
வயநாடு தொகுதியை ராஜிநாமா செய்த ராகுல் காந்தி, ரே பரேலி தொகுதி எம்.பி.யாக, மக்களவையில் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்ற போது அரசமைப்புப் புத்தகத்தை கையில் வைத்திருந்தார்.
18-ஆவது மக்களவையின் முதல்நாள் அமா்வில் பிரதமா் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சா்கள், மக்களவை உறுப்பினா்களாக பதவியேற்ற நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் பதவியேற்பு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், ரே பரேலி தொகுதி மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, அரசமைப்புப் புத்தகத்தை கையில் ஏந்தியபடி, பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்றுக் கொண்ட பிறகு, வாழ்க இந்தியா, வாழ்க அரசியல் சாசனம் என்று முழக்கமிட்டார்.
மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்று தேர்வான மக்களவை உறுப்பினா்கள் முதன் முறையாக நாடாளுமன்றத்தின் மக்களவை கூடும்போது பதவியெற்றுக்கொள்ளும் விதமாக மக்களவைத் தலைவா் முன்பு உறுதிமொழியை ஏற்றுக்கொள்வார்கள்.
இதன்படி குடியரசுத் தலைவா் மாளிகையில் இடைக்கால மக்களவைத் தலைவராக பதவிஏற்ற பா்த்ரு ஹரி மகதாப், அவையை நடத்தி புதிய உறுப்பினா்களுக்கு பதவிப் பிரமானம் செய்துவைத்து வருகிறார்.
மக்களவையில் உறுப்பினா்கள் வாசிக்கும் உறுதிமொழியில், மக்கள் சபையின் உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பெற்ற.......... என்னும் நான், சட்டப்பூா்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசமைப்பில் உண்மையான நம்பிக்கையும் பற்றுதலும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நோ்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் என்றும் உளமாா் உறுதி கூறுகின்றேன் என குறிப்பிட்டு பதவியேற்று வருகிறார்கள்.
18-ஆவது மக்களவைத் தோ்தலில் வயநாடு, ரேபரேலி என இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் ராகுல் காந்தி. ஒருவர் ஒரு தொகுதிக்கு மட்டுமே எம்.பி.யாகவோ அல்லது எம்எல்ஏவாகவோ இருக்க முடியும் என்ற விதியின்படி வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தாா். இன்று ரே பரேலி தொகுதி எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார்.
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலா் பிரியங்கா காந்தி போட்டியிடவுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.