வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

ஜெயலலிதாவின் இரு விசுவாசிகளை இழந்த அதிமுக! அடித்தாடும் திமுக!

சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் பற்றி...

News image
திமுக தலைவருடன் ஓ. பன்னீர்செல்வம், தவெக தலைவருடன் செங்கோட்டையன்.
Updated On :27 பிப்ரவரி 2026, 8:54 am

எஸ். ரவிவர்மா

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரு பெரும் விசுவாசிகளான கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுக இழந்திருக்கும் நிலையில், மறுபக்கம் திமுக அடித்தாடத் தொடங்கியிருக்கிறது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் எம்.ஜி.ஆரால் அரசியல் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்ட செங்கோட்டையன், அவரது மறைவுக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவியேற்ற ஜெயலலிதாவின் விசுவாசியாக கருதப்பட்டவர்.

தேர்தல் பிரசாரம், சுற்றுப் பயணம் உள்பட அமைப்பு ரீதியிலான அனைத்துப் பணிகளையும் கச்சிதமாக முடிப்பதில் ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவர்.

மற்றொருவர் ஓ. பன்னீர்செல்வம். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற காரணத்தால் இருமுறை முதல்வர் பதவியை ஜெயலலிதா ராஜிநாமா செய்ய நேரிட்டது. அந்த இருமுறையும் ஓ. பன்னீர்செல்வத்தைத்தான் ஜெயலலிதா முதல்வராக்கினார். அவரின் முழு நம்பிக்கையைப் பெற்றவராக இருந்தார்.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியைக் கைப்பற்ற நினைத்த சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ்ஸின் தர்மயுத்தம், சசிகலா கைது, முதல்வராகப் பதவியேற்ற இபிஎஸ் எனப் பல்வேறு அரசியல் ஸ்டண்டுகள் நடைபெற்றன. இறுதியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், தமிழ்நாட்டின் முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமியும் பதவியேற்றுக் கொண்டனர்.

ஆனால், சில நாள்களில் அதிமுகவுக்குள் ஒற்றைத் தலைமை என்ற குரலெழுந்த நிலையில், ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டது. சென்னையில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் ஓபிஎஸ்ஸை அதிரடியாக நீக்கி தீர்மானத்தை நிறைவேற்றினார் இபிஎஸ்.

ஓபிஎஸ்ஸும் நீதிமன்றங்கள், இந்திய தேர்தல் ஆணையம் என சட்டப் போராட்டங்களை நடத்தி பின்னடைவையே சந்தித்தார். அதிமுக உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் தனது ஆதரவாளர்களுடன் பணியாற்றி வந்த ஓபிஎஸ், பலமுறை அதிமுகவில் இணைய விரும்புவதாக வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கெல்லாம் சாத்தியமே இல்லை என்று இபிஎஸ் மறுத்துவிட்டார்.

மறுபுறம் இபிஎஸ்ஸுடன் இணைந்து செயல்பட்ட செங்கோட்டையன், அவரின் அமைச்சரவையிலும் கல்வித் துறை அமைச்சராக இருந்தார்.

ஆனால், கட்சிக்குள் தனக்கு உரிய மரியாதையும் செல்வாக்கும் குறைந்ததால் அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், முதல்முறையாக கடந்தாண்டு பிப்ரவரி மாதம் இபிஎஸ்ஸுக்கு நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில் கலந்துகொள்ளாமல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டக் குழு சார்பில் இபிஎஸ்ஸுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவில், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இல்லை என்று தெரிவித்தார்.

பின்னர், கோபிசெட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் சாலைவலம் நடத்திய செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரையும் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று இபிஎஸ்ஸுக்கு கெடு விதித்தார்.

அப்போது நான் நினைத்திருந்தால் தமிழ்நாட்டின் முதல்வராகியிருக்க முடியும், ஆனால், எனக்கு பதவி ஆசை இல்லை, கட்சிக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்தேன் என்று வெளிப்படையாக பேசியிருந்தார்.

ஆனால், செங்கோட்டையனின் கோரிக்கைகளை ஏற்க மறுத்த இபிஎஸ், அவரைக் கட்சியின் அடிப்படை பதவியில் இருந்தே நீக்கிவிட்டார்.

இதையடுத்து, தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் நடிகர் விஜய்யில் தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் இணைந்தார் செங்கோட்டையன். நிர்வாகப் பொதுச் செயலாளர் பதவியும் பெற்றுவிட்டார்.

Story image

தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் சூழலில் பாஜக மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துவிடலாம் என்று கணக்குப் போட்டு ஓபிஎஸ் காய் நகர்த்தினார். ஆனால், ஓபிஎஸ் ஆட்டத்தை கலைத்துவிட்ட இபிஎஸ், வாய்ப்பில்லை எனத் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என தெரிவித்திருந்த ஓபிஎஸ், மாசி பிறந்தும் வழி கிடைக்காமல் தவித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசிய ஓபிஎஸ், கடந்த 5 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்த முதல்வருக்கு பாராட்டுத் தெரிவித்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு இன்று வருகைதந்த ஓ. பன்னீர்செல்வம், தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

Story image

தமிழ்நாட்டின் மூன்று முறை முதல்வராக இருந்த ஒருவர் மற்றொரு கட்சியில் இணைவது இதுவே முதல்முறை.

அடித்தாடும் திமுக!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஓராண்டுக்கு முன்னதாகவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவும், பாஜகவும் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக அறிவித்தனர்.

தொடர்ந்து, அன்புமணி தலைமையிலான பாமக, டிடிவி தினகரனின் அமமுக ஆகிய கட்சிகளையும் தங்களின் கூட்டணியில் இணைத்தனர். கடந்த மாதமே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கியும் வைத்துவிட்டார்.

இதுமட்டுமின்றி, அதிமுக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு உதவித் தொகையாக ரூ. 10,000, குல விளக்கு திட்டத்தில் மகளிருக்கு மாதம் ரூ. 2,000 என தேர்தல் வாக்குறுதிகளையும் எடப்பாடி பழனிசாமி படிப்படியாக அறிவித்து வருகிறார்.

தேர்தலைப் பொறுத்தவரை திமுக இன்னும் கூட்டணியையே இறுதி செய்யாமல் இருக்கும் சூழலில், டி20 போட்டியைப் போன்று அதிமுக - பாஜக கூட்டணி அதிரடி காட்டி வருகின்றது.

ஆனால், டெஸ்ட் போட்டியைப் போன்று திமுக நிதானமாக ஆடினாலும், அடிக்க வேண்டிய பந்துகளை ஸ்டேடியத்தைவிட்டு வெளியே அடித்துக் கொண்டிருக்கிறது.

திமுகவின் ஒவ்வொரு நகர்வும் கணிக்க முடியாததாக மாற்றி அமைத்துள்ளது. முதலில் மகளிர் கணக்குகளில் திடீரென்று ரூ. 5,000 வரவு வைக்கப்பட்டது. அடுத்து, யாரும் எதிர்பாராமல் தேமுதிகவுடன் கூட்டணியை இறுதி செய்தது. தற்போது ஓ. பன்னீர்செல்வத்தை திமுகவில் இணைத்திருக்கிறது.

திமுகவிடம் கூடுதல் தொகுதிகளையும் ஆட்சியில் பங்கும் கேட்டு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்த காங்கிரஸுக்கு அழுத்தம் தரும் வகையில், தேமுதிகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது.

மார்ச் இரண்டாம் வாரத்துக்குள் காங்கிரஸுடனான கூட்டணியை திமுக இறுதி செய்துவிடும் எனத் தெரிகின்றது.

திமுகவின் தேர்தல் அறிக்கையைப் பொருத்தவரை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையிலான குழு, மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து வாக்குறுதிகளை தயாரித்து வருகின்றது.

திமுகவுக்கு ஓபிஎஸ், தவெகவுக்கு செங்கோட்டையன் சென்றதால் அதிமுகவுக்குப் பெரிய அளவிலான சேதம் இருக்க வாய்ப்பில்லை என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், அமைப்பு ரீதியாக கட்சியை நன்கு அறிந்தவர்களும், ஜெயலலிதாவின் விசுவாசிகளாக இன்றளவும் போற்றப்படும் இருவர் இல்லாமல் கொங்கு மண்டலத்திலும், தென் மாவட்டத்திலும் அதிமுக தேர்தலைச் சந்திக்கிறது.

அரசியலில் இவர்களின் இடமாற்றத்தால் நேரிடும் தாக்கம் எப்படி இருக்கும்? யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? தேர்தல்தான் தெரிவிக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.