
அரசியலைவிட சினிமா துறையில் பணியாற்றுவது எளிது என்று பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த செய்தி நிறுவனத்துக்கு சமீபத்தில் பேட்டியளித்த கங்கனா, தனது முதல் படம் வெளியானது முதல் அரசியலில் இணைய கட்சிகள் அணுகி வருவதாகவும், தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் அரசியலில் சேர வாய்ப்புகள் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கங்கனா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
“கேங்ஸ்டர் படம் வெளியானவுடன் அரசியலில் இணைய என்னை அணுகினார்கள். எனது கொள்ளுத் தாத்தா மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். இதுபோன்ற குடும்பத்தில் இருந்து சிறிது பிரபலமடையும் போது உள்ளூர் அரசியல் தலைவர்கள் அணுகுவது வழக்கம். எனது தந்தை, ஆசிட் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த எனது சகோதரி உள்ளிட்டோருக்கும் அரசியலில் இணைய வாய்ப்பு அளித்தனர். ஆகவே, அரசியல் கட்சிகள் எங்களை அணுகுவதும் வாய்ப்பு கிடைப்பதும் பெரிய விஷயம் இல்லை. நான் அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருந்திருந்தால், இவ்வளவு சிரமங்களை சந்தித்திருக்க வேண்டியதில்லை.
நான் இலக்கை நோக்கி பயணம் செய்யக் கூடியவர். சினிமா துறையில் நடிகை, இயக்குநர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளராக உள்ளேன். அரசியல் வாழ்க்கையில் மக்களுடன் என்னை தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டும் என்றால் எவ்வித நிர்பந்தமுமின்றி நான் முன்னேறிச் செல்லவேன்.
இருப்பினும், அரசியலை விட சினிமா துறையில் வேலை செய்வது ஒப்பீட்டளவில் எளிதானது என்பதை நான் மறுக்க மாட்டேன். மருத்துவர்களை போன்று இதுவும் கடினமான வாழ்க்கை. பிரச்னை உள்ளவர்கள் மட்டுமே அரசியல்வாதிகளை பார்க்க வருவார்கள். படம் பார்க்க போனால் நிம்மதியாக இருக்கும், ஆனால் அரசியல் அப்படியல்ல.” எனத் தெரிவித்துள்ளார்.
ஹிமாசல் பிரதேசம் மண்டி மக்களவைத் தொகுதியில் முதல் முறையாக பாஜக சார்பில் போட்டியிட்ட கங்கனா ரணாவத், 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த வாரம் சண்டீகர் விமான நிலையத்தில் பெண் பாதுகாப்புப் படை வீராங்கனை கங்கனாவின் கன்னத்தில் அறைந்த காணொலிகள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.