சொல்லப் போனால்... உன்னாவ்... நீதிதேவன் மயக்கம்?

உன்னாவ் சிறுமி வல்லுறவு வழக்கின் மேல் முறையீட்டில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக...
unnao rape victim
குல்தீப் சிங் செங்கரும் போராட்டமும்... சித்திரிப்பு / விஜய்
Updated on
6 min read

சில குற்றச் செயல்களும் சில கலகங்களும் அவ்வப்போது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளைப் பரவச் செய்வதைப் போலவே, இப்போதெல்லாம் நீதிமன்றங்களில் வெளிவரும் சில தீர்ப்புகளும் சில கருத்துகளும்கூட அதிர்ச்சியளிப்பவையாக இருக்கின்றன.

இந்திய வரலாற்றில் மிகத் தீவிரமாக விவாதிக்கப்பட்ட குற்ற வழக்குகளில் ஒன்றான உன்னாவ் வல்லுறவு வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவருடைய குடும்பத்தின் பெரும் போராட்டத்துக்குப் பின் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறை சென்ற குற்றவாளியான செல்வாக்குள்ள அரசியல் தலைவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

தில்லி உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, நாடு தழுவிய அளவில் சட்டம் பற்றியும் நீதி பற்றியும் மீண்டும் மற்றொரு பெரும் விவாதத்தை எழுப்பியிருக்கிறது.

உன்னாவ் வல்லுறவு வழக்கின் வழி...

2017, ஜூன் 4 ஆம் தேதி, உத்தரப் பிரதேசத்திலுள்ள உன்னாவ்-வைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ.வான குல்தீப் சிங் செங்கரை வேலைக்காக உதவி கேட்டு அணுகுகிறார் இந்தப் பதினாறு வயதுச் சிறுமி. இந்தச் சிறுமியை எம்எல்ஏ வீட்டுக்கு சசி சிங் என்ற பெண் அழைத்துச் செல்கிறார். எம்எல்ஏவால் வல்லுறவு கொள்ளப்பட்டதால் அதிர்ச்சியுற்ற சிறுமியிடம், கண்டிப்பாக வேலை வாங்கித் தருவதாக அவர் உறுதி கூறுகிறார். புகார் செய்யப் போவதாக சிறுமி கூறியபோது, தந்தையையும் 4 வயது தம்பியையும் கொன்றுவிடுவதாக மிரட்டியிருக்கிறார் செங்கர். அச்சத்தால் அமைதி காத்திருக்கிறார் சிறுமி.

2017 ஜூன் 11, ஒரு வாரம் கழித்து, செங்கருடைய ஆள்களான மாக்கி கிராமத்தைச் சேர்ந்த சுபம் சிங், பிரிஜேஷ் யாதவ், அவத் நாராயணன் என்ற மூவரும் அந்தச் சிறுமியைக் கடத்திச் சென்று, செங்கருக்கு எதிராகப் புகார் செய்யக் கூடாது என்று மிரட்டியுள்ளனர். பல நாள்களாக அந்தச் சிறுமியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கூட்டாகப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளனர். எதிர்த்துப் போராடக் கூடாது என்பதற்காக அந்தச் சிறுமிக்கு மயக்க மருந்தைக் கொடுத்திருக்கின்றனர். கூடவே, சிறுமியை இடம் மாற்றிக் கொண்டும் இருந்திருக்கின்றனர். இதனிடையே, சிறுமி கடத்தப்பட்டதாகத் தாய் புகார் கொடுக்கச் சென்றபோது, அதை வெறுமனே காணாமல்போன வழக்காகக் காவல்துறை கையாண்டிருக்கிறது. கடத்திச் சென்றவர்கள் இந்தச் சிறுமியைச் சட்ட விரோத பாலியல் தொழில் கும்பலிடம் ரூ. 60 ஆயிரத்துக்கு விற்கவும் பேசியுள்ளனர். ஆனால், காவல்துறை தேடுவதை அறிந்து திட்டத்தைக் கைவிட்டுவிட்டனராம்.

2017 ஜூன் 20, பாதிக்கப்பட்ட சிறுமியும் அவருடைய தந்தையும் உன்னாவ்  காவல்துறையை அணுகி புகார் செய்தனர். சிங், யாதவ், நாராயணன் ஆகியோர் மீது வல்லுறவு, ஆள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

2017 ஜூன் 22, இரு நாள்களுக்குப் பிறகுதான் காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் கூடுதல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது. வல்லுறவை உறுதி செய்வதற்கான சிறுமியின் மருத்துவப் பரிசோதனையையும் தாமதப்படுத்தியிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து, அத்தை, மாமா வீட்டில் இருக்க தில்லிக்குச் சென்ற சிறுமி, அவர்களிடம் செங்கரால் தாம் பாதிக்கப்பட்டது பற்றித் தெரிவித்துள்ளார்.

2017 ஆகஸ்ட், இதைக் கேள்விப்பட்ட சிறுமியின் தந்தை, தாம் மதிக்கிற ஒரு பெரிய மனிதர் இத்தகைய அடாத செயலைச் செய்திருக்கிறாரே எனப் பெரும் அதிர்ச்சியடைகிறார். இதுபற்றிப் புகார் செய்ய மகளுடன் உன்னாவ் காவல்நிலையம் செல்கிறார். ஆனால், எம்எல்ஏ செங்கர் பெயரைக் குறிப்பிடாமல் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது. ஒரு மாதம் கழித்துக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காவல்துறையினர், எம்எல்ஏ செங்கர் பெயரைக் குறிப்பிடவில்லை.

2018, பிப்ரவரி, இதுவரையிலும் எம்எல்ஏ செங்கருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுடன், வழக்கில் அவருடைய பெயரைச் சேர்ப்பதில் காவல்துறை மிகவும் தயக்கம் காட்டுவதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தை அணுகுகிறார் சிறுமி.

2018, ஏப்ரல் 3, எம்எல்ஏ செங்கருடைய ஆள்கள், சிறுமியின் தந்தையை மிரட்டியதுடன் மிக மோசமாகத் தாக்கியுள்ளனர். அவருக்கு எதிராக புகார் ஒன்றையும் செய்துள்ளனர். செங்கருடைய சகோதரர் அதுல் செங்கர் தூண்டுதலில்தான் தன் தந்தை தாக்கப்பட்டதாக சிறுமி குற்றம் சாட்டினார். 4 பேர் மீது புகாரும்  செய்தனர்.

2018, ஏப்ரல் 5, மிக மோசமாகத் தாக்கியவர்களே கொடுத்த புகாரின் பேரில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டார். ஆயுதச் சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கைது செய்யப்பட்டபோதுகூட அவர் காயங்களுடன்தான் இருந்தார். போலீஸ் காவலில் இருந்தபோது அவர் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

2018, ஏப்ரல் 8, தந்தையின் காவல், தொடர் சித்திரவதை, புகாரைத் திரும்பப் பெற நெருக்குதல் காரணமாக விரக்தியுற்ற சிறுமி, உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத் இல்லத்தின் முன் தீக்குளித்து உயிர்விட முயன்றார். அப்போதுதான் இந்த வழக்கின் மீது ஊடகங்களின் கவனம் திரும்பியது. இதனிடையே, காவலில் தன்னுடைய கணவர் கொல்லப்படலாம் எனத் தாம் அஞ்சுவதாகத் தெரிவித்து முதல்வர் ஆதித்யநாத்துக்கு சிறுமியின் தாய் கடிதம் எழுதினார்.

2018, ஏப்ரல் 9, சந்தேகத்துக்குரிய மர்மமான சூழ்நிலையில் போலீஸ்  காவலிலேயே சிறுமியின் தந்தை உயிரிழந்தார். சிறைக் கலவரத்தில் அவர் காயமுற்றதாகவும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது; அதிர்ச்சி மற்றும் ரத்தம் விஷமானதால் அவர் உயிரிழந்ததாக உடற்கூராய்வு அறிக்கை தெரிவித்தது. உடலில் 14 இடங்களில் மிக மோசமான காயங்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டது. காவலில் அதுல் செங்கரின் ஆள்களால்தான் தன் தந்தை அடித்துக் கொல்லப்பட்டதாக சிறுமி குற்றம் சாட்டினார்.

2018 ஏப்ரல் 10, மாநிலக் காவல்துறைத் தலைவர் அறிவுறுத்தலின் பேரில், உன்னாவ்வில் முதன்மைக் குற்றவாளியான எம்எல்ஏ செங்கரின் சகோதரர் அதுல் செங்கரை குற்றப் பிரிவு காவல்துறை கைது செய்தது. சில மணி நேரங்களில் சிறுமி வல்லுறவு வழக்கு மட்டுமின்றி, காவலில் அவருடைய தந்தையின் சாவு பற்றியும் விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவையும் அறிவித்தார் கூடுதல் டிஜிபி. சிறுமியின் தந்தையைத் தாக்கியதாகக் கூறப்பட்ட நால்வரும் கைது செய்யப்பட்டனர். மாக்கி காவல்நிலைய அலுவலர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

2018 ஏப்ரல் 11, அரசுக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கை தந்ததுடன், அதுல் ஆள்களால் தாம் தாக்கப்பட்டது பற்றிச் சிறுமியின் தந்தை பேசும் விடியோ பதிவையும் அளித்தனர். ஆனால், தாம் குற்றமற்றவர் என்பதாக  அறிவித்துக்கொண்டு வலம் வந்துகொண்டிருந்தார் எம்எல்ஏ செங்கர். பொதுநல வழக்கொன்றை விசாரித்து, வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு அலாகாபாத் உயர் நீதிமன்றம் மாற்றும் வரை செங்கருடைய அதிரடிகள் கொஞ்சமும் குறையவில்லை.

2018 ஏப்ரல் 12, இந்த வழக்கு சுற்றிவிடப்பட்டதனைத்தும் அம்பலப்பட்ட நிலையில், மத்தியப் புலனாய்வுக் குழுவிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. பாரதிய ஜனதா எம்எல்ஏவான குல்தீப் சிங் செங்கருக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமை உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. போக்சோ பிரிவும் சேர்க்கப்பட்டது.

2018 ஏப்ரல் 13, குல்தீப் சிங் செங்கரைப் பிடித்து விசாரணை நடத்தியது சிபிஐ. உடனடியாக அவரைக் கைது செய்ய அலாகாபாத் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. காவல்துறையின் செயல்பாடுகளைக் கண்டித்ததுடன், மே 2-க்குள் விசாரணை அறிக்கையை அளிக்கும்படியும் உத்தரவிட்டது. அன்று மாலை செங்கரை சிபிஐ கைது செய்தது. 7 நாள் காவலில் எடுத்தது சிபிஐ.

2018 ஏப்ரல் 15, வேலை வாங்கித் தருவதாக செங்கரின் வீட்டுக்குச் சிறுமியை அழைத்துச் சென்ற சசி சிங் என்ற பெண் கைது செய்யப்பட்டார்.

2018, ஆகஸ்ட் 27, சிறுமியின் தந்தை காவலில் இறந்த வழக்கில் முக்கிய  சாட்சியான யூனுஸ் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆனால், உடல் கூறாய்வு செய்யாமலே அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சாவுக்கு செங்கர்தான் பொறுப்பு என்று சிறுமியின் மாமா குற்றம் சாட்டினார்.

2019 ஜூலை 28, வழக்கறிஞர் மற்றும் குடும்பத்தினருடன் சிறுமி சென்ற காரின் மீது அடையாளம் தெரியாத லாரி மோதியது. சிறுமியின் இரு அத்தைகளும் கொல்லப்பட்டனர். சிறுமியும் வழக்கறிஞரும் படுகாயமுற்றனர். இதைத் தொடர்ந்து, விசாரணை இடம் மாற்றப்பட்டது.

2019 டிசம்பர் 16, இந்த வழக்கில் விசாரணை முடிவில், வல்லுறவு உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ்  குல்தீப் சிங் செங்கர் குற்றவாளி என மாவட்ட நீதிமன்றம் அறிவித்தது. சந்தேகத்தின் பலனாக சசி சிங் விடுதலை செய்யப்பட்டார்.

2019 டிசம்பர் 20, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் (இதனிடையே, பாரதிய ஜனதாவிலிருந்து நீக்கப்பட்டுவிட்ட) எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கருக்கு ஆயுள் முடியும் வரையில் சிறைத் தண்டனையும் ரூ. 25 லட்சம் தண்டமும் விதித்து தில்லி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மக்கள் பிரதிநிதியான செங்கர், தனது ஒழுங்கீனமான நடத்தையால் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைத்துவிட்டார். அவர் இழைத்த குற்றங்களைத் தீவிரமற்றதாகக் கருத எந்தக் காரணமும் இல்லை. எனவே, இந்திய தண்டனையியல் சட்டம் 376 (2) பிரிவின்படி ஆயுள் முடியும் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பில் நீதிபதி தர்மேஷ் சர்மா குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டார் செங்கர்.

இவையெல்லாமும் வழக்கு விசாரணைப் போக்கில் முக்கியமான சில கட்டங்களே. வழக்கு விசாரணை, லக்னௌ நீதிமன்றத்திலிருந்து தில்லி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றம், கட்சியிலிருந்து செங்கர் நீக்கம் போன்றவை எல்லாமும் நடந்தன.

மட்டுமின்றி, இந்தத் தீர்ப்பைப் பெறுவதற்காகப் பாதிக்கப்பட்ட சிறுமியும் அவருடைய குடும்பத்தினரும் குடும்பத் தலைவரையே இழந்ததுடன் பட்ட கஷ்டங்களும் நடத்திய போராட்டங்களும் எத்தனை பக்கங்கள் என்றாலும் எழுதித் தீராதவை.

ஆனால், இவ்வளவுக்கும் பிறகு எல்லாவற்றையும் கலைத்துப் போட்டிருக்கிறது செங்கரின் தண்டனையை நிறுத்திவைக்கும் தற்போதைய தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பு.

மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக செங்கர் செய்த மேல் முறையீட்டின் மீது சில நாள்கள் முன், டிச. 23, தீர்ப்பளித்துள்ள தில்லி உயர் நீதிமன்றம், இந்த மனுவின் மீது இறுதி முடிவெடுக்கப்படும் வரை ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்தும் அவருக்கு பிணையில் விடுதலை அளித்தும் உத்தரவிட்டுள்ளது (சிறுமியின் தந்தை கொல்லப்பட்ட வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதில் பிணை கிடைக்காததால் செங்கர், இன்னமும் சிறையிலிருந்து வெளியே வரவில்லை).

இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 21-ன் கீழ், மக்கள் சேவகர் (பப்ளிக் செர்வன்ட்) என்ற வகையில் எம்எல்ஏ என்ற தகுதி வராது என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. குற்றமிழைத்தவர் அதிகார நிலையில் அல்லது நம்பிக்கைக்குரிய இடத்தில் இருப்பவராக இருக்கும்பட்சத்தில் தண்டனையை அதிகரித்து வழங்க வகை செய்வதைக் கருதி, ஐபிசி பிரிவு 376 (2) மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகள் 5 (சி) மற்றும் 6 பிரிவுகளின் கீழ் செங்கருக்கு தில்லி மாவட்ட நீதிமன்றம் ஆயுள் கால சிறைத் தண்டனை விதித்திருந்தது.

மேல் முறையீட்டு விசாரணையின்போது, ஐபிசி பிரிவு 21-ன்படி, மக்கள் சேவகர் என்ற  வரையறையில் எம்எல்ஏ வர மாட்டார் என்று முந்தைய வழக்கொன்றில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை சிபிஐ ஒப்புக்கொண்டது. இதனடிப்படையில், செங்கர், மக்கள் சேவகர் அல்லர் என்ற உயர் நீதிமன்றம், அவருக்கு எதிராக போக்சோ சட்டப் பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுத் தீவிர தண்டனை விதிக்கப்பட்டதை நிராகரித்துள்ளது.

விவாதத்துக்குரிய இந்தத் தீர்ப்புதான், மக்களிடையே பெரிய அளவில் எரிச்சலையும் அதிருப்தியையும் விடை தெரியாத கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.

போக்சோ சட்டத்தின் கீழ் வெறும் வல்லுறவுக்கே குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி. எம்எல்ஏ மக்கள் சேவகர் அல்லர் என்பதால் விடுவிக்கப்படுவதாக இருந்தாலும் இதுவரை 6.5 ஆண்டுகள்தான் இவர் சிறையில் கழித்திருக்கிறார். ஆனாலும், தண்டனையை நிறுத்திவைக்கலாம் என்கிறது நீதிமன்றத்தின் தீர்ப்பு.

சிபிஐ விசாரணையிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வயதைப் பற்றிய தகவல்கள் உள்பட ஏராளமான குளறுபடிகள்.

தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக நீதிமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் போராட்டத்தை நடத்திவரும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், ‘தீர்ப்பைக் கேட்டதும் நீதிமன்றத்திலேயே தற்கொலை செய்துகொள்ளலாம் என நினைத்தேன். பாரதிய ஜனதா அரசு, பாரதிய ஜனதா தலைவர்கள். தாராளமாக வெளியே வருகிறார்கள். ஆசாராம் பாபு, ராம் ரஹீம் எல்லாம் சிகிச்சைக்காக பரோலில் வருகிறார்கள். இவர்களுக்குத் தண்டனையை நிறுத்திவைத்து வெளியே விடுகிறார்கள். இனி எங்களுக்கு எந்தப் பாதுகாப்புமில்லை’ என்று கொந்தளித்திருக்கிறார்.

‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக மத்தியிலுள்ள பாரதிய ஜனதா அரசு தன் அனைத்து பலத்தையும் பயன்படுத்துகிறது, உத்தரப் பிரதேசத்திலுள்ள பாரதிய ஜனதா அரசும் தன் அனைத்து பலத்தையும் பயன்படுத்துகிறது, சிபிஐயும் பயன்படுத்துகிறது – நெருக்கடி தரும் வகையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை விலக்கிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்’ என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

2018-ல் இதே உன்னாவ் வழக்கு தொடர்பான மக்கள் போராட்டங்களுக்குப் பதிலளிக்கும் விதமாகக் கருத்துத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ‘எந்தவொரு குற்றவாளியும் தப்ப முடியாது என்று இந்த நாட்டுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். முழுமையான நீதி வழங்கப்படும். நம்முடைய மகள்கள் நிச்சயம் நீதியைப் பெறுவார்கள்’ என்று குறிப்பிட்டார் என்பதும் நினைவுகூரத் தக்கது.

இந்த குல்தீப் சிங் செங்கர், பாரதிய ஜனதா கட்சியில் இணைவதற்கு முன் வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும் தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளவர். உத்தரப் பிரதேசத்திலும் தேர்தல் வரப்போகும் நிலையில் இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது.

மக்கள் சேவகர் பற்றிய நீதிமன்றத்தின், சட்டத்தின் புதிய விளக்கத்தின் மூலம், இனி எம்எல்ஏக்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளும் வல்லுறவு போன்ற மிக மோசமான குற்றங்களைச் செய்யும்போது, செய்தாலும், கடுமையான தண்டனைகள் பெறாமல் காக்கப்படுவார்களா? இவர்களுக்கு மட்டும் இத்தகைய பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதா என்ன?

மக்கள் சேவகர் என்பதற்கு அளிக்கப்பட்ட இப்படிப்பட்ட புதிய சட்ட வியாக்கியானம் (விளக்கம்!) அல்லது கண்டுபிடிப்பின் மூலம் எம்எல்ஏக்கள், எம்பிக்களிடம் இருக்கும் – இருக்க வேண்டிய பொறுப்புணர்வு அற்றுப் போய்விடாதா?

மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுப்போரும் செயற்பாட்டாளர்களும் கேள்விகேட்பாரின்றிச் சிறைப்பட்டிருக்கும்போது (ஐந்து ஆண்டுகளாக வழக்கே விசாரணைக்கு வரவில்லை; பிணை விடுதலையும் கிடைப்பதில்லை! விசாரணையோ தீர்ப்போ இல்லாமலேயே தண்டனை!), தண்டனை விதிக்கப்பட்ட, அரசியல் செல்வாக்குள்ள ஒருவரால் நுட்பமான சட்ட  வியாக்கியானத்தைப் பயன்படுத்தி வெளியே வர முடிகிறது என்றால்... இவற்றையெல்லாம் எப்படி நியாயப்படுத்த முடியும்?

இதே பாணியில், இதே வியாக்கியானத்தின் அடிப்படையில் மிக மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்ட எவ்வளவு பேர் – மக்கள் சேவகர்கள் -  எதிர்காலத்தில் வெளியே வரப் போகிறார்களோ?

குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், அரசியல் செல்வாக்கு, அதிகார பலம், பண பலம் கொண்டவர்களாக இருந்தால், சட்ட நுட்பங்களை (ஊர்ப் பேச்சில் சொன்னால் சட்டத்திலுள்ள ஓட்டைகளை) சாதகமாகப் பயன்படுத்த முடிந்தால், நீதிமன்றங்களில் தங்களுக்கு வசதியானதொரு நீதியைப் பெற இயலுமோ?

இதுபோன்ற சட்டத்தின் இண்டு இடுக்குகளைப் பயன்படுத்தித் தண்டனையிலிருந்து பெருங் குற்றவாளிகள் தப்புவதைத் தடுக்க ஏதாவது செய்தாக வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் 'சட்டப்படி' மக்கள் சேவகர்கள் அல்லர் என்று குறிப்பிட்டாலும் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு நிச்சயம் வேறொரு வகையில் கடுமையாகத் தண்டிக்கப்படத்தான் வேண்டும்.

தில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐயும் சில வழக்குரைஞர்களும் மேல் முறையீடு செய்துள்ளனர். இவ்விஷயத்தில் உச்ச நீதிமன்றம், எவ்வளவு காலம் கழித்து, என்ன தீர்ப்பு சொல்லப் போகிறதோ?

வல்லுறவு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டும் அல்லது தண்டனை விதிக்கப்பட்டும்கூட, நீதிமன்றத்தால் பெரும்பாலோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வெளியே நடமாடிக் கொண்டிருக்கின்றனர். ஆசாராம் பாபு, குர்மித் ராம் ரஹீம் போன்றோருக்கெல்லாம் தொடர்ச்சியாக எத்தனை பிணை விடுதலைகள்? பில்கிஸ் பானு வழக்கில்கூட அத்தனை பேரும் விடுதலை செய்யப்பட்டார்களே!

இந்தியாவில் வல்லுறவுக் குற்றங்களில் அண்மைக்காலமாக, 27 முதல் 28 சதவிகித வழக்குகளில்தான் தண்டனை விதிக்கப்படுகிறது.

வல்லுறவுகள் விஷயத்திலும் நாட்டில் ‘அப் டு டேட்’ தரவுகள் இல்லை. அல்லது கிடைக்கப் பெறவில்லை. 2025 ஆகஸ்ட் நிலவரப்படி, இந்திய நீதிமன்றங்களில் 3.44 லட்சம் வல்லுறவு மற்றும் போக்சோ குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவற்றில் சிறுமிகள் பாதிக்கப்பட்ட போக்சோ வழக்குகள் மட்டும்  2.62 லட்சம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன!

அப்படியானால், உன்னாவ் சிறுமியின் குடும்பத்தைப் போலவே, இத்தனை லட்சம் பெண்களின், சிறுமிகளின் குடும்பத்தினரும் தங்கள் இயல்பு வாழ்க்கையையும் அன்றாட நிம்மதியையும் தொலைத்துவிட்டு நீதிமன்றங்களில் இப்போதும்  போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதானே பொருள். இத்தனை பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும்கூட இதேபோன்ற போராட்ட டைம்லைன் இருக்கத்தானே செய்யும்? இந்த நாட்டின் மகள்களுக்குத்தான் எத்தகைய பெருந்துயரம்?

ஏற்கெனவே, நிதாரி தொடர் கொலை வழக்குத் தீர்ப்பின்போது சொன்னதைப் போல, தில்லி உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, ஒருவேளை நுட்பமான சட்ட வியாக்கியானத்தின் அடிப்படையில் - நீதிமன்றத்தின் வரிகளில் - சரியென்றுகூடக் கருதப்படலாம்; ஆனால், அறத்தின் அடிப்படையிலும் நீதியின்பால் கொண்ட அக்கறையிலும் சமூகத்தின் மீது இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தையும் பார்க்க மக்களுக்குப் பெருவலி மட்டுமே மிஞ்சும்!

unnao rape victim
சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?
Summary

following the acquittal of the convict in the unnao rape case appeal...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com