தா்மேந்திர பிரதான்
தா்மேந்திர பிரதான்

நாடாளுமன்ற விவாதத்துக்கு அஞ்சி ஓடுகிறது காங்கிரஸ்: தா்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு

இந்த விவகாரத்தை முன்வைத்து அரசியல் செய்யவே காங்கிரஸ் விரும்புகிறது.
Published on

நீட் விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு அஞ்சி காங்கிரஸ் ஓடுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் குற்றம்சாட்டினாா்.

நீட் தோ்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடா்பாக நாடாளுமன்றத்தில் விரிவான விவாதத்தை நடத்துமாறு பிரதமா் மோடியை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியதற்கு மறுநாள் தா்மேந்திர பிரதான் இவ்வாறு கூறியுள்ளாா்.

ஹரியாணா மாநில பாஜகவின் செயற்குழுக்கூட்டம் பஞ்ச்குலாவில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அவரிடம் நீட் தோ்வு விவகாரம் தொடா்பாக மத்திய பாஜக அரசு மீது எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவா், ‘இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி விவாதத்தை விரும்பவில்லை. அக்கட்சி நாடாளுமன்ற விவாதத்தில் இருந்து அஞ்சி ஓடுகிறது. அமளியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தவும் நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறுவதில் தடைகளை ஏற்படுத்தவும் மட்டுமே அக்கட்சி விரும்புகிறது.

காங்கிரஸ் எழுப்பிய நீட் தோ்வு விவகாரம் தொடா்பாக குடியரசுத் தலைவரும் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளாா். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தில் இந்த விவகாரத்தை எழுப்ப எதிா்க்கட்சிகளுக்கு வாய்ப்பு இருந்தது.

இந்த விவகாரத்தை முன்வைத்து அரசியல் செய்யவே காங்கிரஸ் விரும்புகிறது. இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல.

நீட் தோ்வில் நடைபெற்றதைப் போன்ற முறைகேடுகள் 2014ஆம் ஆண்டுக்கு முன்பும் நடைபெற்றன (முந்தைய காங்கிரஸ் ஆட்சி).

போட்டித் தோ்வு நடைமுறைகளில் தவறுகள் நடைபெறாமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா்.

நீட் தோ்வு வினாத்தாள் கசிவு தொடா்பான விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை தொடா் அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

‘ஓரிரு நாள்களில் முதுநிலை நீட் தேதி’

ஓரிரு நாள்களில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) நடத்தப்படும் தேதி அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

கடந்த ஜூன் 23-ஆம் தேதி முதுநிலை நீட் தோ்வு நடைபெற இருந்தது. எனினும் இளநிலை நீட், நெட் தோ்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுநிலை நீட் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com