
சண்டீகர் நகரத்தில் அமைந்துள்ள தனியார் வணிக வளாகம் ஒன்றில் உள்ள குழந்தைகளுக்கான கேளிக்கை விளையாட்டுப் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
வணிக வளாகத்தில் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விளையாட்டு ரயில் ஒன்று நிலைதடுமாறி சரிந்து விழுந்ததில் அதில் உல்லாசமாக சவாரி செய்த சிறுவன் ஷாபாஸ் சிங் உயிரிழந்துள்ளான்.
கடந்த சனிக்கிழமை(22-ஆம் தேதி) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பொதுவாக குழந்தைகளுக்கான விளையாட்டு ரயில், குறைந்த வேகத்திலேயே இயக்கப்படும். இந்த நிலையில், சற்று அதிவேகமாக அந்த ரயில் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே வேகத்தில் வட்ட வடிவத்தில் திரும்பிய ரயிலில், அதன் கடைசிப்பெட்டி சரிந்து விழுந்தது. இதன் காரணமாக அதில் உட்கார்ந்திருந்த குழந்தைகள் கீழே விழுந்துள்ளனர்.
குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட அந்த ரயிலில் ஜன்னல்களில் கம்பிகளின்றி மூடப்படாமல் திறந்த வண்ணம் இருந்ததே குழந்தைகள் வெளியே விழ காரணமாக அமைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் சிறுவன் ஷாபாஸ் சிங்கின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று(ஜூன் 24) சிறுவன் ஷாபாஸ் சிங் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பால் முகம் மாறா சிறுவனின் மரணத்தால் சிறுவனின் குடும்பத்தினர் மீளாத் துயரில் உள்ளனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டு ரயிலை இயக்கிய நபர் கவனக்குறைவாக செயல்பட்டதே விபத்துக்கான முக்கிய காரணமெனக் கூறப்படுகிறது. இதையடுத்து ரயிலை இயக்கிய நபர் சௌரவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.