“சந்தேகத்தின் அடிப்படையிலோ, ஊகத்தின் அடிப்படையிலோ தண்டனை வழங்கக் குற்றவியல் சட்டம் அனுமதிக்கவில்லை; குற்றம் நிரூபிக்கப்பட முடியாத நிலையில், கொடூரமான வழக்குகளில்கூட தண்டனையை ரத்து செய்வதே சட்டபூர்வமான வழி!”
_ என்று குறிப்பிட்டுப் பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் நாட்டையே உலுக்கிய நிதாரி தொடர் கொலைகள் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த சுரேந்திர கோலியைக் கடைசி வழக்கிலிருந்தும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது; அவரும் சிறையிலிருந்து வீடு திரும்பிவிட்டார்!
2006 ஆம் ஆண்டு இறுதியில் உத்தரப் பிரதேசத்தில் நொய்டாவிலுள்ள நிதாரி கிராமத்தில் – எங்கோ அல்ல, தலைநகர் தில்லியிலிருந்து 40 கி.மீ. தொலைவு அல்லது ஒரு மணி நேர பயணத்தில் - செக்டார் 31 டி – 5 வீட்டின் பின்புறமுள்ள கழிவுநீர் வாய்க்காலில் மண்டையோடுகளும் எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன.
ஏறத்தாழ 16 மண்டையோடுகள், சாக்குகளில் நிறைய எலும்புகள் சாக்கடையில் கிடந்தன – இவர்கள் வல்லுறவு செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மனித இறைச்சியைத் தின்றபின், மிச்ச எலும்புகளை வீசியிருக்கின்றனர்! அனேகமாக 19 சிறுமிகளும் இளம்பெண்களும் இவ்வாறு கொல்லப்பட்டிருக்க வேண்டும். இவர்கள் அனைவருமே ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக இதே பகுதியில் காணாமல் போனவர்கள்.
விசாரணையில் இந்த வீட்டில் வசித்த மணீந்தர் சிங் பாந்தர், வேலையாள் சுரேந்திர கோலி ஆகிய இருவரும்தான் குற்றவாளிகள் என்றறியப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். இந்தக் குற்றங்கள் அனைத்தும் இந்த வீட்டுக்குள்தான் நடைபெற்றிருக்கின்றன. சில குழந்தைகளின் உடைமைகள் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டன. இனிப்பு, சாக்கலேட் கொடுத்து ஏமாற்றி அழைத்துச் சென்று இந்த அக்கிரமத்தை நிகழ்த்தியிருக்கின்றனர்.
இந்தக் கொலை வழக்குகளின் விசாரணை, உத்தரப் பிரதேச காவல்துறையிடமும் தொடர்ந்து மத்திய புலனாய்வு அமைப்பிடமும் ஒப்படைக்கப்பட்டது. மனித உறுப்புகளை அகற்றிக் கடத்தியதாகவும் பாந்தர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் கொலைகள் தொடர்பாக, கோலி மீது 19 வழக்குகளும் பாந்தர் மீது 6 வழக்குகளும் தொடுக்கப்பட்டன. கோலி மீதான மூன்று வழக்குகளை போதிய ஆதாரமில்லை என சிபிஐ கைவிட்டது. மூன்று வழக்குகளில் கோலி விடுவிக்கப்பட்டார். அடுத்தடுத்த ஆண்டுகளில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று பல வழக்குகளில் இருவருக்கும் மரண தண்டனைகள் உள்பட தண்டனைகள் விதிக்கப்பட்டன.
ஒருமுறை, 2014, செப். 8 அதிகாலை 5.30 மணிக்கு மீரட் சிறையில் மரண தண்டனையை நிறைவேற்றத் திட்டமிட்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் - அதிகாலை 2 மணியளவில் - கடைசி நேரத்தில் தூக்கு மேடைக்குச் செல்லாமல் உயிர் தப்பினார் கோலி.
2015-ல் கருணை மனு தாமதிக்கப்பட்டதைக் காரணமாகக் கொண்டு, கோலியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது அலாகாபாத் உயர் நீதிமன்றம்; 2023 அக்டோபரில் கோலியை 12 வழக்குகளில் விடுதலை செய்தது. அனைத்து வழக்குகளிலிருந்தும் பாந்தர் விடுவிக்கப்பட்டார். இவற்றை எதிர்த்து, மத்திய புலனாய்வுக் குழுவும் பாதிக்கப்பட்ட சிறுமிகள், இளம்பெண்கள் குடும்பத்தினரும் செய்த மேல் முறையீடுகளைக் கடந்த ஜூலை மாதத்தில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
எனினும், ரிம்பா ஹல்தார் என்ற பதினான்கு வயதுச் சிறுமியின் கொலை வழக்கில் (இதுதான் கடைசி வழக்கு!) ஆயுள் தண்டனையில் சிறையிலிருந்த கோலி, தண்டனைக்கு எதிராகத் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம்நாத் ஆகியோரைக் கொண்ட அமர்வுதான், சில நாள்களுக்கு முன், நவ. 11, கோலியை விடுதலை செய்ததுடன் முதல் பத்தியில் சொன்ன கருத்தையும் தெரிவித்திருக்கிறது.
கூடவே, இந்த வழக்குகளிலிருந்த ஓட்டைகளை எல்லாம் பட்டியலிட்டதுடன், காவல் துறை, விசாரணை அமைப்புகளின் அலட்சியம் மற்றும் கால தாமதம் ஆகியவை எல்லாம் உண்மை கண்டறியப்படுவதைப் பாதித்ததுடன், உண்மைக் குற்றவாளியைக் கண்டறியும் வழிகளையும் அடைத்துவிட்டன என்றும் குறிப்பிட்டுள்ளது.
குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் உடனடியாகப் பதிவு செய்யப்படவில்லை, கைது ஆவணங்களில் ஏராளமான முரண்பாடுகள் இருக்கின்றன, சம்பவ இடம் பாதுகாக்கப்படவில்லை, சோதனைகளில் போதுமான தடயம் கிடைக்கவில்லை. வீட்டுப் பணியாளர், அருகிலுள்ள வீட்டினர் விசாரிக்கப்படவில்லை, உடல் உறுப்புகள் வணிகம் தொடர்பாகவும் சரியாக விசாரிக்கவில்லை (இவையெல்லாம் யாருடைய தவறுகள்?) என்று குறிப்பிட்டிருக்கிறது உச்ச நீதிமன்ற அமர்வு.
19 ஆண்டுகளாகிவிட்டன; நம்முடைய விசாரணை அமைப்புகளின் ‘தனித் திறமை’யின் பலனாகவும், எந்தக் காரணத்தைக்கொண்டும் நீதிவழுவிவிடக் கூடாது என்பதாலும், குற்றம் சாட்டப்பட்ட இருவருமே இப்போது விடுதலையாகிவிட்டார்கள்.
நிதாரி கொலை வழக்குகளில் கோலியும் குற்றவாளி அல்லர் என்றால் வேறு யார்? கொலைகள் நடந்தது அனைவருக்கும் தெரியும், கொலையாளி யார்?
நிதாரியில் பெண் குழந்தைகள் காணாமல் போவது பற்றி, 2006 அக்டோபரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு முன், 2005 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே பல சிறுமிகள் காணாமல்போனாலும், ஏன் எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை? இந்த வழக்கிலும் சாட்சியங்கள் ஏன் முறையாகக் கையாளப்படவில்லை? குற்றங்கள் நடந்த இடம் ஏன் முறைப்படி பாதுகாக்கப்படவில்லை?
திட்டமிட்டு, ஈவிரக்கமில்லாமல் இத்தனை சிறுமிகளை, இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி, கொன்று, தின்றவர்கள், நீதியின் பெயரால், இப்போது எவ்வித தண்டனையுமில்லாமல் சுதந்திரமாக வெளியேறிச் செல்ல முடிகிறதென்றால் இவற்றுக்கெல்லாம் யார்தான் பொறுப்பு? குழந்தைகளை இழந்தவர்களுக்குப் பதிலளிக்க வேண்டியது யாருடைய கடமை?
ஒருவேளை உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மறுபடியும் முதலில் இருந்து விசாரணையைத் தொடங்க வேண்டுமா? அவ்வாறு தொடங்க முடியுமா? ஏனெனில், உச்ச நீதிமன்றத்தில் சுரேந்திர கோலிக்காக வாதாடிய மூத்த வழக்குரைஞரான யுக மோகித் சௌதரி, ‘சில செல்வாக்குள்ள நபர்களைக் காப்பாற்றுவதற்காக இந்த சாதாரண மனிதர் குற்றவாளியாக்கப்பட்டுவிட்டார்’ என்று பேட்டியளித்திருக்கிறார்.
மாறாக, ‘இனி எனக்கு நம்பிக்கை ஏதுமில்லை. எங்களுடைய தோல்வியை ஒப்புக்கொள்கிறோம். எல்லாம் கடவுள் விட்ட வழி’ என்றிருக்கிறார் 10 வயதுக் குழந்தையைப் பறிகொடுத்த ஜப்புலால் என்பவர்.
கொலை நடந்த வீட்டிலிருந்து ஜப்புலாலின் மகளுடைய உடைகளும் காலணிகளும் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, உடல் மிச்சங்களைக் கொண்டு நடத்தப்பட்ட டிஎன்ஏ சோதனைகள் மூலம்தான் குழந்தை கொல்லப்பட்டதே உறுதி செய்யப்பட்டது.
‘வழக்குச் செலவுக்காகத் தில்லியில் எனக்கு இருந்த இடத்தை விற்றுவிட்டேன். வட்டிக்குக் கடன்கள் வாங்கிப் போராடினேன். நீதி கிடைக்கும் என நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால், எதுவும் நடைபெறவில்லை. நாங்கள் ஏழைகள். இனி கடவுள்தான் எங்களுக்கு உதவ வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார் ஜப்புலால்.
ஆனால், ‘இந்த வழக்கைப் பற்றி நன்றாகவே தெரியும். தனிப்பட்ட முறையிலும் இந்த வழக்கை ஆராய வாய்ப்புக் கிடைத்தது; சந்தர்ப்ப சாட்சியங்களின்படி, இந்தக் குற்றங்களுடன் இவர்களுக்கு நிறைய தொடர்புகள் இருக்கின்றன. இவர்களை முற்றிலும் அப்பாவிகள் என்பது எந்த வகையிலும் சரியல்ல’ என்று முன்னாள் ஐபிஎஸ் அலுவலரான அமோத் காந்த் என்பவர் தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட இருவருமே ஒன்றுமறியாத அப்பாவிகளாக இருக்க முடியும் என்றால், அந்த வீட்டிலிருந்த ஏதாவது பேய், பிசாசுகள்தான் இந்தக் குழந்தைகளைக் கொன்றனவா? கொலையாளிகளே இல்லாமல் கொலைகள் எவ்வாறு நடைபெறும்?
கொல்லப்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்களின் உடல் பகுதிகளை அகற்றியது யார்? சித்திரவதைக் குற்றச்சாட்டுகளுக்கு இடையே, கோலியிடம் 90 நாள்களுக்குப் பிறகு ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது ஏன்?
உள்ளபடியே, இவர்கள் விடுவிக்கப்படக் காரணம் அப்பாவிகள் என்பதற்காக அல்ல. முழுவதும் விசாரணை - நடைமுறைக் கோளாறுகள் காரணமாகத்தான். சட்டப்படி கோலி குற்றவாளி என்பதைத் தொடர்புடைய விசாரணை அமைப்புகள் நிரூபிக்கத் தவறிவிட்டன.
இங்கே விசாரணையும் விசாரணை அமைப்புகளும் தோற்றுப் போய்விட்டன. காரணங்களையெல்லாம் இப்போது உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறது. கொலைக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட ஆயுதங்களில் மனித ரத்தக் கறை எதுவுமில்லை என்பதுகூட இவற்றில் ஒன்று. ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து, கொலைகள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், கத்திகளைக்கூட கழுவாமலேயே குற்றவாளிகள் வைத்திருப்பார்களா என்ன? அத்தனை சிறுமிகள் காணாமல்போன போதிலும் ஓராண்டாக புகாரே பதிவு செய்யப்படவில்லையே?
நீதி என்பது என்ன? பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் வேறு என்னதான் செய்ய வேண்டும்? யார் அதைச் செய்வார்கள்? கோலி கொல்லவில்லை என்றால் இந்தச் சிறுமிகளை யார்தான் கொன்றார்கள்?
2011-ல் இதே சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டுதான், இதே உச்ச நீதிமன்றம் (நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஞானசுதா மிஸ்ரா அமர்வு), சுரேந்திர கோலிக்கு அலாகாபாத் உயர் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை - ‘அபூர்வத்திலும் அபூர்வமான’ வழக்கு என்று குறிப்பிட்டு - உறுதி செய்தது! 14 ஆண்டுகளுக்குப் பிறகு அதே உச்ச நீதிமன்றம்தான் நிறைய விளக்கங்களுடன் அதே கோலியை விடுதலையும் செய்திருக்கிறது.
மாறுபட்டிருக்கும் இரண்டு தீர்ப்புகளுக்கும் ஆதாரமாக இருப்பவை ஒரே ஆவணங்கள்தான். ஒருவேளை முன்னர் திட்டமிட்டபடி, 2014-லேயே சுரேந்திர கோலிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால்...
கோலியை விடுதலை செய்த உச்ச நீதிமன்ற அமர்வு, தீர்ப்பில் வருத்தத்துடன்தான் எல்லாவற்றையும் தெரிவித்திருக்கிறது. உண்மை, இத்தனை சிறுமிகளும் இளம் பெண்களும் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், சட்டம் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது என்று வேண்டுமானால் கொள்ளலாம்; ஆனால், நீதி நிலை நிறுத்தப்பட்டதா?
பிகாரும் எஸ்ஐஆரும்
பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியையும் கைப்பற்றி விட்டது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி தோற்றுப் போய்விட்டது. தேர்தல் ஆணையம் இந்த மாநிலத்தில் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக இப்போது மேலும் தீவிரமான புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.
வாக்காளர் பட்டியலில் இருந்த 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட சர்ச்சை தொடருகிறது. 85 லட்சம் வாக்காளர்களின் புகார்களைத் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்றொரு பக்கம்.
பிகார் மாநில மொத்த வாக்காளர் எண்ணிக்கை 7.42 கோடி என்று ஏற்கெனவே தெரிவித்திருக்கும் தேர்தல் ஆணையம், இப்போது, தேர்தலில் 7.45 கோடி பேர் வாக்களித்ததாகவும் இது 66 சதவிகித வாக்குப்பதிவு என்றும் சொல்கிறது. என்றால், இப்போது மொத்த வாக்காளர்கள் எவ்வளவு? எதுவும் புரியவில்லை, ஏதோ குழப்பம்.
ஏறத்தாழ 174 தொகுதிகளில் வெற்றி வித்தியாசத்தைவிடவும் நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். எஸ்ஐஆர் உபயம்!
சிறப்புத் திருத்தத்துக்குப் பிறகும் ஒரே மாதிரியான பெயரில் 14.35 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஒரே முகவரியில் நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் இருக்கிறார்கள் எனப் புகார்கள்.
இந்த சிறப்பு தீவிர திருத்தம் தன்னிச்சையானது; அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று தொடரப்பட்ட வழக்கு இன்னமும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில்தான் இருக்கிறது. ஒருவேளை இந்த வழக்கில் எஸ்ஐஆருக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும், முடிவுகளுக்கும், புதிய ஆட்சிக்கும் என்ன பொருள்? ஒருவேளை ஆணையத்தின் முடிவுக்கு எதிராகத் தீர்ப்பு வராது என்று முன்முடிவாகக் கூற முடியுமென்றால், எதற்காக நீதிமன்றத்தில் வழக்குகள்? விசாரணைகள்? உச்ச நீதிமன்றம் என்ன சொல்லப் போகிறது?
வீடு இடிப்பு தெரியுமா?
‘புல்டோசர் நீதி’ தவறு என்று இதே உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. இதுதொடர்பான வழக்குகளில், சில மாநிலங்களில் இவ்வாறு வீடுகள், கட்டடங்கள் இடிக்கப்பட்டதற்குக் கண்டனங்களும் தெரிவித்தது.
ஆனால், தில்லி கார் வெடிப்பில் தொடர்புடைய, அந்த காரை ஓட்டிச் சென்று உயிரிழந்த டாக்டர் உமரின் வீட்டை புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் இடித்துத் தள்ளியிருக்கின்றனர்.
உமர் தொடர்பான விசாரணைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், உமரைத் தவிர்த்து, அவருடைய குடும்பத்தினர் இருக்கும் வீட்டை இடிப்பது எந்த விதத்தில் நியாயமானதாக இருக்கும்? இது எந்த வகையான தண்டனை? யாருக்கானது? உச்ச நீதிமன்றத்துக்குத்தான் வெளிச்சம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.