
கேரளத்தில் கொலை வழக்கில் தண்டனை பெற்றவரும், சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவருமான சிவக்குமார் (45) காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தார்.
கோவையைச் சேர்ந்த சிவக்குமார், தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளும் தெரிந்தவர் என்பதும், பரோலில் வெளியே வந்து கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக - கேரள காவல்துறைக்கு சிக்கலை ஏற்படுத்தி வந்துள்ளார்.
நல்ல வசதியாக குடும்பத்தைச் சேர்ந்த சிவக்குமார் பட்டதாரியாவார். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு கேரளத்தில் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணையை எதிர்கொண்டுள்ளார். இதற்கிடையே வேளச்சேரியில் 2012ஆம் ஆண்டு தன்னுடன் தங்கியிருந்த ஏழுமலை என்பவரை கொலை செய்த வழக்கில் கிண்டி காவல்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையே, கேரள கொலை வழக்கில் இவர் குற்றவாளி என 2019ல் தீர்ப்பளிக்கப்பட்டது. 6 மாதங்கள் கழித்து கரோனா பொதுமுடக்கத்தின்போது கன்னூர் மத்திய சிறையிலிருந்து இவர் பரோலில் வெளியே வந்தார். முன்னதாக, நல்ல படித்த, பல மொழிகள் பேசும் வல்லவராக சிவக்குமார், சிறைச்சாலையில், அதிகாரிகளிடம் நன்மதிப்பைப் பெற்றிருந்தததால் அவர் வெளியே அனுப்பப்பட்டுள்ளார்.
ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டார். கிண்டி கொலை வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு 2020ல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. பிறகு, 3 ஆண்டுகளுக்குப் பின் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார்.
இதற்கிடையே, சென்னை காவல்துறை தீவிர குற்றத் தடுப்புபிரிவு தலைவர், காவல் ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம், சிவக்குமாரைப் பிடிக்க சிறப்புக் கவனம் செலுத்தினார். ஆனால், வயல்காட்டுக்குள் வாத்தைத் தேடுவது போல வே இருந்தது. கோவையில் உள்ள அவரது மனைவியிடம் காவல்துறை விசாரித்த போது, அவர்களை பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், மகள் திருமணத்துக்குக் கூட வரவில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். இதனை காவல்துறை உறுதிப்படுத்திக்கொண்டனர்.
பிறகு, அவரது மனைவியின் பல்வேறு வங்கிக் கணக்குகளை காவல்துறை ஆராய்ந்தபோது, அதில் சில சந்தேகப்படும் பணப்பரிவர்த்தனைகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பெங்களூருவில் இருக்கும் வங்கியிலிருந்து ஒரு சிறிய தொகை அவ்வப்போது வங்கிக் கணக்குக்குப் போடப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிக்குச் சென்ற காவல்துறை, அடங்கிருக்கும் இந்திய உணவகத்தில் விசாரணை செய்தபோது, அங்கு வேலை செய்த பணியாளர்கள், சிவக்குமாரின் புகைப்படத்தைப் பார்த்ததும், இவர் தங்களுடன் பணியாற்றி வந்ததை உறுதி செய்தனர்.
இந்த தகவலைத் தொடர்ந்து அவர்கள் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி, ஈரோட்டில் உள்ள உணவகத்தில் காசாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சிவக்குமாரை கைது செய்துள்ளனர். ஒரே இடத்தில் வேலை செய்யாதது, அவ்வப்போது சிம்கார்டுகளை மாற்றுவது என பல விஷயங்களை சிவக்குமார் கையாண்டதால் அவரைப் பிடிப்பதில் காவல்துறைக்கு சவாலாக இருந்துள்ளது என்கிறார்கள் காவல்துறையினர்.
சிவக்குமார் ஒழுக்கமாக, எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாமல், மேலாண்மையில் சிறந்து விளங்கியதால், பல்வேறு பகுதியில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு பிடித்துப்போக அவரை பணிக்கு அமர்த்திக்கொண்டுள்ளனர். தமிழ் உள்ளிட்ட பல மொழிகள் தெரியும் என்பதால், ஹிந்தி மொழி பேசும் பணியாளர்களை வேலை வாங்குவதற்கும் சிவக்குமாரின் திறன் பயன்பட்டுள்ளதால், பல இடங்களில் இவருக்கு எளிதாக வேலை கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், சிவக்குமாரிடம் பேசுவதற்கு என்று அவரது மனைவி தனியாக ஒரு சிம்கார்டை பயன்படுத்தி வந்ததும், பல நேரங்களில் அவர்கள் சந்தித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
உணவகத்தில் சிவக்குமார் வேலை செய்வதை அறிந்துகொண்ட காவல்துறையினர் திட்டம் ஒன்றைத் தீட்டினர். மதுரை ஸ்டைலில் பரோட்டா செய்யத் தெரிந்த காவலர், ஒரு சில வாரங்களுக்கு முன்பு, உணவகத்துக்குச் சென்றார், தான் பரோட்டா மாஸ்டர் என்று கூறி, உணவகம் தொடங்க விரும்புவதாகவும், அதன் நுணுக்கங்களை அறிந்துகொள்ள விரும்புவதாகவும் கூறி உணவகத்தை அணுகியிருக்கிறார். அவர் சிவக்குமாரிடம் பழகி, உரிய நேரத்தில் காவல்துறையினர் உணவகத்தை சுற்றிவளைத்து, எந்த அசம்பாவிதமும் இன்றி கைது செய்துள்ளனர். தற்போது கேரள சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
ஒரு சிறிய தவறு நேரிட்டிருந்தால் கூட, எங்களிடமிருந்து அவர் தப்பியிருப்பார், பிறகு அவரை கண்டுபிடிக்க பல ஆண்டுகள் ஆகியிருக்கும் என்கிறார்கள் காவல்துறையினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.