
ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான வி.கே.பாண்டியன் அரசியலில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து வி.கே.பாண்டியன் மீது பெரும் விமர்சனங்கள் எழுந்து வந்தது.
நேற்று (ஜூன் 8) நவீன் பட்நாயக் அளித்த பேட்டியில், வி.கே.பாண்டியன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் துரதிர்ஷ்டவசமானது என்றும், அவர் தனது வாரிசு இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று வெளியாகியுள்ள வி.கே.பாண்டியனின் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்த வி.கே.பாண்டியன் தனது ஓய்வு அறிவிப்பை காணொளியாக வெளியிட்டுள்ளார்.
ஒடிசாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது. இதில், சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 78 தொகுதிகளில் பாஜக வென்று பெரும்பான்மை பெற்று 24 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பிஜு ஜனதா தளத்தைத் தோற்கடித்துள்ளது.
இதில், பிஜு ஜனதா தளம் 51 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்திலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
அதுமட்டுமின்றி, மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில், பாஜக 20 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்று பிஜு ஜனதா தளம் படுதோல்வியடைந்தது.
இதனைத் தொடர்ந்து, தான் யாரையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன் என்று கூறிய வி.கே.பாண்டியன், பிஜு ஜனதா தளம் தேர்தலில் தோற்றதற்கு தனக்கு எதிரான பிரசாரங்கள் காரணம் என்றால் அதற்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக அந்தக் காணொளியில் தெரிவித்துள்ளார்.
முன்னதாகக் கடந்த மே 10 அன்று, வருகிற தேர்தலில் பிஜு ஜனதா தளம் தோல்வியடைந்தால் தான் அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.பாண்டியன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.