
தில்லியில் காரில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளை விட்டுவிட்டு, பெற்றோர்கள் கடைக்குச் சென்ற நிலையில் அக்காரை, மர்ம நபர் ஒருவர் திருடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் தூக்கிங்க்கொண்டிருந்ததால், ஏசி காற்றுக்காக கார் என்ஜினை இயங்கவிட்டுச் சென்றுள்ளனர். இதனை நோட்டம் விட்ட மர்ம நபர் காரைத் திருடிச் சென்றுள்ளார்.
தில்லி லக்ஷ்மி நகர் பகுதியில் உள்ள இனிப்புக் கடைக்கு வெளியே காரை நிறுத்திவிட்டு பெற்றோர் இருவர் கடைக்குச் சென்றுள்ளனர். குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்ததால், காரின் என்ஜினை அணைக்காமல் ஏசியை இயங்கவிட்டு இருவரும் கடைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர், உள்ளே குழந்தைகள் இருந்ததை அறியாமல் காரைத் திருடிச் சென்றுள்ளார். பெற்றோர்கள் திரும்ப வந்து பார்க்கும்போது காரும், குழந்தைகளும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இரவு 11.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
காரில் இருந்த இரு குழந்தைகளில் (11 வயது பெண், 2 வயது ஆண் குழந்தை) ஒருவரிடம் தனது அம்மாவின் செல்போன் இருந்துள்ளது. அந்த செல்போன் மூலம் மர்ம நபர் தொடர்புகொண்டு பெற்றோரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார்.
செய்வதறியாது தவித்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் உடனே புகார் அளித்தனர். காரில் குழந்தைகள் இருந்ததால் உடனடியாக தேடுதல் பணிகளை காவல் துறையினர் முடுக்கிவிட்டனர்.
20 வாகனங்களில் தேடுதல் பணிகளில் ஈடுபட்டனர். சுமார் 3 மணிநேரம் திருடப்பட்ட காரை பின்தொடர்ந்து காரையும் குழந்தையையும் காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
காவல் துறையினர் அனைத்து திசைகளிலும் சுற்றிவளைத்ததை உணர்ந்த மர்ம நபர், காரையும் குழந்தையையும் விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். காரில் இருந்த பணம், நகையையும் அப்படியே இருந்துள்ளது.
காவலர்களிடம் சிக்காமல் தப்பிக்க வேண்டும் என்ற அவசரத்தில் காரில் எதையும் திருடவில்லை என காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும் மர்ம நபரிடம் கத்தியும், சுத்தியலும் இருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
கார் திருடப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு மர்ம நபர் யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.