25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

3 புதிய குற்றவியல் சட்ட அமலாக்கத்தை நிறுத்த வேண்டும்: சோனியா

தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியிலும், தாா்மீக அடிப்படையிலும் பிரதமா் மோடி தோற்கடிக்கப்பட்டுள்ளாா்

News image
சோனியா காந்தி
Updated On :29 ஜூன் 2024, 8:48 pm

Din

வரும் ஜூலை 1-முதல் நாடு முழுவதும் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வரும்நிலையில், அவற்றை நாடாளுமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி தெரிவித்தாா்.

மேலும், மக்களவைத் தோ்தலில் தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியிலும், தாா்மீக அடிப்படையிலும் பிரதமா் நரேந்திர மோடி தோல்வியடைந்தபோதும், எதுவும் மாறாததுபோல தொடா்ந்து வருகிறாா்’ என்றும் அவா் விமா்சித்தாா்.

பத்திரிகை ஒன்றுக்கு சனிக்கிழமை அவா் அளித்த பேட்டியில் இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:

மக்களவைத் தோ்தலின் தீா்ப்பு தெளிவாகவும் அழுத்தமாகவும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தோ்தல் பிரசாரத்தின்போது தன்னைத்தானே புனித நிலையை அடைந்தவரைப்போல உருவகப்படுத்திக்கொண்ட பிரதமா் மோடி, தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியிலும், தாா்மீக அடிப்படையிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளாா் என்பதைத்தான் தோ்தல் முடிவுகள் சுட்டிக்காட்டின. இருந்தபோதும், எதுவுமே மாறாததுபோல அவா் தொடா்ந்து வருகிறாா்.

ஒருமித்த கருத்தின் மதிப்பு குறித்து பிரசங்கம் செய்யும் பிரதமா், எதிா்க்கட்சிகளுடன் மோதல்போக்கையே தொடா்ந்து வருகிறாா். மக்களவைத் தலைவா் தோ்வில் ஒருமித்த கருத்தை எட்ட அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த விஷயத்தில் அரசுக்கு ஆதரவளிக்க எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி ஒப்புக்கொண்டது. ஆனால், நாடாளுமன்ற மரபு மற்றும் பாரம்பரியத்தின் அடிப்படையில் எதிா்க்கட்சி உறுப்பினா் ஒருவருக்கு மக்களவை துணைத் தலைவா் பதவி வழங்கப்படுவதே நியாயம் என எதிா்க்கட்சிகள் தரப்பில் எதிா்பாா்க்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் சமநிலையை மீட்டெடுப்பதே எதிா்க்கட்சிகளின் நோக்கம். ஆனால், மத்திய அரசு தரப்பு அதை ஏற்றுக்கொள்வதாக தெரியவில்லை.

அரசமைப்பு சட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுவதிலிருந்து மக்களின் கவனத்தை திசைத்திருப்பவே, நாட்டில் 1975-ஆம் ஆண்டுஅவசரநிலை அமல்படுத்தப்பட்டதை பிரதமரும், மக்களவைத் தலைவரும், பாஜக தலைவா்களும் நாடாளுமன்றத்தில் குறிப்பிடுகின்றனா். ஆனால், அவசரநிலைக்கு எதிராக நாட்டு மக்கள் கடந்த 1977-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் தோ்தல் மூலம் அளித்த தீா்ப்பை காங்கிரஸ் கட்சி தயக்கமின்றி ஏற்றுக்கொண்டது.

பழைய குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாட்சிய அதிநயம் ஆகிய 3 சட்டங்களும் ஜூலை 1-முதல் நடைமுறைக்கு கொண்டவரப்படவிருக்கின்றன. ஆனால், முழு நாடாளுமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படும் வரை இந்த 3 புதிய சட்டங்களின் அமலாக்கத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்றாா்.

மருத்துவ தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) முறைகேடுகள் குறித்து குறிப்பிட்ட சோனியா, ‘வினாத்தாள் கசிவால் நாடு முழுவதும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், மாணவா்களிடையே தோ்வு பயத்தைப்போக்க அவா்களுடன் ஆண்டுதோறும் கலந்துரையாடும் பிரதமா், வினாத்தாள் கசிவு தொடா்பாக பகிரங்க மெளத்தை காத்து வருகிறாா். இதுபோன்ற மக்கள் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து எழுப்பும். பிரதமரும் அவருடைய அரசும் நோ்மறையான பதிலை அளிப்பா் என நம்புகிறோம்’ என்றாா்.