சீனத்துக்கு பதிலடி: திபெத்தின் 30 இடங்களுக்கு மறுபெயர் சூட்டிய இந்தியா!
புதிதாக பதவியேற்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, திபெத்தின் 30 இடங்களுக்கு மறுபெயர் சூட்டும் பரிந்துரைக்கு அனுமதி வழங்கியிருக்கிறது.
அருணாசலப் பிரதேசத்தில் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாகக் கூறி சில பகுதிகளுக்கு சீனா பெயர் வைத்து, இந்தியாவை வெறுப்பேற்றியதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திபெத் பகுதியைப் பற்றி நன்கு வரலாற்று ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில்தான் இந்த மறுபெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும், இதற்கு தில்லி அனுமதி அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த மாற்றம் தொடர்பாக இந்திய ராணுவம் அறிவிப்பு வெளியிட்டு, அதற்கேற்ப இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்கான வரைபடங்களில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது.
இந்தியா - சீனா இடையிலான பிரச்னை, 2020ஆம் ஆண்டு மே மாதம் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் நடந்த மோதலைத் தொடர்ந்து தீவிரமடைந்தது. இது தொடர்பாக 21 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தும் பலனில்லை.
கடந்த ஏப்ரல் மாதம், அருணாச்சலில் 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றி அறிவித்திருந்தது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்தே, பிரதமராக மோடி மூன்றாவது முறை பதவியேற்ற நிலையில், சீனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திபெத்திய பகுதிகளுக்கு மறுபெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த 30 இடங்களில் 11 இடங்கள் மக்கள் வாழுமிடங்கள், 12 மலைப்பகுதிகள், 4 ஆற்றுப்படுகைகள், 1 ஏரி என உள்ளடங்கியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.