தங்கத்தின் விலை சவரன் ரூ. 1 லட்சம்! சாதாரண காலத்திலேயே ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக மிரட்டிக் கொண்டிருந்த தங்கத்தின் விலை இப்போது உச்சாணிக் கொம்பில் ஏறிக்கொண்டுவிட, தங்கத்தை இனி யாரும் நினைத்தும் பார்க்க முடியாது போல.
வரும் காலத்தில் தங்கம் விலை குறையுமா? அல்லது இப்படியேதான் மேலே மேலே சென்றுகொண்டேயிருக்குமா? குறைந்தால் எவ்வளவு வரை குறையும்? சில ஆயிரங்களா? சில ஆண்டுகளுக்கு முந்தைய விலைக்கு, சில பத்தாயிரங்கள், குறைய வாய்ப்புண்டா? எப்போது குறையும்? எந்தக் கேள்விக்கும் யாருக்கும் பதில் தெரியாது.
விளக்கம் தேவைப்பட்டால் உலக அரசியலில் தொடங்கி, ரஷியா – உக்ரைன் போர், அமெரிக்கா, சீனா, ரஷிய அரசுகள் எல்லாம் தங்கம் வாங்கிக் குவிப்பது, ஒரு பக்கம் டாலரும் இன்னொரு பக்கம் ரூபாயும் மதிப்பிழந்து கொண்டிருப்பது, டாலர் மீது நம்பிக்கையிழப்பதால் தங்கமாகத் திரட்டப்படுவது என நிறைய அரசியல் தொடர்ந்து வரும். முடிவு, குழப்பம்தான். மறுபடியும் பதில் தெரியாத அதே கேள்வி, தங்கம் விலை குறையுமா?
இந்திய மக்களின் வாழ்வில் தவிர்க்க முடியாததாகக் கலந்துவிட்டிருக்கிறது தங்கம். நம் நாட்டில் வீடுகளில் மட்டுமே 34,600 டன்கள் தங்கம் இருப்பதாக ஒரு மதிப்பீடும் சுமார் 27,800 டன்கள் இருப்பதாக இன்னொரு மதிப்பீடும் தெரிவிக்கின்றன (இவற்றின் மதிப்பை இப்போதைய தங்க விலையுடன் பெருக்கிக் கணக்கிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்!).
ஏனெனில், உலகில் தங்கத்தை ஒரு சொத்தாகக் கருதி, வாங்குவதும் அணிவதும் சேமிப்பதும் பாதுகாப்பதும் இந்தியா போன்ற சில நாடுகளில் மட்டும்தான். பெரும்பாலான நாடுகளில் தங்கத்தைப் பற்றி யாரும் கவலைப்படுவதுமில்லை. வாங்குவதுமில்லை; சேமிப்பதுமில்லை.
இந்தியாவில் தங்க நகைகள் வணிகத்தில் மிகப் பெருந்தொகை புரளுகிறது. மிகப் பெரும் லாபமும் ஈட்டப்படுகிறது. ஊருக்கு நான்கு கடைகள் என்ற நிலையெல்லாம் மாறிப் போய், இப்போது மிகப் பெரிய நிறுவனங்கள் பலவும் நாடு தழுவிய அளவில் சங்கிலித் தொடராகக் கடைகளைத் திறந்து நகை வணிகத்தைப் பெருக்கியிருக்கின்றன. நகைக் கடைகளில், ஆரமோ, மோதிரமோ, சங்கிலியோ, மாடலைக் காட்டி ஆர்டர் கொடுத்து, சில நேரம் தங்கமும் வாங்கிக் கொடுத்து, பொற்கொல்லர்களை வைத்துச் செய்து நகைகள் வாங்கிய காலமெல்லாம் அனேகமாக மலையேறிவிட்டது. இப்போது எல்லாமே ரெடிமேட்! கடைக்குச் சென்றோமா, நான்கு மாடல்களைப் பார்த்தோமா, வாங்கினோமா, வீட்டுக்கு வந்தோமா, எல்லாமே உடனுக்குடன். அபூர்வமாகவே, நகைக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும், அதுவும்கூட பெரும்பாலும் அவர்களுடைய இன்னொரு கிளையிலிருந்து வரவழைத்துத் தருவதற்காக!
அந்தக் காலத்தில், நகைகளைப் பொற்கொல்லர்கள்தான் செய்வார்கள். குமிட்டி அடுப்பு வைத்து உமியைக் கொட்டி, தங்கத்தை உருக்கி... மிகவும் நுட்பமான வேலைகள், வேலைப்பாடுகள். இவ்வாறு நகைகளைச் செய்யும்போது - வடிவமைக்கும்போது கொஞ்சம் தங்கம் ‘வீணாகி’ விடும். இந்தத் தங்கம், எங்கேயும் குதித்தோடிப் போய்விடுவதில்லை. சிந்திச் சிதறும் தங்கத் துகள்களைத் தனியே சேகரித்துக் கொள்வார்கள்; ஆர்டர் தரும் கடைகளிடம் திருப்பித் தந்துவிடுவார்கள். அல்லது அவர்களே கணக்கில் வைத்துக்கொள்வார்கள். இந்தத் தங்கம்தான் நகை செய்யும்போதான சேதாரம்! இந்த சேதாரத் தங்கத்தின் மதிப்பையும் நகையின் விலையுடன் சேர்த்துக் கொண்டுவிடுவார்கள். இந்தத் தொகை அப்படியே கடைக்காரரைச் சேருகிறது. தவிர, நகை செய்வதற்குத் தனிக் கூலி. அப்புறம் இருக்கவே இருக்கின்றன இந்த வரி வகையறாக்கள்.
தங்கத்தின் விலை மட்டும் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அறிவிக்கப்பட்டாலும்கூட, நாம் வாங்கும் நகைக்கான இந்த சேதாரத்தைக் கணக்கிடுவதிலும் செய்கூலியை நிர்ணயிப்பதிலும் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு நகரிலும், ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு விதமான கணக்கீடுகள், நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன!
சேதாரத்தைக் கணக்கிடுவதிலும் செய்கூலியை நிர்ணயிப்பதிலும் எவ்விதமான வரன்முறையும் இல்லை; வெளிப்படைத் தன்மையும் கிடையாது. இதுவரை இவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக விசேஷமாக எவ்வித முனைப்புகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவில்லை. நகைக் கடைக்காரர்கள் சொல்வதுதான் கணக்கு, தொகை, விலை எல்லாமும் – கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்.
மதுரைப் பகுதி நிலவரப்படி, 2020 வரையிலும் 10 கிராம் நகைக்கு 2 கிராம் வரையிலும் சேதாரம் கணக்கிடப்பட்டிருக்கிறது. 8 கிராம் ஒரு சவரன் (பவுன்). ஒரு சவரன் (8 கிராம்) நகை வாங்கினால், 8 கிராமுக்கான விலையுடன், சேதார தங்கத்துக்கெனக் கூடுதலாக 1.6 கிராம் தங்கத்தின் விலையையும் சேர்த்துக்கொண்டுவிடுவார்கள்! இப்போது, இந்த சேதாரத்துக்கான அளவு 10 கிராமுக்கு 600 மில்லி கிராம், அதாவது 0.6 கிராம் என (ஒரு சவரன் – 8 கிராமுக்கு 480 மிலி) குறைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
பொதுவான சேதாரக் கணக்கீடுதான் இது. மாறாக, வாங்குகிற நகைகளின் டிசைன்களைப் பொருத்து, நுட்பமான வேலைகள் கொண்ட நகைகள் என்றால், சேதாரத்தின் அளவுடன் சேர்ந்து விலையும் அதிகரித்துக்கொண்டே செல்லும். இதுவும் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி.
செய்கூலி நகைக்கடைக்காரர்களின் விருப்பம்போல. எடுத்துக்காட்டாக, ஜிமிக்கி, தோடு (கம்மல்) போன்றவற்றுக்கு ஒரு கிராமுக்கு ரூ. 300. ஒவ்வொரு நகைக்கும் ஒவ்வொரு விதமான செய்கூலிக் கணக்கு இருக்கிறது.
சங்கிலித் தொடரான பெரு நிறுவன (கார்ப்பரேட்) கடைகளில் பெரும்பாலும் எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரி கணக்குதான்.
சென்னை மற்றும் பெரு நிறுவன கடைகளில் இந்த சேதாரமும்கூட இப்போது சதவிகிதத்தில் கணக்கிடப்படுகிறது. வாங்குகிற நகைகளையும் அவற்றின் டிசைன்களையும் பொருத்து, 3 சதவிகிதத்திலிருந்து 23, 24 சதவிகிதம் வரையிலும்கூட (விலையில்) சேதாரம் சேர்க்கப்படுகிறது!
ஆக, ஒரு சவரன் நகை வாங்கச் சென்றால், 8 கிராம் தங்கத்தின் விலையுடன் கூடுதலாக சேதாரத்துக்கான விலை, செய்கூலி, பிளஸ் இவை மூன்றையும் கூட்டி வருகிற தொகைக்கான 3 சதவிகித ஜி.எஸ்.டி.! இன்றைய நிலவரப்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1 லட்சம் என்கிறபோது, நகையாக வாங்கும்போது, ஒரு லட்சத்துப் பத்தாயிரமோ, இருபதாயிரமோ தர வேண்டியிருக்கும். காலங்காலமாக, இதே பேட்டர்ன்தான் பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
[வாடிக்கையாளர்களின் பழக்கம், பேரம் பேசக் கூடிய திறன் போன்றவற்றைப் பொருத்து, ஒட்டகத்தின் கண்களுக்குத் தெரிகிற மாதிரி அதன் முதுகிலிருந்து சின்ன துணி மூட்டையை இறக்கி வீசுவது போல, சேதாரம், செய்கூலி போன்றவற்றில் கடைக்காரர்கள் சிறிது குறைத்துக்கொள்ளும் வாய்ப்புகள் இருக்கின்றன].
இந்த சேதாரம், செய்கூலி மூலம்தான் நகைக் கடைகளுக்கு வருமானம், லாபம், முன்னேற்றம் எல்லாமும் என்கின்றன நகை வணிகம் தொடர்பான வட்டாரங்கள் (இதுவரையிலும் நகைக் கடை நடத்தி நஷ்டப்பட்டவர்கள் பற்றி யாரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. நஷ்டப்பட்டிருந்தால் நிச்சயம் அதற்கு தங்கம் சாராத வேறு ஏதோ காரணங்கள்தான் இருக்கும்!).
இவ்வளவு காலமாக, இந்த சேதாரம் பற்றி மக்கள் லேசாக முணுமுணுத்தாலும் நகைகளை வாங்கிக்கொண்டுதான் இருந்தார்கள்; இருக்கிறார்கள். ஏனெனில், இதுவரையிலும் தங்கத்தின் விலை ஏதோ சவரனுக்கு 50 ஆயிரம், 60 ஆயிரம் என்றிருந்தது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக இப்போது லட்சத்துக்குத் தாவிவிட்டது தங்கம்.
இப்போதுதான் சேதாரம் பற்றிய மிகப் பெரிய கேள்விகள் மக்கள் மத்தியில் எழத் தொடங்கியிருக்கின்றன. இந்த நகைக்கடைக்காரர்கள் இந்தளவு அதிகமாக சேதாரத்தைக் கணக்கிடுவதில் எந்த அளவுக்கு நியாயம் இருக்கிறது? வாடிக்கையாளர்களுக்கு இவர்கள் சொல்கிற மில்லி கிராம் கணக்கோ, சதவிகிதக் கணக்கோ சரிதானா? எந்த அளவுக்கு?
ஒரு சவரன் தங்கத்தில் நகை செய்யும்போது, ஒரு கிராமோ அரை கிராமோ ‘சேதாரமாவதாகவே’ வைத்துக் கொள்வோம். சில மில்லி கிராம் தங்கம் வேண்டுமானாலும் காற்றில் கரைந்துவிடலாம். புகையாகலாம். ஆனால், சேதாரம் என இவர்கள் குறிப்பிடும் அளவுக்கு, மீதியுள்ள தங்கம் வேறெங்கும் சென்றுவிடுவதில்லை. நகைக்கடைக்காரருடன் அல்லது பொற்கொல்லரிடமோதான் இருக்கிறது, தூளாக. ‘இருக்கிற’ சேதாரத்துக்கு வாடிக்கையாளர்கள் ஏன் பணம் தர வேண்டும்? இதுவும்கூட சிறு அளவிலான கடைகளில் அல்லது சிறுநகர்ப்புறக் கடைகளில் பொற்கொல்லர்களை வைத்துச் செய்யும்போதுதான்.
ஆனால், இப்போது தங்க – வெள்ளி வணிகத்தின் பாணியே முற்றிலுமாக மாறிவிட்டது. பெரு நிறுவனங்கள் சங்கிலித் தொடராக நாடு முழுவதும் விற்பனை நிலையங்களைத் திறந்திருக்கின்றன. அல்லாமல் ஜவுளித் தொழிலில் இருப்பவர்களில் பெரிய நிறுவனங்கள் எல்லாமும் நகைக்கடைகளைத் திறந்துவிட்டிருக்கின்றன.
நகைத் தொழிலின் மிகப் பெரிய மாற்றம் – முன்னேற்றமாக நகைகள் தயாரிப்பிலும் தொழில்நுட்பமும் பெரியளவில் எந்திரங்களும் நுழைந்துவிட்டன. நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட நகைகளைக்கூட மிகச் சிறப்பான முறைகள் இந்த எந்திரங்கள் உருவாக்கித் தந்துவிடுகின்றன. எல்லாம் அச்சுகள் (டை) மூலம். எங்கோ சில இடங்களில், சில நிறுவனங்களால், ஒரு தொழிற்சாலையைப் போல, தயாரிக்கப்படும் நகைகள், நாடு முழுவதுமுள்ள பெரும்பாலான கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன; விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.
மனித உழைப்பில் நகை செய்யப்படும்போது நேரிடக் கூடிய அளவுக்கு எந்திரங்களால் உருவாக்கப்படும்போது சேதாரங்கள் நேரிட வாய்ப்பே இல்லை என்பது மிகவும் எளிய உண்மை. அதிக எண்ணிக்கையில் தயாரிக்கும்போது, சிதறும் தங்கத் துகள்களைக்கூட சேகரித்துக் கொண்டுவிட முடியும்; மீண்டும் உருக்கி நகைகளைத் தயாரிக்க முடியும். பெருமளவிலான நகைகள் எந்திரங்களால் உருவாக்கப்படும்போது, இன்னமும் எதற்காக இந்த அளவுக்கு சேதாரம் கணக்கிடப்பட வேண்டும்? (சேதாரத்துக்கென சேர்த்துப் பணம் வாங்கிக் கொள்ளும் கடைக்காரர்கள், சிந்திச் சேதாரமான தங்கத் தூளைப் பொட்டலம் போட்டு வாடிக்கையாளர்களிடமே தந்துவிடலாம்தானே?)
குறிப்பிட்ட நகையை உருவாக்கியது மனிதரா? எந்திரமா? என்பதைப் பொருத்து சேதாரத்தில் நிச்சயம் பெரும் வேறுபாடு இருக்கும்; வேறுபடுத்திக் கணக்கிடுவது மட்டுமே நியாயமானதாகவும் இருக்கும். எந்திரங்களால் தயாரிக்கப்படும் நகைகளுக்கு எதற்காக இவ்வளவு சேதாரக் கணக்கு?
பெருமெடுப்பில் நகைகள் தயாரிக்கப்படும் நிலையில், ஒரே வார்ப்பின்வழி எண்ணற்ற மோதிரங்கள், வளையல்கள், சங்கிலிகள் எந்திரங்களால் (மெஷின் கட்டிங் போல) உருவாக்கப்படும்போது, மனித உழைப்புக்கு - பொற்கொல்லர்களுக்குக் கொடுக்கிற அளவுக்கு எந்திரத் தயாரிப்புகளுக்கு ஏன் செய்கூலி தர வேண்டும்?
கார்ப்பரேட் தன்மை பெற்று ஒரே இடத்தில் நகைகள் செய்யப்பட்டுக் கடைகளுக்கு விநியோகிக்கப்பட்டு (சோப்பு சீப்பு கண்ணாடி மாதிரி!), அந்த நகைகள் விற்ற பிறகு, சில மாதங்கள் கழித்துக்கூட உரிய பணத்தை நகைத் தயாரிப்பு நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவாகிவிட்ட நிலையில், நகை வணிகம் பற்றிய மறுசிந்தனை, மக்கள் நலனை நோக்கிய சிந்தனை அவசியமெனப் படுகிறது – அதுவும் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரு லட்சம் என்றாகிவிட்ட அதிர்ச்சியான சூழலில்!
[அமெரிக்காவிலோ, ஐரோப்பிய நாடுகளிலோ சாதாரண மக்கள் யாரும் தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை; வாங்குவதுமில்லை. அமெரிக்காவில் பெரும்பாலும் 18 கேரட் தங்கம்தான் (ஒரிஜினல் தங்கம் 24 கேரட். இதைக் கொண்டு நகை செய்ய முடியாதென்பதால், சிறிதளவு செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களைக் கலந்து 22 கேரட்டில் நகை செய்கிறார்கள். இந்த நகையில் தங்கத்தின் அளவு 91.6 சதவிகிதம் இருக்கும் (பிற உலோகங்கள் 8.4 சதவிகிதம்); இருக்க வேண்டும்; இருக்கிறது என்றுதான் நம்புகிறோம். இதனால்தான் இவற்றை 916 நகைகள் என்கிறார்கள். இதேபோல, 875, 750, 585 என்றெல்லாம் வகைகள் உண்டு). ஸ்டைலாக அமெரிக்கர்கள் சிலர் அணிந்துகொள்வார்களே தவிர, நம் நாட்டைப் போல தங்க ஆபரணங்கள் எதையும் மக்கள் அணிவதில்லை; அணிவதை விரும்புவதுமில்லை. பிறகு செய்கூலி, சேதாரங்கள் பற்றி என்ன கவலை?
ஐரோப்பிய நாடுகளிலும் தங்க அணிகலன்கள் வாங்குவதில் மக்கள் அக்கறை கொள்வதில்லை. பெரும் பணக்காரர்கள் அதிக அளவில் வில்லைகளாக, கட்டிகளாக வாங்குவார்கள், விற்பார்கள், வணிகம்தான் நோக்கம். நம் ஊர்களைப் போல தங்கத்துக்கு ஏங்குகிற மனநிலையே இல்லை. சாதாரண மக்களிடம் தங்கத்தைச் சொத்தாகக் கருதும் எண்ணமில்லை - துபை போன்ற வளைகுடா நாடுகளில் தங்க நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் என்பதெல்லாம் இல்லை. மறைமுகமும் எதுவுமில்லை. தங்கத்தை நம்பி வாங்கலாம். சொன்ன மதிப்பில், கேரட்டில் இருக்கும். எனவேதான், அங்கிருந்து நிறைய கடத்தி வருகிறார்கள்.
இந்தியாவிலேயேகூட வட மாநில கிராமப்புறங்களில் தங்கத்தின் மீது மக்கள் அவ்வளவாக அக்கறையில்லாமல், ஆர்வம் கொள்ளாமல்தான் இருந்தார்கள். ஆனால், இப்போது நிலைமை பெரியளவில் மாறிக் கொண்டிருக்கிறது].
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இவ்வளவு செய்கூலி, சேதாரம் எல்லாம் கொடுத்து நாம் வாங்கிய நகைகளைத் தேவைக்காக விற்கச் சென்றால், ஒரு கடையில் வாங்கிய நகையை இன்னொரு கடைக்காரர்கள் பெரும்பாலும் வாங்குவதில்லை. குறிப்பிட்ட நகையைக் கொடுத்துவிட்டு, மாற்றி வேறு நகை வாங்கிக் கொண்டால் ஒரு கணக்கு. விற்றுப் பணம் வேண்டுமென்றால் வேறொரு கணக்கு. ஏதோவொரு கணக்கில் நகையின், தங்கத்தின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கழித்துக் கொள்ளப்படுகிறது. ஏன் மறுக்கிறார்கள்? ஏன் கழிக்கிறார்கள்?
இல்லங்களிலேயே 28 ஆயிரம் டன்கள் அளவுக்குத் தங்க நகைகள் இருக்கிற இந்தியாவில் இதுவரையில் தங்க வணிகத்தை ஒழுங்குபடுத்தக் கூடிய கறாரான சட்டங்கள் இல்லை. நாம் வாங்குகிற நகைகள் எல்லாம் உண்மையில் தங்கம்தானா? இல்லையா? தங்கத்தின் மதிப்பை, நகையின் மதிப்பை எதைக் கொண்டு அளவிடுவது? யாரைக் கொண்டு மதிப்பிடுவது? தங்கம்தான் என்றாலும் கடைக்குக் கடை அணுகுமுறை வேறுபடுவதற்கு என்ன காரணம்? ஒரு கடையில் வாங்கிய தங்கத்தை இன்னொரு கடைக்காரர்கள் ஏன் பெற மறுக்கிறார்கள்? அல்லது கணிசமாக விலையைக் குறைக்கிறார்கள்?
இந்தியாவில் ஏழை எளிய இந்திய மக்கள் எப்படியாவது கொஞ்சம் பணத்தைச் சேமித்தேனும் எப்படியாவது ஒரு பொட்டுத் தங்கத்தையாவது வாங்கிவிட வேண்டும் என்ற மனநிலையில் இருப்பவர்கள் (வீடு, இடமெல்லாம் வாங்க முடியுமா, என்ன?). தங்க நகை அணிவது இங்கே காலங்காலமாக இருக்கும் பண்பாடு. 50, 60 ஆண்டுகளுக்கு முன் நகைகள் செய்வதில் சேதாரங்களுக்கான காரணங்கள் இருந்திருக்கும். செய்கூலியும் ஆளைப் பொருத்து இருந்திருக்கும். நியாயம்தான். ஆனால், இன்றைக்கோ தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறிவிட்டிருக்கிறது; பயன்படுத்திக்கொள்ளவும் படுகிறது. என்றாலும், ஏன், இன்னமும் அதே பாணியில் அந்தக் காலத்தைப் போலவே அதே அளவுக்கு, சில நேரங்களில் அதைவிட அதிகமாகவும் சேதாரங்கள் கணக்கிடப்பட வேண்டும்? செய்கூலி பெறப்பட வேண்டும்? ஏழை எளிய மட்டுமல்ல, நடுத்தர மக்களும்கூட இன்னமும் ஏன், தங்க நகைகளை வாங்கும்போதும் சரி, விற்கும்போதும் சரி, எந்தத் தெளிவும் இல்லாமல் பணத்தை இழந்துகொண்டிருக்க வேண்டும்?
நாட்டில் சேதாரம், செய்கூலி தொடர்பாக மட்டுமல்ல; தங்கத்தின் தரத்தைப் பற்றிய விஷயத்திலும் ஒருங்கிணைந்த, வெளிப்படையான, தங்க வணிகத்தை முறைப்படுத்தக் கூடிய வகையில் – காஷ்மீரில் வாங்கிய தங்க நகையைக் கன்னியாகுமரியில் விற்றாலும் அதன் விலை மதிப்பில் எவ்வித மாற்றமுமில்லை என்கிற அளவுக்கு - சட்டங்கள் இயற்றப்பட வேண்டியதும் விதிகள் வகுக்கப்பட வேண்டியதும் மிக மிக அவசியம், அவசரமும்கூட; ஏனென்றால், தங்கத்தின் விலை சவரன் ஒரு லட்சம் ரூபாய்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.