
குவகாத்தி: அசாம் மாநில உள்துறை செயலர் சிலாதித்ய சேத்தியா, தனது மனைவி மூளைக் கட்டியால் செவ்வாயன்று உயிரிழந்த அடுத்த நிமிடத்தில், தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
குவாகாத்தியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை தனது மனைவி உயிரிழந்த சில நிமிடங்களில், தீவிர சிகிச்சைப் பிரிவு அறையிலேயே, சேத்தியா, தனது கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
செவ்வாய்க்கிழமை மாலை 4.25 மணிக்கு சேத்தியாவின் மனைவி அகமோனி சிகிச்சை பலனின்றி பலியான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வந்த சேத்தியா, தனது மனைவிக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கூறி மருத்துவ ஊழியர்களை வெளியே செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர்களும் வெளியே வந்த நிலையில், சிறிது நேரத்திலேயே துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டு அனைவரும் அந்த அறைக்குள் ஓடியிருக்கிறார்கள். ஆனால், அங்கே ரத்த வெள்ளத்தில், சேத்தியா தனது மனைவியின் உடல் அருகே விழுந்து கிடந்ததைப் பார்த்த மருத்துவர்களும், ஊழியர்களும், அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இது குறித்து மருத்துவமனை ஊழியர்கள் கூறுகையில், கடந்த 2 மாதங்களாக சேத்தியாவின் மனைவி இங்கு சிகிச்சை பெற்று வருகிறார். 3 நாள்களுக்கு முன்பு அவரது உடல் நிலை மோசமடைந்தது. அது குறித்து சேத்தியாவிடம் கூறினோம். அவரும் அதனை புரிந்துகொண்டார். ஆனால், இன்று இப்படி ஆகிவிட்டது என்று தெரிவித்துள்ளனர்.
சேத்தியாவுக்கு 2013ஆம் ஆண்டு திருமணமாகியிருக்கிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
கடந்த 2009-ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான சிலாதித்ய சேத்தியாவின் மனைவி மூளைக் கட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாா். குவாஹாட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தனது மனைவியின் இறப்பை சேத்தியாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால், மனைவி உயிரிழந்த அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவிலேயே தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
தின்சுகியா, சோனித்பூா் ஆகிய மாவட்டங்களின் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ள சேத்தியா, உள்துறை செயலராக பதவியேற்கும் முன்பு அசாம் காவல்துறையின் 4-ஆவது படையணியின் தளபதியாக இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.