
நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
மக்களவையின் 18-வது கூட்டத்தொடரில் கலந்து கொள்ள நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடி, பதவியேற்கவுள்ள அனைத்து எம்பிக்களையும் வரவேற்பதாக செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.
பிரதமர் மோடி பேசியதாவது:
“நாடாளுமன்ற ஜனநாயகத்தில் புகழ்பெற்ற நாள் இன்று. சுதந்திரத்துக்கு பிறகு நாட்டின் சொந்த நாடாளுமன்ற கட்டடத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இதுவரை பழைய நாடாளுமன்ற கட்டடத்திலேயே பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த குறிப்பிடத்தக்க நாளில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்பிக்களையும் மனதார வரவேற்கிறேன்.
அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், சுதந்திரத்துக்கு பிறகு இரண்டாவது முறையாக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு கட்சியை ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பளித்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் ஒரு பாரம்பரியத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்தோம். அரசாங்கத்தை பெரும்பான்மை முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால், நாட்டை வழிநடத்த ஒருமித்த கருத்து மிகவும் முக்கியமானது. 140 கோடி மக்களின் கனவை நிறைவேற்றுவதற்கும், அனைவரையும் ஒன்றாக அழைத்துச் செல்வதற்கான எங்களின் முயற்சி நிலையாக இருக்கும். அரசியலமைப்பின் புனிதத்தை பின்பற்றி, அனைவரையும் ஒன்றிணைத்து, முடிவுகளை விரைவாக எடுத்து முன்னோக்கிச் செல்ல விரும்புகிறோம்.
நாளைய தினமான ஜூன் 25, இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த கறையின் 50 ஆண்டுகளை குறிக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் முற்றிலும் நிராகரிக்கப்பட்டு, அரசியலமைப்பின் ஒவ்வொரு பகுதியும் துண்டு துண்டாக கிழிக்கப்பட்டு நாடு சிறைச்சாலையாக மாறியது. 50 ஆண்டுகளுக்கு முன்பு செய்த இதுபோன்ற செயலை மீண்டும் இந்தியாவில் யாரும் செய்யத் துணிய விடமாட்டோம் என்று நாட்டு மக்கள் தீர்மானம் எடுக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதலின்படி, சாமானிய மக்களின் கனவுகளை நிறைவேற்ற தீர்மானம் எடுப்போம்.
நாட்டு மக்கள் எதிர்க்கட்சியினரிடம் இருந்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றனஎ. ஜனநாயகத்தின் மாண்பைக் காக்க, நாட்டின் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை எதிர்க்கட்சிகள் நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.
நாட்டுக்கு ஒரு நல்ல பொறுப்புள்ள எதிர்க்கட்சி தேவை. இந்த 18வது மக்களவையில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் சாமானியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சிப்பார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.