சொல்லப் போனால்... சேர்க்கவா நீக்கவா, வாக்காளர் சிறப்பு திருத்தம்?

எஸ்.ஐ.ஆர். - வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திலுள்ள சிக்கல்கள், தொடர் விளைவுகள் பற்றி...
SIR
செல்லாத வாக்காளர்கள்!ENS
Published on
Updated on
6 min read

தேர்தல் ஆணையம் குறிப்பிடும் 2002, 2005 – வாக்காளர் பட்டியல் காலத்தில் ஒருவர் ஓரிடத்தில் இருந்திருக்கிறார். 2006, 07 ஆண்டுவாக்கில் இடம் பெயர்ந்து வேறொரு நகருக்கோ மாவட்டத்துக்கோ சென்றுவிடுகிறார். சென்ற இடத்தில் வாக்காளர் பட்டியலில் பதிந்து, கடைசியாக நடந்த தேர்தல் வரையிலும் தொடர்ந்து வாக்களித்தும் வந்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன் அதே ஊரில் வீடு மாறியிருக்கிறார். இன்னமும் முகவரி மாறவில்லை.

_ தேர்தல் ஆணையத்தின் தற்போதைய சிறப்பு தீவிர திருத்த நடைமுறைகளின்படி இவரால், இவருடைய குடும்ப உறுப்பினர்களால்  வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதும் குதிரைக் கொம்புதான்!

2000-த்தின் தொடக்க ஆண்டுகளிலுள்ள வாக்காளர் பட்டியலுக்குச் சென்று பார்க்க வேண்டும்; இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதுவே எல்லாருக்கும் சாத்தியமில்லை. அந்தக் காலத்தில் பெரும்பாலானோர் வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருக்கும் வாய்ப்பும்  இல்லை. பெயரை வைத்துத் தேடினால் கிடைக்கும் வாய்ப்பு அரிதிலும் அரிது. ஒருவருடைய பெயர் வாக்காளர் பட்டியலில் எவ்வாறு இடம் பெற்றிருக்கிறது என்பதிலேயே தொடங்கிவிடுகிறது சிக்கல். ஏதோவொரு ஊரில் வாடகைக்குக் குடியிருந்த இடத்தில் எதற்காகப் பெற்றோரும் உடன் வந்து இருக்கப் போகிறார்கள்? எனவே, பெற்றோர் பெயர்கள் விஷயமும் பெரும்பாலோருக்கு அடிபட்டுவிடும். பிறகு தேர்தல் ஆணையம் குறிப்பிடும் ஆவணங்கள். இவற்றில் பெரும்பாலானவை யாரிடமும் இருக்க வாய்ப்பே இல்லை. தவிர, வீடு மாறியிருக்கிறவர்களால் இந்தப் படிவங்களைப் பெற இயலாது, எத்தனை ஆண்டுகளாக வாக்காளராக இருந்திருந்தாலும் இவர்கள் எல்லாரும் மீண்டும் புதிதாகத்தான் விண்ணப்பிக்க வேண்டும்; அல்லது இணையதளத்தில் விவரங்களைப் பதிவேற்ற வேண்டும். ஆனால், இதன் மூலம் வரைவு வாக்காளர் பட்டியலில் இவர்கள் இடம் பெறும் வாய்ப்பில்லை; ஏனெனில், இவர்கள் படிவம் நிரப்பித் தரவில்லை! ஆக, எல்லாமே இடியாப்பச் சிக்கல்தான்!

உள்ளபடியே, தற்போது தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ள நடைமுறையைத் திருத்தம் என்றே கூற முடியாது. ஏற்கெனவே, இதே தேர்தல் ஆணையத்தால்  திருத்தப்பட்டு, இவ்வளவு காலமும் பராமரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை அப்படியே தூக்கிக் கிட்டத்தட்ட குப்பையில் போட்டுவிட்டு, வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே இருந்தாலும்கூட ஒவ்வொருவரும் நானும் வாக்காளர்தான் என்று மீண்டும் தாங்களாக நிரூபித்து, வாக்குரிமையைப் பெற வேண்டும்.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முந்தைய 2002, 2005 வாக்காளர் பட்டியலின் அடையாள அட்டை எண்ணை ஒருவர் எங்கே சென்று தேடுவது? எவ்வளவு பேருக்கு இணையம் தெரியும்? எந்த லட்சணத்தில் தேர்தல் ஆணைய இணையதளம் செயல்படும்? எவ்வளவு பேர் வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருப்பார்கள்? ஒருவருக்குத் தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணே தெரியாதபோது, பெற்றோர் அல்லது துணைவரின் அடையாள அட்டை எண்களுக்கு என்ன செய்வது? இடைப்பட்ட இருபது ஆண்டுகளில் இறந்து விட்டிருந்தால்? அல்லாமல் இட மாற்றங்கள், தொகுதி மாற்றங்கள், வரையறைகள், திருமணங்கள் என எவ்வளவோ. இத்தனை பழைய விஷயங்களைத் திரட்டுவது யாருக்கு, எந்தளவுக்கு சாத்தியம்? திரட்ட முடியாதவர்களின் நிலைமை என்ன? மூன்று முறை வருவார்களாம், படிவங்களைத் தருவார்களாம், பெறுவார்களாம்  எனச் சுற்றிவளைக்கும் நடைமுறைகளுக்குப் பிறகு ஒரு மாதத்துக்குள்ளேயே  வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுமாம். இந்த வரைவு பட்டியலில் இடம் பெறாத அனைவரும் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டுமாம். ஆனால், ஆணையம் கூறும் ஆவணங்களில் குடும்ப அட்டை, பான் அட்டை, இந்த ஆணையமே தந்த வாக்காளர் அடையாள அட்டை போன்ற எளிதான சான்றாதாரங்கள் எதுவும் இடம் பெறவில்லை.

போகாத ஊருக்கு வழி கேட்கிற மாதிரிதான் இருக்கிறது.

தமிழ்நாட்டில் 6.36 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேரும் ஊழியர்கள் வரும் நேரத்தில் வீடுகளில் குடும்பத்துடன் தங்கியிருந்து, படிவங்களைப் பெற்று, கேட்கிற விவரங்களையும், ஆவணங்களையும் இணைத்து ஆணைய அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் – ஒரு மாதத்துக்குள்.

எதற்காக இப்போது இந்த தீவிர திருத்தம்? இவ்வளவு அவசரம் எதற்காக?

பிகாரில் புலம் பெயர்ந்தோர் - வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் பெயர்களை நீக்கப் போவதாகச் சொல்லித் தொடங்கினாலும், உள்ளபடியே உண்மையான வாக்காளர்கள்தான் லட்சக்கணக்கில் நீக்கப்பட்டிருக்கிறார்கள் (தமிழ்நாட்டில் வேலை செய்துகொண்டிருக்கும் எத்தனை பிகாரிகள் இந்த முறை தேர்தலில் வாக்களிக்க ஊருக்குச் செல்கிறார்கள் என்று கேட்டுப் பாருங்கள்; விசாரித்தவரை யாரும் சென்றதாகத் தெரியவில்லை). தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் கேரளத்திலும் இத்தகைய தேவை எதற்காக வருகிறது?

ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதன் மூலம் மட்டுமே எளிதில் போலிகளைத் தவிர்க்க இயலும்; மாறாக ஆதார் வெறும் அடையாள அட்டைதான்; ஆதாரம் அல்ல என்று நகைச்சுவை செய்திருக்கிறது தேர்தல் ஆணையம் (அரசு கொடுத்த அடையாள அட்டைக்கே அவ்வளவுதான் மரியாதை!). இப்போது எவ்வளவோ கணினி மென்பொருள்கள் வந்துவிட்டன; இவற்றின் மூலம் நாடு முழுக்கவே எளிதில் போலியான வாக்காளர்களைக் கண்டுபிடித்துவிட முடியும். குளறுபடிகளை ராகுல் காந்தி அம்பலப்படுத்தத் தொடங்கிய பின், எண்ம மயமாக வாக்காளர் பட்டியல்களை வாசிக்க முடியாமல் செய்துவிட்டது தேர்தல் ஆணையம்.

2021-ல் செய்திருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கே இன்னமும்  வழியில்லை என்கிற நிலையில், தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கும்போது, அவசரம் அவசரமாக, சாத்தியமில்லாத நிபந்தனைகள் மற்றும் ஆவணங்களுடன் தாங்களும் வாக்காளர்தான் என்று உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர், அதுவும் 30 நாள்களுக்குள்.

அண்மைக்காலங்களில் செய்யப்பட்ட திருத்தங்களின் மூலம் உண்மையான வாக்காளர்களை நீக்கிவிட்டு, புதிதாக போலிகளைக் கொண்டு நிரப்புவதுதான் பல இடங்களில் நடந்திருப்பதாக வாக்காளர் பட்டியல்கள் பற்றி வெளிவரும் அபத்தங்கள் அனைத்தும் வெளிப்படுத்துகின்றன.

“ஹரியாணாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக 3.5 லட்சம் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றன. இவர்கள் அனைவரும் முந்தைய நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தவர்கள்.

“ஹரியாணா வாக்காளர் பட்டியலில் 25.41 லட்சம் போலி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். எட்டு பேரில் ஒருவர் போலி வாக்காளர். 1.24 லட்சம் வாக்காளர்களுக்குப் போலியான புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

“ஹரியாணாவின் ராய் தொகுதியில் 10 வெவ்வேறு வாக்குச்சாவடிகளின்  வாக்காளர் பட்டியல்களில் பிரேசில் நாட்டின் மாடல் அழகியின் (லாரிஸ்ஸா) படத்துடன் வெவ்வேறு பெயர்களில் 22 இடங்களில் இடம் பெற்றிருக்கிறது. ‘22 இடங்களுக்கும் அவர் வந்து’ வாக்களித்தும் இருக்கிறார்” - என்றெல்லாம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த மாடல் அழகி படத்துடன் வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவர்கள் யார்? எப்படி? ஆன் லைனில் விண்ணப்பித்தார்களா? படிவம் – 6 நிரப்பிக் கொடுத்தார்களா? ஒரே மாதிரியான புகைப்படங்களைச் சரிபார்க்கத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தவறியது? இவர்களை வாக்காளராகச் சேர்த்திருப்பதில் வாக்குச்சாவடி அலுவலரின் பங்கு என்ன? இந்த அழகியின் பெயரில் வாக்காளித்தவர்கள் யார்? இந்த வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வைத்துக் கண்டறிய முடியுமா? முடியாதா? இவ்வாறு லட்சக்கணக்கானோர் போலியாக வாக்களிக்கும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் முழு ஒத்துழைப்புடன் எங்கோ மத்தியிலிருந்து  ஒருங்கிணைக்கப்பட்டுதான் இவையெல்லாம் நடைபெறுகின்றனவா?  (ஹோடல் என்ற தொகுதியில் ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் இருக்கின்றனர்).

ஆனால், வழக்கம்போல, ராகுல் குற்றச்சாட்டுகளுக்குத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள்தான் பொத்தாம்பொதுவாக மறுப்புத் தெரிவிக்கின்றன. அல்லாமல் பிரேசில் அழகியின் படங்கள் இடம் பெற்றிருந்த வாக்காளர் பட்டியல் பக்கங்கள் எல்லாமும் உடனடியாக ஆணையத்தின் இணைய தளப் பக்கங்களிலிருந்தும் நீக்கப்பட்டுவிட்டன.

(வாக்குச்சாவடிகளில் அரசியல் கட்சிகளின் முகவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்று கேட்டிருக்கிறது தேர்தல் ஆணையம்; தேர்தலை முறையாக நடத்த வேண்டியது ஆணையமா? முகவர்களா?).

யார் எவ்வளவு கத்துக் கத்தினாலும் கண்டுகொள்ளாமல் வட்டாரங்கள் என்ற பெயரில் மறுப்புத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு, அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சிகள் சொல்கிற எதையும் – புகார்களாக இருந்தாலும் சரி, ஆலோசனைகளாக இருந்தாலும் சரி - ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. நாட்டைப் பற்றிய அக்கறையில்  ஆளுங்கட்சிகளைப் போலவே இணையான அளவுக்கு அனைத்து பொறுப்புகளும் கடப்பாடுகளும் சொல்லப் போனால் அதிகாரங்களும் எதிர்க்கட்சிகளுக்கும் இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, “மகாராஷ்டிரத்தில் பேரவைத் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன், பெருமளவில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டாகத் தேர்தல் ஆணையத்துக்கு எழுதின. ஆணையம் கண்டுகொள்ளவேயில்லை. இந்தத் தேர்தலில் புதிதாக 75 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர். மக்களவைத் தேர்தலைவிட பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி கூடுதலாகப் பெற்ற வாக்குகளும் 75 லட்சம் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் தகவல்” என்று கட்டுரையொன்றில் காங்கிரஸின் தரவு ஆய்வாளரான பிரவீண் சக்கரவர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் இவ்வாறெல்லாம் செய்ய முடியுமா? வாக்குச்சாவடியைக் கைப்பற்றுவதும் விருப்பத்துக்கு வாக்குகளைச் செலுத்துவதும் கடினம். ஆனால், வாக்காளர்களைப் பட்டியலிலிருந்தே நீக்கிவிட்டால்...

தமிழ்நாட்டில் இன்னும் ஆறு, ஏழு மாதங்களுக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இவ்வேளையில் குறுகிய காலத்தில் கொஞ்சமும் நடைமுறைச் சாத்தியமற்ற வித்தியாசமான நிபந்தனைகளுடன் மேற்கொள்ளப்படும் இந்த சிறப்பு தீவிர திருத்தத்தால் லட்சக்கணக்கான உண்மையான வாக்காளர்கள்தான் வாக்குரிமையை இழக்கப் போகிறார்கள்; சந்தேகமில்லை, இழப்பார்கள்.

சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, வரும் நவ. 11 ஆம் தேதி விசாரணைக்கு வருகிற மனுவில், “தமிழ்நாட்டில் இடப் பெயர்வு, இறப்பு மற்றும் தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2024 அக்டோபரில் தொடங்கி, இந்தாண்டு ஜனவரி வரையில் மேற்கொள்ளப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, பட்டியல் புதுப்பிக்கப்பட்டும் வருகிறது.

“இப்போதைய திருத்தம் அரசமைப்பு மீறலுக்கான தெளிவான எடுத்துக்காட்டு; குடியுரிமை போன்ற சான்றுகளைக் கோருவதன் மூலம் சட்டபூர்வ நோக்கத்தை மீறித் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது” என்று திமுக சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வித உறுதிப்பாடும் இல்லாமல் யாரோ ஒருவர் எங்கிருந்தோ வாக்காளர்களைச் சேர்க்கவும் நீக்கவும் மாற்றவும் முடியும் என்கிற சூழ்நிலையில், வாக்காளர் பட்டியலில் எதை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் (எங்கோ இருந்தபடி வாக்களிக்கவும்?) செய்யலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது தேர்தல் ஆணையர்களுக்கு ‘வானளாவிய’ அதிகாரமும் இருக்கிறது. இவர்களுடைய முடிவுகள் தொடர்பாக, யாரும் எப்போதும் வழக்குத் தொடர முடியாது.

வாக்காளர் பட்டியலை ஒழுங்குபடுத்த வேண்டியது மட்டுமல்ல, முறையாகப் பராமரிக்க வேண்டியதும்கூட அவசியம்தான். ஆனால், தற்போது தேர்தல் ஆணையத்திடம் இருக்கும், மேற்கொள்ளும் ஏற்பாடுகளின் மூலம் இப்போதைய பாணியில் இதைச் செய்ய முடியுமா?

முன்னதாக அறிவித்துவிட்டு, குறிப்பிட்ட பகுதிகளுக்கு வீடு வீடாகச் சென்று  ஒவ்வொருவரையும் அவர்கள் வசிக்கும் முகவரியிலேயே சந்தித்து எளிதில் வாக்காளர்களின் பெயர்களைப் பதிவு செய்ய முடியும். இப்போது, படிவங்களைக் கொடுக்கப் போகிறவர்களே நேரடியாக முகம் பார்த்துப் பட்டியலை உறுதி செய்யவும் முடியும். அந்த இடத்திலேயே இடம் - முகவரி மாற்றம் உள்பட எல்லாவற்றையும் செய்துவிடவும் முடியும்; சமையல் எரிவாயு இணைப்புச் சான்றே போதும் – ஏனெனில், எல்லாமே இணையவழி எவரொருவராலும் சாத்தியமே.

அனைத்துத் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்ட பிறகு தேர்தல் ஆணையம் கடைசியாக வரைவு வாக்காளர் பட்டியலொன்றை வெளியிட்டு, அந்தப் பட்டியலில் விடுபட்டோர் மீண்டும் சேர்க்கப்படுவதற்கான எளிய வழிவகைகளைச் செய்து, மற்றொரு திருத்தப்பட்ட இறுதி வரைவுப் பட்டியலை வெளியிட்டுப் பின்னர் இறுதிப் பட்டியலை அறிவிக்க வேண்டும் – எளிதாகவும் முறையாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் இருக்கும்.

பிகாரில் தீவிர சிறப்புத் திருத்தம் என்ற பெயரில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். ஆனால், அதன் பிறகு நடந்த தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவில் என்னென்னவோ கூத்துகள் அம்பலப்பட்டிருக்கின்றன.

தமிழ்நாட்டிலோ, கேரளத்திலோ, மேற்கு வங்கத்திலோ கடந்த ஆண்டில்தான் மக்களவைத் தேர்தல் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டுத் தொடக்கத்தில்தான் சிறப்புத் திருத்தமும் முடிந்திருக்கிறது.

இந்த நிலையில், இவ்வளவு கஷ்டப்பட்டு, இத்தனை ஆவணங்களைத் திரட்டிக் கொண்டுபோய்தான் ஒருவர் தன்னுடைய வாக்குரிமையைப் பெற வேண்டுமா? சாதாரண, படிப்பறிவற்ற, ஏழை எளிய மக்கள் இவ்வாறு அலைக்கழிக்கப்பட்டுதான் வாக்களிக்க வேண்டுமா? அல்லது இவர்கள் யாரும் வாக்களிக்கவே வேண்டாமா? இந்த ஆவணங்கள் இல்லாதவர்கள் வாக்களிக்கும் தகுதியுள்ள இந்திய குடிமக்கள் அல்லரா? இவர்களுக்கு வாக்குரிமை கிடையாதா? பறிப்பு முயற்சியா?

வாக்காளர் பட்டியலைத் திருத்துவது என்பதைவிடவும் முற்றிலுமாகக் குழப்பி, லட்சக்கணக்கான வாக்காளர்களை, ஆளை விட்டால் போதும் என தப்பித்தோடும்படி செய்வதாகத்தான் இருக்கிறது இப்போதைய அணுகுமுறை (பிகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் அவுட் என்றால் தமிழ்நாட்டில் எப்படியும் 1 கோடி!).

ஒரே மாதத்தில் இந்தத் ‘திருத்தங்களை’ எல்லாம் செய்து டிச. 9 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். முகவரி மாறியவர்களும் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களும் டிச. 7 முதல் 2026 ஜன. 3-க்குள் விண்ணப்பிக்க  (வழக்கமான ஆவணக் குழப்பங்களுடன்) வேண்டும். பிப். 7 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்! (கடைசி நேரத்தில் வெளியிடப்படும் இந்தப் பட்டியலை வைத்து யார், என்ன செய்ய முடியும்?). இந்தப் பட்டியலில் இடம் பெறாமல் போய்விட்டால்... சொந்த நாட்டிலேயே அந்நியராகத் தேர்தலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்!

ஏற்கெனவே, நம்முடைய தேர்தல்களில் வாக்குப் பதிவு அதிகபட்சமாகவே 70 சதவிகிதத்தைத் தாண்டுவதில்லை. சென்னை மாநகரிலேயே 40, 45 சதவிகித வாக்குகளே பதிவாகும் தொகுதிகள் எல்லாமும் இருக்கின்றன. இந்தத் தீவிர திருத்தத்தின் மூலம் இன்னும் பல லட்சம் வாக்குகளை அல்ல, வாக்காளர்களையே செல்லாதவர்களாக ஆக்கிவிட்டால் தேர்தலில் எத்தனை சதவிகிதம் வாக்குகள் பதிவாகும்?

உள்ளபடியே சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் லட்சக்கணக்கான உண்மையான வாக்காளர்கள் நீக்கப்படுவதும் கடைசி நேரத்தில் (டிச. 7 முதல் 2026 ஜன. 3) ‘கண்டமேனிக்கு’ லட்சக்கணக்கில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுவதும்தான் நடைபெறப் போகிறதோ என அச்சம் கொள்ள வைக்கிறது இதன் தீவிரம் (அக்கறையுள்ள அரசியல் கட்சிகள், மகாராஷ்டிரத்தில் நடந்ததை மனதில்கொள்ள வேண்டும்).

[நாட்டில் முதல் கட்டமாக தற்போது பேரவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிகாரில் மட்டும் பெரும் சர்ச்சைகளுக்கு இடையே சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. இரண்டாவது கட்டமாக, விரைவில் 2026-ல் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகியவற்றுடன் கோவா, குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத் தீவுகள் ஆகியவற்றில் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநில அரசுகள் எதிர்க்கின்றன].

நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கிற, அதிகாரத்தை முடிவு செய்கிற மக்களின் ஜனநாயக செயற்பாட்டில் தொடர்ந்து இவ்வளவு கோளாறுகளும் குளறுபடிகளும் வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் வேறு எந்தவொரு நாடாக இருந்தாலும் மிகப் பெரிய அதிர்வுகள் நேரிடுவதுடன் தேர்தல் ஆணையமே கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கும்.

ஆனால், ‘வாக்காளர் பட்டியலில் ஒரே தொகுதியில் 22 இடங்களில் பிரேசில் நாட்டு அழகிக்கு இடம் தந்து, ஒரே நாளில் 22 இடங்களிலும் அவர் தோன்றி (சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியம்!) வாக்களிக்கவும் வசதி செய்துகொடுத்த’  தேர்தல் ஆணையம்தான் இப்போது, சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுப்பதைப் போல, தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் சிறப்பாகத் தீவிர திருத்தங்களைச் செய்ய முனைகிறது!

இதையும் படிக்க: சொல்லப் போனால்... பிரதமர் பேச்சும் புலம்பெயர் வாழ்வும்!

Summary

SIR - Problems and repercussions of the Special Intensive Revision of Electoral Roll...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com