

கள்ளச் சாராயம் குடித்துச் சாவார்கள், கிருமிநாசினி குடித்து சாவார்கள், இருமல் மருந்து குடித்துகூட சாவார்கள், வெறும் தண்ணீரைக் குடித்துச் சாவார்களா? சாவார்கள், செத்துக் கொண்டிருக்கிறார்கள், மத்தியப் பிரதேசத்திலுள்ள இந்தூர் மாநகரில்!
சும்மா சாதாரணமான நகரம் அல்ல, இந்தூர். நாட்டிலேயே மிகவும் தூய்மையான நகரம் எனத் தொடர்ந்து எட்டாவது முறையாகத் தெரிவு செய்யப்பட்ட நகரம் இது. இதற்கான விருதைக் கடந்த ஜூலை மாதத்தில் வழங்கிச் சிறப்பித்தவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இனிமேல் இவற்றையெல்லாம் யார் தெரிவு செய்கிறார்கள், எப்படித் தெரிவு செய்கிறார்கள் என்பதை விசாரித்துக் குறித்துவைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தூரில் இதுவரையிலும் அசுத்த தண்ணீரைக் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 என்றே அரசுத் தரப்பில் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. 11 ஆக இருக்கலாம். ஆனால், 14 என்று தகவலறிந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இறந்த 14 பேரின் படங்களை நாளிதழொன்று வெளியிட்டிருக்கிறது. 15 பேர் என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆளாளுக்கு ஒரு எண்ணிக்கை. ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கை உண்மையாகவே எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது. இன்னும் அதிகமாகத்தான் இருக்கும் என்கிறார்கள் (கும்பமேளா கதைதான் போல!).
ஆனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 272 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 32 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்றனர். எல்லாருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு, கடும் காய்ச்சல்.
இவற்றில் எதுவும் திடீரென எங்கோ, யாரோ தண்ணீரில் விஷத்தைக் கலந்துவிட்டதால் ஏற்பட்டுவிடவில்லை. மாதக்கணக்கில் விஷமான தண்ணீர் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறது. தாங்கிக்கொள்ள முடியாத ஒரு நிலை வந்தபோது மக்கள் நோயுற்று விழத் தொடங்கிவிட்டனர்.
இந்தூரில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதி, நகரின் 11-வது வார்டிலுள்ள பகீரதபுரம். ஏறத்தாழ 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பெரும்பாலும் ஏழை, எளிய மக்கள்தான்.
இரண்டரை மாதங்களுக்கு முன்னரே, அக்டோபர் 15 ஆம் தேதி, மேயருடைய உதவி எண்ணுக்கு அழைத்து முதல் புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 11-வது வார்டில் கோயில் அருகேயுள்ள கிணற்றுத் தண்ணீரில் நாற்றமடிக்கிறது. ஆழ்துளைக் கிணற்றுத் தண்ணீரில் கழிவு நீர் கலந்திருக்கிறது என்று தினேஷ் பாரதி வர்மா என்பவர் எச்சரித்திருக்கிறார்.
தொடர்ந்து, நவம்பர் மாத மத்தியில் அசுத்தமான தண்ணீரில் அமிலம் மாதிரி ஏதோ கலந்திருக்கிறது என்று ஷிவானி தாக்லே என்பவர் புகார் செய்திருக்கிறார். டிசம்பர் மாதத்தில் மேலும் மேலும் இதேபோன்ற புகார்கள் குவியத் தொடங்கியிருக்கின்றன. மூன்றாவது வாரத்தில் நர்மதை குடிநீர் வழங்கல் திட்ட தண்ணீரில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகப் புகார் செய்திருக்கின்றனர்.
ஊஹும். எதுவும் நடக்கவில்லை. டிச. 28 ஆம் தேதி 11-வது வார்டில் 90 சதவிகிதம் மக்கள் வாந்தி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற இறுதியான அபயக் குரல் எழுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், இவ்வளவுக்கும் செவிமடுக்காத அரசும் நிர்வாகமும் அடுத்தடுத்த நாள்களில் மருத்துவமனையில் மக்கள் அனுமதிக்கப்பட்டு மரணங்கள் நேரிடவும் விழித்தெழுந்துகொண்டன.
காவல்துறை பாதுகாப்பு சாவடியொன்றில் கட்டப்பட்ட கழிப்பறையின் கழிவுநீர் கசிந்து, கழிப்பறைக்குக் கீழே சென்றுகொண்டிருந்த பிரதான குடிநீர்க் குழாய்க்குள் தண்ணீரில் கலந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். தனியாக செப்டிக் டேங்க் கட்டிக் கழிவுநீரை விடுவதற்குப் பதிலாக, குழாய் செல்லும் பாதைக்கு மேலேயே பள்ளத்தைத் தோண்டிக் கழிவை நிறுத்தியிருக்கிறார்கள் என்று இந்தூர் மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குழாய்கள் எல்லாம் மோசமாகிவிட்டன. பகீரதபுரத்தில் குடிநீர்க் குழாய்களை மாற்ற வேண்டும் என இரு ஆண்டுகளுக்கு முன்னரே மாநகராட்சிக்கு எழுதியிருப்பதாக பா.ஜ.க. கவுன்சிலர் கமல் வாகேலா குறிப்பிட்டிருக்கிறார். தொடர்ந்து வலியுறுத்தியதால் நவ. 2024-ல் இதற்கான கோப்பு உருவாக்கப்பட்டதாகவும் ஆனால், அதிகாரிகள் யாரும் கேட்பதில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து, சாவுச் செய்திகள் வெளிவந்து நாடே பரபரக்கவும் அரசும் மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை தொடங்கியிருக்கிறது. ஒருவரைப் பணிநீக்கம் செய்துள்ளனர். இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தவறு இழைத்தவர்கள் யாரும் தப்ப முடியாது என்று வழக்கம் போல அரசு எச்சரித்திருக்கிறது.
அபயான்!
ஆறு மாதக் கைக் குழந்தை. தம்பதியருக்கு மணமாகிப் பத்தாண்டுகள் கழித்து, ஏராளமான சிகிச்சைகள், இறை வேண்டுதல்களுக்குப் பிறகு பிறந்தவன். அபயான் வருகைக்காகக் குடும்பமே மகிழ்ச்சி கொண்டாடியது.
மருத்துவ காரணங்களால் இவனுக்குத் தாய்ப்பால் புகட்ட முடியாது என்பதால், பசுப் பாலில் தண்ணீர் கலந்து புகட்ட மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். கொதிக்கவைத்து, ஆறவைத்த தண்ணீரைத்தான் கலந்திருக்க வேண்டும். என்ன நடந்ததோ, குழாய்த் தண்ணீர் கலந்த பாலைப் புகட்டியிருக்கிறார்கள். தண்ணீரைக் கொதிக்க வைத்தே கலந்திருந்தாலும்கூட சில நீர்வழி பாக்டீரியாக்கள் அழிவதில்லை என்கிறார்கள்.
குழந்தைக்குத் திடீரென வயிற்றுப் போக்கு, காய்ச்சல். மருத்துவரிடம் காட்டுகிறார்கள். மருந்து தருகிறார். சாதாரணமான காய்ச்சல் என்று நினைக்கிறார்கள். நிலைமையும் கொஞ்சம் முன்னேறியதாகக்கூட தோன்றியது. இரண்டு நாள்கள் கழித்து, திடீரென எல்லாமும் அதிகமாகி இறந்துவிட்டான் அபயான்.
ஒரு நாளும் இனி அவன் திரும்பி வரப் போவதில்லை. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வாராது வந்த மாமணி போல அபயானைப் பெற்றெடுத்த தாய், சாதனா சாகு என்ற தனியார் பள்ளி ஆசிரியை இப்போது கதறிக் கொண்டிருக்கிறார்.
ஒரு வீட்டில் பெண் மரணம். மகன், மருமகள், பேரன் எல்லாரும் மருத்துவமனையில். இப்படி, பகீரதபுரத்தில் நேரிட்ட ஒவ்வொரு சாவுக்குப் பின்னாலும் பல்வேறு விதமான துயரக் கதைகள் இருக்கின்றன.
குடிநீரால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மருத்துவமனைகளுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்வையிட்டார். அனைவருக்கும் சிகிச்சை இலவசம் என்றும் அறிவித்துவிட்டார். அடுத்து, அவரவர் தலையெழுத்துப்படி என்றிருக்க வேண்டியதுதான். கோபமுற்ற பலர், அரசு வழங்குவதாக அறிவித்த ரூ. 2 லட்சத்தைப் பெற மறுத்துவிட்டிருக்கின்றனர்.
‘இந்தூரில் குடிநீர் அல்ல, விஷம்தான் விநியோகிக்கப்பட்டிருக்கிறது, நிர்வாகமோ ஆழந்த கும்பகர்ண நித்திரையில் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் துயரம், மக்கள் நிர்கதியாக இருக்கும்போது ஆணவமான அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் பாரதிய ஜனதா தலைவர்கள். அசுத்தம், துர்நாற்றம் பற்றி மீண்டும் மீண்டும் மக்கள் புகார் செய்திருக்கிறார்கள். ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. யார் பொறுப்பு? சுத்தமான தண்ணீர் என்பது சகாயம் செய்வதல்ல; வாழ்வதற்கான உரிமை.
‘மத்தியப் பிரதேசம் இப்போது நிர்வாகச் சீர்கேடுகள் மையங்கொண்ட பகுதியாகிவிட்டது. இருமல் மருந்தைக் குடித்து சாவுகள், குழந்தைகளின் மரணத்துக்குக் காரணமான எலிகள் உலவும் அரசு மருத்துவமனைகள். இப்போது நாற்றமெடுக்கும் கழிவுநீர் கலந்த தண்ணீர்’ எனக் கடுமையாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
“இந்தூரில் அசுத்தத் தண்ணீரைக் குடித்ததால் 10 பேர் உயிரிழக்க நேரிட்டிருப்பது மகா பாவம், இதற்கு அரசு பிராயசித்தம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் இதற்குப் பொறுப்பானவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
“நம் மாநிலத்தையும் அரசையும் ஒட்டுமொத்த முறைமையையும் இந்த சம்பவம், வெட்கப்படவும் அவமானப்படவும் செய்திருக்கிறது. அசிங்கத்தாலும், அருவருப்பாலும், உயிர்களைக் குடித்த விஷமான தண்ணீராலும் தூய்மையான நகரம் என்ற இந்தூரின் பெருமிதமும் கொண்டாட்டமும் அம்பலப்பட்டிருக்கிறது.
“இழப்பீடாக அரசு தரும் ரூ. 2 லட்சம், உயிரின் விலையாக இருக்க முடியாது. ஏனெனில் இந்தக் குடும்பங்கள் இனி வாழ்நாளெல்லாம் துயரத்தில் தவிக்கப் போகின்றன” என்றெல்லாம் கடுமையாகச் சாடியிருப்பது அதே ராகுல் காந்தி அல்ல, பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரும் இதே மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான உமாபாரதி!
மேலும், ‘சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை என்றால் எதற்காகப் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும்? விலக வேண்டியதுதானே. நீங்கள் மட்டும் ஏன் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விலைக்கு வாங்கிக் குடிக்க வேண்டும்?’ என்று இந்தூர் மாநகராட்சி மேயர் புஷ்யமித்ரா பார்கவாவைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் உமாபாரதி.
2015-ல் நாடு முழுவதும் 100 நகர்களைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்தப்பட்ட பொலிவுறு நகரங்கள் திட்டத்தில் மிகவும் முக்கியமான நகரம் இந்தூர். இந்த நகர்களில் எல்லாமும் 2025, மார்ச்சில் திட்டம் முடிந்திருக்க வேண்டும். பத்தாண்டுகளுக்குப் பிறகு இன்னமும் பல நகரங்களில் வேலைகள் நடந்ததா, முடிந்ததா என்பது கேள்விக்குறி. வெறும் 18 நகரங்கள் மட்டுமே முழுமையாகப் ‘பொலிவுறச் செய்யப்பட்டிருப்பதாக’க் கூறப்படுகிறது.
குடிநீர், சுகாதார வசதிகளை உள்ளடக்கிய ரூ. 1.64 லட்சம் கோடி செலவிலான மத்திய அரசின் இந்தத் திட்டத்தில், மத்திய அரசின் பங்கு என்னவோ ரூ. 47,652 கோடிதான். மீதியெல்லாம் மாநில அரசுகளிடமிருந்து மட்டுமின்றி வெவ்வேறு வகைகளிலும் திரட்டப்பட்டது. இதுவரை 1.51 லட்சம் கோடி செலவிடப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பொலிவுறு’ நம்பர் ஒன் தூய்மை நகரான இந்தூரில்தான் இப்போது தண்ணீரைக் குடித்துப் பத்துக்கும் மேற்பட்டோர் பலி!
1989-லிருந்து 10 முறை தொடர்ந்து இந்தூர் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சிதான் வெற்றி பெற்று வருகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் மட்டுமல்ல, மாநகராட்சியிலும்கூட பாரதிய ஜனதா கட்சிதான் அதிகாரத்தில்.
இதே மத்தியப் பிரதேசத்தில்தான் சில மாதங்களுக்கு முன் தரமற்ற இருமல் மருந்து புகட்டப்பட்டதன் காரணமாக 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அபயானைக் கடவுள் கொடுத்தார். இப்போது அவரே எடுத்துக்கொண்டார் என்றிருக்கிறார் சாதனா சாகு. இதுதான் நம் நாட்டில் அரசியல் தலைவர்களுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் கிடைக்கப் பெற்றிருக்கும் வரம். அந்தக் குழந்தையைக் கடவுள் எடுத்துக்கொள்ளவில்லை; இந்தூர் கார்ப்பரேஷன்காரர்கள்தான் கொன்று குழிதோண்டிப் புதைத்துவிட்டனர் என்று அந்தப் பெண் கோபப்படவில்லை. மாறாக, கடவுளைப் பழித்து ஆற்றாமையால் அழுது புரண்டுகொண்டிருக்கிறார்.
இந்தூர் குடிதண்ணீர்ப் பலிகளுக்காக இதுவரை யாராவது – அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் - தார்மிகப் பொறுப்பேற்றிருக்கிறார்களா? யாராவது பதவி விலகியிருக்கிறார்களா? தவறிழைத்தவர்கள் தப்ப முடியாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறதே, இதுதொடர்பாக, ஏதேனும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா? இது எந்தவிதமான குற்றத்தில் சேர்க்கப்படும்? யார் குற்றவாளி? எல்லாமும் வெறும் கேள்விகள் மட்டுமே.
கரூரில் நெரிசல் பலியை விசாரிப்பதற்காக மத்தியிலிருந்து நிறைய குழுக்கள் வந்தனவே. இந்தூருக்கும் யாராவது சென்று உள்ளபடியே இறந்தவர்களின் எண்ணிக்கையையும் யார் குற்றவாளி என்பதையும் கண்டறிந்து மக்களுக்குத் தெரிவிக்கலாமே. தவிர, சில நேரங்களில் சின்னச் சின்ன விஷயங்களில்கூட அக்கறை காட்டும் உச்ச நீதிமன்றம், இதைப் பற்றியும் தானே முன்வந்து விசாரிக்கலாமே? (கொடுத்து வைத்தவை தெருநாய்களும் ஜல்லிக்கட்டுக் காளைகளும் – மனிதர்களுக்குக் கிடைக்காத மகிமையையும் கருணையையும் இவற்றால் பெற முடிகிறதே!).
அரசியல்ரீதியாகப் பார்த்தால், இப்படியொரு துயர சம்பவம், தமிழ்நாட்டிலோ, மேற்கு வங்கத்திலோ அல்லது பாரதிய ஜனதா / அல்லது கூட்டணி ஆளாத வேறு எந்தவொரு மாநிலத்திலேனும் நடந்திருந்தால் இப்படித்தான் இருக்குமா, எதிர்வினைகள்?
இதுவொன்றும் இந்தூர் மாநகரத்தின் நிலைமை மட்டுமல்ல; யார் ஆட்சி செய்துகொண்டிருந்தாலும், இன்னும் எந்தெந்த மாநிலங்களிலுள்ள மாநகரங்களில், நகரங்களில் என்ன மாதிரியான நிலைமையோ? கிராம, குக்கிராமங்களைப் பற்றியோ கேட்கவே வேண்டாம். மரணங்கள் நேரும்போது மட்டுமே இவை அம்பலப்படுகின்றன.
சில நேரங்களில் நான்கு வழிச் சாலை, ஆறு வழிச் சாலை, எட்டு வழிச் சாலை என நெடுஞ்சாலைகளில் செல்லும்போது ஏதோ வெளிநாடுகளில் செல்வதைப் போலதான் தோன்றுகிறது. ஆனால், ஊருக்குள் அல்ல, நகருக்கு உள்ளே போனால்தான் நாற்றம் வெளிப்படுகிறது. சாதாரண வாழ்க்கையை வாழ்வதேகூட மிகுந்த சிரமமாகிக் கொண்டிருக்கிறது, எல்லாரும் தண்ணீர் கேன்கள் வாங்க முடியுமா? ஆர்.ஓ.தான் போட முடியுமா?
நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் குடிக்கவும் கழிக்கவும் தட்டுப்பாடின்றித் தண்ணீர் கிடைக்காத வரை / வழங்கப்படாத வரை, இந்தியா எத்தனையாவது பொருளாதாரத்தை எட்டியபோதிலும் எவ்விதப் பயனுமில்லைதானே. சும்மா, சூப்பர் பவராகி மட்டும் என்ன செய்யப் போகிறார்கள்? என்பதாகத்தான் இருக்கும் மக்களின் மனநிலை.
நல்ல காற்று, நல்ல தண்ணீர், இருக்க இடம், உடுக்க உடை, வயிறார உணவு எல்லாமும் கனவு அல்ல, நிஜம் என்றாக வேண்டும் என்பது மட்டும்தான் கடையரிலும் கடையேனின் எதிர்பார்ப்பாக இருக்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.