கர்நாடகத்தின் சின்னனஹள்ளி கிராமத்தில் கடந்த நான்கு நாட்களாக அசுத்தமான தண்ணீரை குடித்து ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் இறந்துள்ளனர் மற்றும் பல குடியிருப்பாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
"சின்னனஹள்ளியில் ஜூன் 9ஆம் தேதியில் ஒரு கோயிலில் லட்சுமிதேவி மற்றும் கெம்பண்ணாதேவி தெய்வங்களின் வாராந்திர மற்றும் வருடாந்திர கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஜூன் 10ஆம் தேதியில் இந்த கண்காட்சியின் போது, அப்பகுதிமக்களுக்கு மேல்நிலைத் தொட்டியிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டதால், அப்பகுதியினர் கிட்டத்தட்ட நூறு பேர் நோய்வாய்ப்பட்டு, பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கினால் அனுமதிக்கப்பட்டும், மேலும் ஹனுமக்கா (85) என்ற ஒரு வயதான பெண்ணும் உயிரிழந்தார். ஜூன் 11ஆம் தேதியில் நாகம்மா (89) மற்றும் நாகப்பா (85) என்ற இரண்டு பெரியவர்களும், மூன்று வயது சிறுமி மீனாட்சியும் இறந்துள்ளனர். நேற்று (ஜூன் 12) சிக்காதசப்பா (76) மற்றும் பெடண்ணா (74) ஆகிய இரண்டு முதியவர்கள் மாவட்ட பொது மருத்துவமனையில் இறந்துள்ளனர்.
இன்று (ஜூன் 13) உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி. பரமேஸ்வரா மருத்துவமனைக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். அவருடன் துணை ஆணையர் சுபா கல்யாண் மற்றும் மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அஸ்கர் பேக் மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ.வும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே.என். ராஜண்ணாவும் உடன் சென்றனர்.
பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் மாசுபட்ட மேல்நிலைத் தொட்டியில் இருந்து குடிநீர் வழங்குவது தான் இதற்கான காரணம் எனத் தெரியவந்துள்ளது. ஊராட்சி வளர்ச்சி அலுவலர் பி.வி. முனிராஜு மற்றும் நீர்வள மேலாளர் எஸ். நாகராஜு ஆகியோர் கடமையில் அலட்சியம் செய்ததாக கூறி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அப்பகுதி மக்களிடம், மேல்நிலை தொட்டியில் இருந்து விநியோகிக்கப்படும் நீரைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.