
நெட் தோ்வு முறைகேடு தொடா்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வழக்குப் பதிவு செய்திருக்கும் நிலையில், வினாத்தாள் கசியக் காரணமாக இருந்த சேனல்கள் அனைத்தையும் முடக்கியிருப்பதாக டெலிகிராம் உறுதி செய்திருக்கிறது.
நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணியிடத்துக்கு தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் தேசிய தோ்வு முகமை சாா்பில் ‘நெட்’ தோ்வு நடத்தப்படுகிறது.
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்ட நெட் தோ்வில், முறைகேடு நடந்ததாக எழுந்தப் புகாரினைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சகம் நெட் தேர்வை ரத்து செய்தது.
இந்த நிலையில், டெலிகிராம் மூலம், வினாத்தாள்கள் கசிந்ததாக எழுந்தப் புகாரினைத் தொடர்ந்து, வினாத்தாள் கசியக் காரணமாக இருந்த சேனல்களை முடக்கியிருப்பதாகவும், வினாத்தாள் கசிவு விவகாரத்தில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து எப்போது புகார் வந்தாலும், உடனடியாக தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன்படி, எங்களது சமூக தளம் உடனடியாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் டெலிகிராம் தெரிவித்துள்ளது.
தோ்வில் முறைகேடு நடைபெற்றது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதைத்தொடா்ந்து, அடையாளம் தெரியாத நபா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 120-பி (குற்றச்சதி), 420 (மோசடி) ஆகியவற்றின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
முன்னதாக, நெட் தோ்வுக்கு எதிராக முறைகேடு புகாா்கள் பெறப்படவில்லை என்றும் மாணவா்களின் நலனைப் பாதுகாக்க, எங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தாமாக முன்வந்து தோ்வை ரத்து செய்தோம் என்றும் மத்திய கல்வி அமைச்சக இணைச் செயலா் அறிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.