

சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் சோரெங்-சாகுங் சட்டப்பேரவைத் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்தார்.
இமய மலையையொட்டிய மாநிலமான சிக்கிமில் மக்களவைத் தோ்தலுடன் பேரவைத் தோ்தலும் ஒரே நேரத்தில் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி நடத்தப்பட்டது. மாநிலத்தில் மொத்தமுள்ள 32 பேரவைத் தொகுதிகளில் எஸ்கேஎம் கட்சி 31 இடங்களைக் கைப்பற்றி, ஆட்சியை தக்கவைத்தது.
பிரதான எதிா்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கு (எஸ்டிஎஃப்) ஓரிடம் மட்டுமே கிடைத்தது. இம்மாநிலத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வரை தொடா்ந்து 25 ஆண்டுகள் ஆட்சி செய்த இக்கட்சி, தற்போதைய தோ்தலில் படுதோல்வியைச் சந்தித்தது. தேர்தலில் தான் போட்டியிட்ட சோரெங்-சாகுங், ரெனோக் ஆகிய 2 தொகுதிகளிலும் பிரேம் சிங் தமாங் வெற்றி பெற்றார்.
இதையடுத்து சிக்கிம் முதல்வராக தொடா்ந்து இரண்டாவது முறையாக சிக்கிம் கிராந்திகாரி மோா்ச்சா (எஸ்கேஎம்) கட்சியின் தலைவா் பிரேம் சிங் தமாங் திங்கள்கிழமை பதவியேற்றாா். அவருடன் 11 புதிய அமைச்சா்களும் பதவியேற்றனா். இந்த நிலையில் சோரெங்-சாகுங் சட்டப்பேரவைத் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் இன்று ராஜிநாமா செய்தார்.
அதேசமயம் தனது மற்றொரு தொகுதியான ரெனோக்கை அவர் தக்க வைத்துக்கொண்டார். இதனிடையே அவரது ராஜிநாமாவை பேரவைத் தலைவர் எம் என் ஷெர்பா ஏற்றுக்கொண்டதாக சிக்கிம் சட்டப்பேரவை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.