்பட்ட அண்ணாவின் பேச்சும் தீயாகப் பரவுகிறது. ப்ரமோவாக ஒளிபரப்பாகிறது. தேடிப் போய்ப் பார்க்கிறார்கள். கூடவே, அவருடைய பேச்சின் பழைய ஒலிப்பதிவுகளும். ஏனெனில், இப்போது ஒவ்வொருவர் கையிலும் ஆன்ட்ராய்ட் போன் என்றோர் ஆயுதம் இருக்கிறது, இணையமும் இருக்கிறது.
கேரளா ஸ்டோரிக்கு ஒரு நியாயம். பராசக்திக்கு ஒரு நியாயம். ஜனநாயகனுக்கு ஒரு நியாயம்!
பிரிட்டனில் அன்-கட், வெட்டுப்படாத பராசக்திதான் திரையிடப்படும் என்று அறிவித்துவிட்டே திரையிடுகிறார்கள். அமீரக நாடுகளிலும் அப்படித்தான். இன்னும் பல நாடுகளில் இவ்வாறுதான் இருக்கப் போகிறது. இதே படப் பிரதி நிச்சயம் இங்கேயும் கிடைக்கத்தான் செய்யும். மிகவும் உணர்ச்சிவசப்பட்டால் இனி தணிக்கைக் குழு, வீடுவீடாகத் தேடிவந்துதான் தணிக்கை செய்ய வேண்டியிருக்கும்.
அதிவேகமாக மாறிக்கொண்டிருக்கும் செய்யறிவுத் தொழில்நுட்ப உலகத்தில் இந்தத் தணிக்கை வாரியங்களே வேண்டாத ஆணிகளைப் போலதான். கொஞ்சமும் காலத்துக்குப் பொருந்தாதவை. வழக்கொழிய வேண்டியவை என்றாலும் மிகையில்லை.
ஆமாம், கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்... இன்றைக்கு எதை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எங்கிருந்தவாறும் பார்க்கவோ, கேட்கவோ முடியும். இணைய வசதிகொண்ட ஒரு மினிமம் லெவல் செல்போன் போதும். அறியா பிள்ளைகள்கூட நினைத்தால் எதை வேண்டுமானாலும் தேடிப் பார்க்க முடியும், பார்க்கிறார்கள். கவர்ச்சியோ, வன்முறையோ, ஆபாச படங்களோ... என்ன கருமத்தை வேண்டுமானாலும். கூடவே நல்லனவும் இருக்கின்றன.
ஏதோ திரைப்படங்களைப் பார்த்து மட்டும்தான் மக்கள் கெட்டுப் போய்விடுவார்கள், வன்முறையாளர்களாகிவிடுவார்கள் என்பதெல்லாம் அறுதப் பழங்கதை. ஒரு கேள்வியைத் தட்டினால், எந்த மொழியில் என்றாலும் – அதுதான் ஏ.ஐ. நுட்பம் வேறு வந்திருக்கிறதே – ஒவ்வொருவருக்கும் வேண்டுகிற விஷயங்கள் கிடைக்கும், நல்லதோ, கெட்டதோ. அது தேடுகிறவன் பாடு.
ஒரு காலத்தில் தணிக்கைக் குழுவுக்கான தேவை இருந்தது உண்மைதான். சினிமா மட்டுமே பெரிய ஊடகமாக இருந்ததும் மக்களிடையே வினைபுரிந்ததும் உண்மைதான். பழைய பராசக்தியே சாட்சி. ஆனால், இன்று காலம் ரொம்பவும்தான் மாறிப் போய்விட்டது. திரும்பிய பக்கமெல்லாம் செல்போன்கள், யூ டியூப்கள், விடியோக்கள், சகட்டுமேனிக்கு கன்டன்ட்கள். ஒரு முறை இந்த தணிக்கை வாரியத்தினரும் தணிக்கை வாரியங்களைப் பொறுப்பேற்று இயக்குவோரும் அவசியம் ஏதாவது நகர்ப் பேருந்துகளிலோ, பகல்நேர ரயில்களிலோ பயணம் செய்து பார்த்துவிட்டு வந்து முடிவெடுக்க வேண்டும் – ஊர் உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறதெனத் தெரிந்துகொள்ளலாம்.
ஒரேயொரு திரைப்படத்தில் தணிக்கை வாரியம் பெரு முயற்சியெடுத்துத் தீயை அணைத்து நீதியைப் பரப்பிவிட முடியும் என்றால் நல்ல சமுதாயத்தை உருவாக்குவதுதான் எவ்வளவு எளிதான விஷயம்? (ஒரேயொரு விஷயம் மட்டும் மிச்சமிருக்கிறது – பொது இடங்களில் திரையிடும்போது யாரை, எந்த வயது வரை அனுமதிப்பது என்று முடிவு செய்வது, அதற்காக வேண்டுமானால் ஒரு சான்றை வாரியம் போன்ற அமைப்பு வழங்க வேண்டியிருக்கலாம்).
இவற்றையெல்லாம் விட்டுவிட்டுக் கையில் குச்சியுடன் எல்கேஜி, யுகேஜி பயிலும் சின்னக் குழந்தைகளுக்குப் பாடம் எடுப்பதைப் போல, கத்தரிக் கோலுடன் சினிமாக்களுக்கும் மக்களுக்கும் பாடம் எடுக்கத் தணிக்கை வாரியங்கள் முனைவதெல்லாம் அவலை நினைத்து உரலை இடிப்பதைப் போலதான்.
சரி... என்னதான் முடிவு?
ஆள் அல்லது நிறுவனங்கள் வேறுபாடின்றித் திரைப்படங்களுக்குத் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்கு, படத்தின் வெளியீட்டுத் தேதிக்கு முன், இரு தரப்புகளும் ஏற்றுக்கொள்ளத் தக்க வகையில், இத்தனை நாள்கள் அல்லது மாதங்கள் முன்னரே முழுப் படத்தையும் முடித்துத் தணிக்கை வாரியத்திடம் அளிக்க வேண்டும் எனத் தெளிவாக வரையறுத்துவிடலாம்.
தணிக்கைக்கு ஒப்படைக்கப்பட்ட நாளிலிருந்து இத்தனை நாள்கள் அல்லது இத்தனை மாதங்களுக்குள் திரைப்படத்துக்கான தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படும் என்பதை தணிக்கை வாரியமும் உறுதி செய்ய வேண்டும்.
பிறகு ரொம்ப ரொம்ப முக்கியமாக, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நினைத்தவற்றையெல்லாம், கற்கால நினைப்பிலேயே – சட்டாம்பிள்ளை பாணியில் – படத்திலிருந்து வெட்டியெறிய வாரியம் முனைதல் கூடாது. பரஸ்பரம் இரு தரப்புமாகப் பேசி வேண்டுமானால் முடிவுக்கு வரலாம் (நடிகைகள் அணிந்திருக்கும் ஆடையில் உடல் வேர்த்து ஈரம் தெரிந்தால் ஆபாசம் எனக் கருதப்பட்டுப் படப்பிடிப்பை நிறுத்தி உடை மாற்றிய காலமும் இருந்திருக்கிறது. ஆனால், இப்போது, ஒரு குத்துப்பாட்டுக்கு மட்டும் நடிகைக்கு சம்பளம் ரூ. 6 கோடி!).
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு படம் என்றால் அது நாயக நடிகர் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; நடிகர்கள், நடிகைகளையெல்லாம் தாண்டி நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இந்த வணிகத்தில் பல நூறு கோடிகள் புரள்கின்றன. மக்களின், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் இருக்கிறது.
நூறு ஆண்டுகள் முன்னே செல்லப் போவதாகச் சொல்லிக்கொண்டு இன்னமும் பல விஷயங்களில் நூறு ஆண்டுகள் பின்னால் இருந்துகொண்டிருக்கும் நம்முடைய நிலைமையில் நிச்சயம் திரைப்படத் தணிக்கை வாரியத்தைக் கலைத்து விடுவதெல்லாம் இப்போதைக்கு எளிதில் நடக்கக் கூடியதல்ல. ஆனால், முயற்சி செய்தால் ஒருவேளை எல்லாருமாகச் சேர்ந்து வாரியத்துக்கு ஒரு மணி கட்டி விடலாம்!
ஒரு புலம்பல் - ஒரு வழக்கில் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி ஒன்றைச் சொல்கிறார்; அதே விஷயத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வேறொரு நீதிபதி இன்னொரு கருத்தைச் சொல்கிறார். தில்லிக்குப் போனால், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் வேறு மாதிரியாக இன்னொரு தீர்ப்பைச் சொல்கிறார்கள்.
இன்னொரு வழக்கில் ஒரு நீதிபதி ஒன்றைச் சொல்கிறார். இன்னொருவர் மாற்றிச் சொல்கிறார். மேல் முறையீடு செய்தால் வேறு மாதிரி புரட்டிப் போடுகிறார்கள்.
ஒரே நீதிமன்ற வளாகத்திற்குள் காலையில் ஒரு நீதிபதி ஒரு தீர்ப்பைச் சொல்கிறார்; அதே நாள் பிற்பகலில் வேறு இரண்டு நீதிபதிகள் சேர்ந்து வேறொரு தீர்ப்பைச் சொல்கிறார்கள்.
இருப்பதென்னவோ ஒரே சட்டம்தான். அப்படியென்றால், உண்மையிலேயே யார் சொல்வதைத்தான் நீதியெனக் கொள்வது?
ஒரு டவுட் - கரூர் த.வெ.க. பிரசாரக் கூட்ட நெரிசல் பலி தொடர்பான விசாரணைக்காக 12 ஆம் தேதி தில்லியில் மத்தியப் புலனாய்வுக் குழு (சிபிஐ) அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தலைவர் விஜய் அழைக்கப்பட்டிருப்பதற்கும் ‘ஜனநாயக’ தாக்குதலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.