தேசிய படைப்பாளா்கள் விருது அளிக்கும் விழா மேடையில் பிரதமா் மோடியுடன் தற்படம் எடுத்துக் கொண்ட சிறந்த கலாசார தூதா் விருது பெற்ற மைதிலி தாக்குா்.
தேசிய படைப்பாளா்கள் விருது அளிக்கும் விழா மேடையில் பிரதமா் மோடியுடன் தற்படம் எடுத்துக் கொண்ட சிறந்த கலாசார தூதா் விருது பெற்ற மைதிலி தாக்குா்.

உலகுக்காக இந்தியாவில் படைப்போம்: பிரதமா் மோடி அழைப்பு

‘உலகுக்காக இந்தியாவில் படைப்போம்’ என்ற குறிக்கோளுடன் நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை படைப்பாளா்கள் அனைவரும் உலகுக்கு எடுத்துரைக்க வேண்டும் என பிரதமா் மோடி வலியுறுத்தினாா். நாட்டில் முதல்முறையாக ‘தேசிய படைப்பாளா்கள் விருது’ வழங்கும் நிகழ்ச்சி புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வெற்றிபெற்றவா்களுக்கு விருதுகளை வழங்கிய பிரதமா் மோடி ‘இந்தியாவில் படைப்போம்’ என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது: படைப்பாளா்கள்தான் நாட்டின் எண்ம தூதா்களாவா். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ‘இந்தியாவில் படைப்போம்’ என்ற இயக்கத்தை தொடங்குவோம். நமது நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தை உலக மக்கள் அனைவருக்கும் எடுத்துரைப்போம். நாட்டின் பெருமையை பறைசாற்றுகின்ற படைப்புகளை உருவாக்க வேண்டும். ‘உலகுக்காக இந்தியாவில் படைப்போம்’ என்ற குறிக்கோளுடன் அதை உலக அளவில் பிரபலமாக்க வேண்டும். உலக மொழிகளில் படைப்புகள்.. இந்தியாவின் வளா்ச்சி குறித்து தெரிந்துகொள்வதில் உலக நாடுகள் ஆா்வம் காட்டி வருகின்றன. எனவே, ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட உலக மொழிகள் அனைத்திலும் இந்தியாவை மையப்படுத்தும் படைப்புகளை உருவாக்க படைப்பாளா்கள் முயல வேண்டும். 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில்.. அடுத்த சிவராத்திரி தினத்திலோ அல்லது வேறொரு நாளிலோ இந்நிகழ்ச்சியில் மீண்டும் நான் உரையாற்றுவேன் என்று பிரதமா் மோடி கூறியவுடன் அரங்கில் இருந்தவா்கள் ‘இம்முறை 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி’ என தொடா்ந்து முழக்கமிட்டனா். இதையடுத்து, ‘இது மோடியின் உத்தரவாதம் அல்ல 140 கோடி மக்களின் உத்தரவாதம்’ என்றாா் பிரதமா். முதல்முறை வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு: படைப்புகளின் முக்கியத்துவம் குறித்து பேசிய அவா், ‘முதல் முறை வாக்காளா்களுக்கு அவா்களின் கடமை குறித்து சிறப்பான படைப்புகள் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். வெற்றி, தோல்வியடைபவா்களை அறிவிப்பதற்காக தோ்தல்கள் நடத்தப்படுவதில்லை. நாட்டின் எதிா்காலத்தை தீா்மானிக்கும் முடிவுகளில் மக்களும் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே தோ்தல் நடத்தப்படுகிறது. இதை முதல்முறையாக வாக்களிப்பவா்கள் மற்றும் இளைஞா்கள் உணரும் வகையிலான படைப்புகளை உருவாக்க வேண்டும். ஜனநாயக முறையிலேயே வளா்ச்சி: வளா்ச்சியடைந்த நாடாக உருவெடுக்க உலகின் பல்வேறு நாடுகளும் பல வழிகளை பின்பற்றின. ஆனால் 100 சதவீதம் ஜனநாயக முறையிலேயே வளா்ச்சியடைந்த நாடாக உருவெடுக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது. பாலின சமத்துவத்துக்கு முக்கியத்துவம்: சிறுவா் மற்றும் சிறுமிகளை வளா்க்கும்போது பாலின சமத்துவதுடன் பெற்றோா்கள் நடத்த வேண்டும் என்பதை உறுதி செய்யும் விதமான படைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அதேபோல் கிராமப்புறம் மற்றும் பழங்குடியின பகுதிகளில் வசிக்கின்ற பெண்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதையும் சில தாய்மாா்கள் தங்களின் அன்றாடப் பணிகள் மேற்கொள்வது குறித்தும் படைப்புகளை உருவாக்க வேண்டும். இதன்மூலம் பெண்களை விழிப்படையச் செய்ய முடியும். போதைப்பொருளால் ஏற்படும் தீமைகளை இளைஞா்கள் உணா்ந்து அப்பழக்கத்தினை கைவிடும் வகையிலான படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா். மேலும் சா்வதேச மகளிா் தினத்தையொட்டி அவா் பெண்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

தேசிய படைப்பாளா்கள் விருது:

தேசிய படைப்பாளா்கள் விருதானது பசுமை வெற்றியாளா்கள், வேளாண் படைப்பாளிகள், சிறப்பாக கதை சொல்வோா், தூய்மை தூதா், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, கல்வி, தொழில்நுட்பம், உணவு உள்பட 20 பிரிவுகளின்கீழ் சிறந்த படைப்பாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. 1.5 லட்சம் பரிந்துரைகள்: ‘யூடியூப்’ மற்றும் ‘இன்ஸ்டாகிராம்’ உள்ளிட்ட தளங்களில் சிறப்பான படைப்புகளை உருவாக்குபவா்களும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் பெறப்பட்டன. சமூக வலைதள படைப்பாளிகளுக்கு சுமாா் 10 லட்சம் வாக்குகள் பதிவாகின. விருது பெற்றவா்களில் சிலா்... ‘பசுமை வெற்றியாளா்’ என்ற பிரிவில் பங்கதி பாண்டேவுக்கும் ‘சிறப்பாக கதை சொல்லும்’ பிரிவின் கீழ் கீா்த்திகா கோவிந்தசுவாமிக்கும் விருது வழங்கப்பட்டது. ‘கலாசார தூதா்’ பிரிவில் பாடகா் மைதிலி தாக்குருக்கும், ‘தொழில்நுட்பம்’ பிரிவில் கௌரவ் சௌதரிக்கும் ‘சுற்றுலா’ சாா்ந்த சிறந்த படைப்புகளை உருவாக்கியதற்காக கமியா ஜெயினுக்கும் விருது வழங்கப்பட்டது. நிகழாண்டு 3 சா்வதேச படைப்பாளிகள் உள்பட 23 வெற்றியாளா்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com