
மணிப்பூர் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் வார்த்தைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கவில்லை என்று மணிப்பூர் எம்.பி. கௌரவ் கோகோய் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நாக்பூர் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் திங்கள்கிழமை பேசிய மோகன் பாகவத், மணிப்பூர் ஓராண்டாக அமைதிக்காக காத்திருக்கிறது, வன்முறையால் எரிந்து கொண்டிருக்கிறது, முன்னுரிமை அடிப்படையில் தீர்க்க வேண்டும், தேர்தல் கொண்டாட்டத்தில் இருந்து வெளிவந்து நாடு சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
மோகன் பாகவத்தின் கருத்தை தொடர்ந்து, கெளரவ் கோகோய் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் வார்த்தைகளுக்கு பிரதமர் மோடி கவனம் செலுத்துவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மணிப்பூரை மோடி தவிர்ப்பார், சட்ட அமலாக்க அமைப்புகளை தவறாக பயன்படுத்தி இந்திய அரசியலமைப்பை வளைக்க முயற்சிப்பார்.
மணிப்பூருக்காக குரல் கொடுக்கவும், அரசியலமைப்பை பாதுகாக்கவும் இந்தியா கூட்டணியை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி.” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டுக்கு மேலாக மணிப்பூரில் வன்முறை நடைபெற்று வரும் சூழலில், அம்மாநில முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது வன்முறையாளர்கள் திங்கள்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.