140க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பதிவான, எண்ணப்பட்ட வாக்குகள் இடையே வித்தியாசம்..!

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகளைக் காட்டிலும், அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
140க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பதிவான, எண்ணப்பட்ட வாக்குகள் இடையே வித்தியாசம்..!
படம் | ஏஎன்ஐ
Published on
Updated on
3 min read

மக்களவை தேர்தலில் பதிவான, எண்ணப்பட்ட வாக்குகள் இடையேயான வித்தியாசம் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? என்கிற அதிர்ச்சியையும் வலுத்த சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளிலும் ஏப். 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் கடந்த 4-ஆம் தேதி சற்றே மந்த கதியில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளன. எதிர்க்கட்சி அந்தஸ்தை 10 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் பிடித்துள்ளது.

இந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் நிகழ்ந்ததைப் போலவே, இம்முறையும் அநேக இடங்களில் பதிவான, எண்ணப்பட்ட வாக்குகள் இடையே வித்தியாசம் ஏற்பட்டுள்ளது வாக்கு எண்ணிக்கை முடிவில் வெளியிடப்பட்ட தகவல்கள் மூலம் அறியப்பட்டுள்ளது.

140க்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகளைக் காட்டிலும், அதிகமான வாக்குகள் பதிவாகியிருப்பதாக வாக்கு எண்ணிக்கை முடிவில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிகழாண்டு மக்களவை தேர்தலில், 362 தொகுதிகளில் இவிஎம்களில் பதிவாகியுள்ள வாக்குகளில் மொத்தம் 5,54,598 வாக்குகள் எண்ணப்படாமல் விடுபட்டுள்ளது தேர்தல் ஆணைய தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

மறுபுறம், 176 தொகுதிகளில் இவிஎம்களில் மொத்தம் பதிவாகியுள்ள வாக்குகளை விட கூடுதலாக 35,093 வாக்குகள் அதிகம் பதிவாகியிருப்பதாக வாக்கு எண்ணிக்கை முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட குளறுபடிகள் அதிர்ச்சியையும் வலுத்த சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, அஸ்ஸாமின் கரீம்கஞ்ச் மக்களவை தொகுதியில் மொத்தம் எண்ணப்பட்டுள்ள வாக்குகள் 1,140,349. ஆனால் இவிஎம்களில் பதிவாகியுள்ள வாக்குகள் 1,136,538. இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம் 3,811.

ஆந்திர பிரதேசத்தின் ஓங்கோல் மக்களவை தொகுதியில் மொத்தம் எண்ணப்பட்டுள்ள வாக்குகள் 1,401,174. ஆனால் இவிஎம்களில் பதிவாகியுள்ள வாக்குகள் 1,399,707. இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம் 1467.

அதேபோல, மத்திய பிரதேசத்தின் மண்ட்லா மக்களவை தொகுதியில் மொத்தம் எண்ணப்பட்டுள்ள வாக்குகள் 1,531,950. ஆனால் இவிஎம்களில் பதிவாகியுள்ள வாக்குகள் 1,530,861. இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம் 1089.

மறுபுறம், வேறு சில மக்களவை தொகுதிகளில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகளைக் காட்டிலும், குறைவான வாக்குகள் பதிவாகியிருப்பதாக வாக்கு எண்ணிக்கை முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மக்களவை தொகுதியில் மொத்தம் எண்ணப்பட்டுள்ள வாக்குகள் 1,413,947. ஆனால் இவிஎம்களில் பதிவாகியுள்ள வாக்குகள் 1,430,738. இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம் 16,791.

அஸ்ஸாமின் கோக்ராஜர் மக்களவை தொகுதியில் மொத்தம் எண்ணப்பட்டுள்ள வாக்குகள் 1,229,546 ஆனால் இவிஎம்களில் பதிவாகியுள்ள வாக்குகள் 1,240,306. இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம் 10,760.

ஒடிஸாமின் தேன்கானல் மக்களவை தொகுதியில் மொத்தம் எண்ணப்பட்டுள்ள வாக்குகள் 1,184,033. ஆனால் இவிஎம்களில் பதிவாகியுள்ள வாக்குகள் 1,193,460. இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம் 9427.

படம் | ஏஎன்ஐ

தபால் வாக்குகள் தனியாகவும், இவிஎம்களில் பதிவான வாக்குகள் தனியாகவும் எண்ணபட்டிருப்பதக தேர்தல் ஆணைய தரவுகள் தெரிவிக்கின்றன. அப்படியிருந்தும் வாக்கு எண்ணிக்கை முடிவில் குளறுபடி ஏன் நிகழ்ந்துள்ளது என்பதை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்தால் மட்டுமே உண்மை தெரியவரும்.

ஒருசில வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படாமல் இருந்ததே, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகளைக் காட்டிலும், குறைவான வாக்குகள் பதிவாகியிருப்பதற்கான காரணமாக தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதிரி வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளும் தவறுதலாக எண்ணப்பட்டதும் குளறுபடிக்கு காரணமென மேம்போக்கான விளக்கங்களை தேர்தல் ஆணையம் அளித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட குளறுபடிகளால் பல இடங்களில் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதையும் அறிய முடிகிறது.

வடக்கு மும்பை தொகுதியில் மொத்தம் எண்ணப்பட்டுள்ள வாக்குகள் 951,582. ஆனால் இவிஎம்களில் பதிவாகியுள்ள வாக்குகள் 951,580. இதன்மூலம், 2 வாக்குகள் கூடுதலாக பதிவாகியிருப்பதாக வாக்கு எண்ணிக்கை முடிவில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், அங்கு போட்டியிட்ட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சிவசேனை(ஷிண்டே அணி) வேட்பாளர் ரவீந்திர தத்தாராம் வாய்க்கர் தன்னி எதிர்த்துப் போட்டியிட்ட சிவசேனை(உத்தவ் தாக்கரே அணி) வேட்பாளரமோல் கஜானனை விட வெறும் 48 வாக்குகள் மட்டுமே அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அதேபோல, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இவிஎம்களில் பதிவாகியுள்ள வாக்குகளில் 852 வாக்குகள் எண்ணப்படாமல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராஜேந்திர சிங் வெறும் 1,615 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அதேபோல, சத்தீஸ்கரின் காங்கெரில் இவிஎம்களில் பதிவாகியுள்ள வாக்குகளில் 950 வாக்குகள் எண்ணப்படாமல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ப்ரோஜ்ராஜ் நாக் 1,884 வாக்குகள் வித்தியாசத்தில் நூலிழையில் வெற்றி பெற்றுள்ளார்.

அதேபோல, உத்தர பிரதேசத்தின் ஃபரூக்காபாத்தில் இவிஎம்களில் பதிவாகியுள்ள வாக்குகளில் 460 வாக்குகள் எண்ணப்படாமல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் முகேஷ் ராஜ்புத் 2,678 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

படம் | ஏஎன்ஐ

வேட்பாளர்கள் இடையேயான வாக்கு வித்தியாசத்துடன் ஒப்பிடுகையில், எண்ணப்படாத வாக்குகள் குறைவாகவே இருப்பதால், மறு வாக்கு எண்ணிக்கை தேவையில்லை என்று தோன்றுகிறது.

ஆனால், எண்ணப்படாத வாக்குகள் எண்ணிக்கையானது, வாக்கு வித்தியாச எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கின்றன. இதன்மூலம், ஒட்டுமொத்த வாக்கு எண்ணிக்கை நடைமுறையும் சந்தேகத்திற்குள்ளாக்கப்படுவதை தவிர்க்க முடியாது.

இதையடுத்து எங்கெல்லாம் வேட்பாளர்கள் இடையேயான வாக்கு வித்தியாசம் குறைந்து, வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நிகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளதோ, அங்கெல்லாம் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் வலியுறுத்த வேண்டும். தேவைப்படும்பட்சத்தில் விவிபேட் கருவிகளில் பதிவான ஒப்புகைச் சீட்டுகளும் எண்ணப்பட வேண்டும்.

இந்த நிலையில், மேற்கண்ட குளறுபடிகளுக்கு தேர்தல் ஆணைய தரப்பிலிருந்து இதுவரை முறையான விளக்கமளிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com