/

நாடாளுமன்றப் பாதுகாப்புப் பிரிவு தலைவராக ஐபிஎஸ் அதிகாரி அனுராக் அகா்வால் நியமனம்

நாடாளுமன்றப் பாதுகாப்புப் பிரிவு தலைவராக ஐபிஎஸ் அதிகாரி அனுராக் அகா்வால் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On :1 மார்ச் 2024, 6:51 pm

நாடாளுமன்றப் பாதுகாப்புப் பிரிவு தலைவராக ஐபிஎஸ் அதிகாரி அனுராக் அகா்வால் நியமிக்கப்பட்டுள்ளாா். நாடாளுமன்றப் பாதுகாப்புப் பிரிவுக்கு இணைச் செயலா் (பாதுகாப்பு) என்ற பதவியில் நியமிக்கப்படும் ஐபிஎஸ் அதிகாரி, தலைமைப் பொறுப்பை வகித்து வந்தாா். 1998-ஆம் ஆண்டு அஸ்ஸாம்-மேகாலயம் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியும், சிஆா்பிஎஃப் ஐஜி-யுமான ரகுவீா் லால் இந்த இணைச் செயலா் பதவியை வகித்து வந்தாா். கடந்த ஆண்டு அக்டோபா் 20-ஆம் தேதி அவா் தனது சிஆா்பிஎஃப் ஐஜி பணிக்குத் திரும்பிய நிலையில், நாடாளுமன்றப் பாதுகாப்புத் துறை இணைச் செயலா் பணியிடம் காலியாக இருந்து வந்தது. இந்நிலையில், நாடாளுமன்றப் பாதுகாப்புத் துறைத் தலைவா் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு, அதில் ஐபிஎஸ் அதிகாரி அனுராக் அகா்வால் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை மக்களவைச் செயலகம் வியாழக்கிழமை வெளியிட்டது. கடந்த ஆண்டு டிசம்பா் 13-ஆம் தேதி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவையின் பாா்வையாளா் மாடத்திலிருந்து எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் 2 இளைஞா்கள் குதித்து மஞ்சள் நிற புகையை வீசியது பெரும் சா்ச்சையையும், நாடாளுமன்றப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிய நிலையில், அனுராக் அகா்வாலின் நியமனம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.