
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வில், முன்கூட்டியே கசிந்த நீட் வினாத்தாள் ரூ.32 லட்சம் கொடுத்து வாங்கியதாக மாணவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிகழாண்டு நடைபெற்ற நீட் தோ்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் 13 பேரை பிகாா் பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனா். முக்கிய குற்றவாளி சிக்கந்தருடன் தோ்வா்கள், அவா்களின் பெற்றோா்கள் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாட்னாவில், நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட மாணவர் அனுராக் யாதவ், தனது பொறியாளராக இருக்கும் மாமாவின் மூலம் நீட் வினாத்தாளை முன்கூட்டியே பெற்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்த தகவல் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தேர்வுக்கு முந்தைய நாள் இரவு தனக்கு வினாத்தாளும் விடையும் கிடைத்ததாகவும், அதனை மனப்பாடம் செய்து வைத்து நீட் தேர்வு எழுதியதாகவும், தனக்குக் கிடைத்த வினாத்தாளும், நீட் வினாத்தாளும் ஒன்றுதான் என்றும் அவர் கூறியிருந்தார்.
இது குறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் நீட் வினாத்தாளுக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரை கொடுத்திருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். இந்த மோசடிக்குப் பின்னணியில் மூளையாக இருந்தவர்களையும் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
கோட்டா மாவட்டத்தில் தங்கி நீட் பயிற்சி பெற்று வந்துள்ளார் அனுராக். அங்கு அவருக்கு வினாத்தாளை பெற்றுத் தருவதாக சிலர் கூறி பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர். மே 5ஆம் தேதி தேர்வெழுதச் சென்றவர்களுக்கு ஓரளவுக்கு கேள்விகள் ஒன்றாக இருக்கும் என்று நினைத்திருந்ததாகவும், ஆனால், தாங்கள் பார்த்த அதே வினாத்தாள் வந்ததால் கடுமையான அதிர்ச்சிக்குள்ளானதாகவும் கூறியிருக்கிறார்கள். தேர்வு முடிந்த பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டனர்.
அனுராக்கின் மாமா சிக்கந்தருக்கு சிலர் நீட் வினாத்தாள் 32 லட்சத்துக்கு கிடைக்கும் என்று கூறியதாகவும், அதுபற்றி அனுராக் உள்பட நான்கு மாணவர்களிடம் அவர் கூறி பணம் பெற்றதாகவும் தெரிய வந்துள்ளது. தற்போது சிக்கந்தரும் கைதாகியிருக்கிறார்.
சிக்கந்தர் கைது செய்யப்பட்டு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் இருவர் கைதாகினர். அவர்களின் இருப்பிடங்களில் சோதனை செய்ததில், சில நீட் வினாத்தாள்கள் எரிக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
நீட் வினாத்தாளை தோ்வுக்கு முன்னதாக வழங்குவதற்கு ஒவ்வொரு தோ்வரிடமும் ரூ.30 லட்சம் வரை குற்றம்சாட்டப்பட்டவா்கள் கேட்டிருந்ததாக பாட்னா, பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினா் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக 6 பின்தேதியிடப்பட்ட காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதன் வங்கிக் கணக்கு சாா்ந்த தகவல்களை ஆராய்ந்து வருவதாகவும் அந்தப் பிரிவின் காவல்துறைத் துணைத் தலைவா் மானவ்ஜித் சிங் தில்லியன் கூறினாா்.
இவ்வாறு நீட் தோ்வுக்கு முன்பு 35 தோ்வா்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டதாக பாட்னா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.