இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க ‘பென் பின்ட்டர் விருது’ வழங்கப்படுவதாக இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய அளவில் முக்கிய எழுத்தாளராகவும், அரசியல் செயற்பாட்டாளராகவும் அறியப்படும் அருந்ததி ராய், இந்திய எழுத்தாளர்களில் முதல் புக்கர் பரிசை ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ எனும் தனது முதல் நாவலுக்காகப் பெற்றார்.
14 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் குறித்துத் தெரிவித்தக் கருத்துகளுக்கு தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அவர் மீது சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் கீழ் (UAPA) நடவடிக்கை எடுக்க டெல்லி துணைநிலை ஆளுநர் வி.ஜி. சக்சேனா அனுமதி அளித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று அருந்ததி ராயின் அச்சமற்ற, உறுதியான எழுத்துகளை கௌரவிக்கும் விதமாக ஆங்கில பென் தொண்டு நிறுவனத்தின் சார்பில் ‘பென் பின்ட்டர்’ விருது வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.
ஆங்கில பென் தொண்டு நிறுவனம் இலக்கியத்தைச் சிறப்பிக்கவும், கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் நோபல் பரிசு பெற்ற நாடக ஆசிரியர் ஹெரால்ட் பின்ட்டர் நினைவாக இந்த விருதினை கடந்த 2009-ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.
“இந்த விருதினை ஏற்றுக் கொள்வதில் பெருமையடைகிறேன். உலகில் நடந்து வரும் திருப்பங்களை பற்றி எழுத நம்முடன் ஹெரால்ட் பின்ட்டர் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அவர் இல்லாவிட்டாலும், அவருடைய காலணிகளில் நின்று நாம் அந்தப் பணியைச் செய்யவேண்டும்” என்று அருந்ததி ராய் கூறியுள்ளார்.
அருந்ததி ராயை நடுவர் குழுவைச் சேர்ந்த பென் அமைப்பின் தலைவர் ரூத் போர்விக், நடிகரும் செயற்பாட்டாளருமான காலித் அப்தல்லா, எழுத்தாளரும் இசையமைப்பாளருமான ரோஜர் ராபின்சன் ஆகியோர் பென் பிண்டர் பரிசுக்கு தேர்ந்தெடுத்துள்ளனர்.
பிரிட்டன் நூலகத்தில் வருகிற அக்டோபர் 10 அன்று நடக்க இருக்கும் நிகழ்வில் அவருக்கு விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சல்மான் ருஷ்டி, மார்கரெட் அட்வுட், டாம் ஸ்டாப்பர்ட் மற்றும் கரோல் ஆன் டஃபி ஆகியோர் இதற்கு முன்பு பின்ட்டர் பரிசு பெற்ற எழுத்தாளர்கள்.
சுற்றுச்சூழல் சீர்குலைவு முதல் மனித உரிமை மீறல்கள் வரை அனைத்துப் பிரச்னைகளிலும் அருந்ததி ராய் தனது கூர்மையான கருத்துகளை வெளிப்படுத்துவது, புறக்கணிக்கப்படுபவர்களுக்கு ஆதரவளிப்பது போன்றவை அவரது அர்ப்பணிப்பை நிரூபிக்கின்றது என்று நடுவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த விருது 'துணிவுமிக்க எழுத்தாளர்' ஒருவருடன் பகிரப்படும் என்றும், சொந்த பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கு பெரிய ஆபத்து ஏற்படும் நிலையிலும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது பகிர்ந்து வழங்கப்படும் என்றும் நடுவர் குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசு பகிரப்படும் இறுதிப் பட்டியலில் உள்ள மற்றொரு எழுத்தாளரை ஆங்கில பென் அமைப்பு தேர்ந்தெடுக்கும் என்றும், அந்த எழுத்தாளர் பெயரை அருந்ததி ராய் அறிவிப்பார் என்றும் அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.