
தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் அணியை தொடர்ந்து, ஷிண்டேவின் சிவசேனையும் மத்திய அமைச்சரவை கேபினேட் பதவி கொடுக்காததற்கு அதிருப்தி தெரிவித்துள்ளது.
சிவசேனையைவிட குறைவான இடங்களில் வெற்றி பெற்றுள்ள சிராஜ் பாஸ்வான், ஹெ.டி. குமாரசாமி, ஜிதன்ராம் மாஞ்சி உள்ளிட்டோருக்கு மத்திய கேபினேட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மக்களவைத் தேர்தலை தேசியவாத காங்கிரஸ்(அஜித் பவார்) மற்றும் சிவசேனை(ஷிண்டே) அணிகள் எதிர்கொண்டன.
இதில், ஷிண்டே அணி 7 தொகுதிகளிலும், அஜித் பவார் அணி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், மோடி தலைமையிலான அமைச்சரவையில் இரண்டு கட்சிகளுக்கும் தலா ஒரு மத்திய இணையமைச்சர் பதவியை பாஜக வழங்க முன்வந்தது.
ஆனால், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) தரப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரஃபுல் படேல், ஏற்கெனவே மத்திய அமைச்சராக பதவி வகித்திருக்கும் நிலையில், இணையமைச்சர் பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.
மேலும், மத்திய அமைச்சர் பதவிக்காக சிறிது காலம் காத்திருப்போமே தவிர, இணையமைச்சர் பதவியை ஏற்க மாட்டோம் என்று தெரிவித்துவிட்டனர்.
நேற்று பிரஃபுல் படேல் பதவியேற்காத நிலையில், ஷிண்டே அணியின் பிரதாப்ராவ் ஜாதவ் தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சராக பதவியேற்றார்.
இந்த நிலையில், மத்திய இணையமைச்சர் பதவி கிடைக்காதது குறித்து சிவசேனை கட்சியின் தலைமை கொறாடா ஸ்ரீரங் பார்னே அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது:
“நாங்கள் கேபினேட் அமைச்சர் பதவியை எதிர்பார்த்தோம். 7 தொகுதிகளில் வென்றுள்ள சிவசேனைக்கு மத்திய கேபினேட் அமைச்சர் பதவி வழங்கவில்லை. ஆனால், 5 தொகுகளில் வெற்றி பெற்ற சிராஜ் பாஸ்வான், 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற குமாரசாமி, ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற ஜிதன்ராம் மாஞ்சிக்கு கேபினேட் பதவி வழங்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை பதவியேற்று 24 மணிநேரத்துக்குள் கூட்டணியின் முக்கிய இரு கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, கட்சியின் அனைத்து எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.களுடனும் இன்றிரவு ஷிண்டே முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
ஷிண்டே அணியும், அஜித் பவார் அணியும் கூட்டணியில் இருந்து விலகினால், மத்திய ஆட்சியில் பாஜகவுக்கான ஆதரவு குறைவதுடன், மகாராஷ்டிர மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.