
தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மகனும், பாலிவுட் நடிகருமான சித்தார்த் மல்லையாவின் திருமணத்தில் தலைமறைவாக உள்ள லலித் மோடி கலந்து கொண்டதாக இணையத்தில் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
ஐபிஎல் நிர்வாகக் குழுவின் தலைவராக செயல்பட்ட லலித் மோடி, ரூ.753 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில், கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, பணமோசடி, வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் லலித் மோடியின் மீது பதியப்பட்ட நிலையில், இந்தியாவைவிட்டு வெளியேறி அவர் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், லண்டனில் நடைபெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவின் திருமணத்தில் லலித் மோடி கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கடந்த சனிக்கிழமை ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் உள்ள சொகுசு விடுதியில் சித்தார்த் மல்லையாவுக்கும் ஜாஸ்மினுக்கும் ஹிந்து முறைப்படியும், தொடர்ந்து கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற்றது.
மதுபான உற்பத்தி, விமான நிறுவனம் என பல்வேறு நிறுவனங்களை நடத்தி நாட்டின் முன்னணி தொழிலதிபராக இருந்தவர் விஜய் மல்லையா, இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் ரூ. 9000 கோடி கடன் பெற்று அதனை திருப்பித்தர இயலாமல், பிரிட்டனுக்கு தப்பியோடினார். அவரை இந்தியாவுக்கு அழைத்துவருவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.