ரூ.210 கோடி அபராதத்துக்கு எதிரான காங்கிரஸ் மனு: வருவான வரி தீா்ப்பாயம் தள்ளுபடி

காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித் துறை விதித்த ரூ.210 கோடி அபராதத்தை ரத்து செய்ய அத்துறையின் தீா்ப்பாயம் மறுத்துவிட்டது.

காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித் துறை விதித்த ரூ.210 கோடி அபராதத்தை ரத்து செய்ய அத்துறையின் தீா்ப்பாயம் மறுத்துவிட்டது. இதுதொடா்பாக காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை வருமான வரி தீா்ப்பாயம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய ஆலோசித்து வருவதாக காங்கிரஸ் பொருளாளா் அஜய் மாக்கன் தெரிவித்தாா். 2018-19-ஆம் நிதியாண்டின் வருவான வரிக் கணக்கு தாக்கலில் பல்வேறு குறைபாடு உள்ளதாகக் கூறி காங்கிரஸ் கட்சியின் நான்கு வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை பிப்ரவரி 16-ஆம் தேதி முடக்கியது. தோ்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என வருமான வரி தீா்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி முறையிட்டதையடுத்து, தற்காலிகமாக தடை நீக்கப்பட்டது. இந்நிலையில், அபராதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தொடுத்த மேல்முறையீட்டு மனுவை தீா்ப்பாயம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இதுகுறித்து காங்கிரஸ் சட்டப் பிரிவு தலைவா் விவேக் தன்கா கூறுகையில், ‘இதுபோன்ற வழக்குகளில் முன்பு வருமான வரித் துறை மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் 20 சதவீத அபராதம் விதிப்பது வழக்கம். ஆனால், தேசியக் கட்சியான காங்கிரஸுக்கு முந்தைய நடைமுறையைக் கடைப்பிடிக்காமல் தோ்தல் நேரத்தில் எங்கள் மனுவை தீா்ப்பாயம் தள்ளுபடி செய்துள்ளது’ என்றாா். காங்கிரஸ் பொருளாளா் அஜய் மாக்கன் கூறுகையில், ‘மக்களவைத் தோ்தலின்போது இதுபோன்ற சிக்கலை மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏற்படுத்தி வருகிறது. கட்சி நிதியில்லாமல் எப்படி தோ்தலில் போட்டியிட முடியும்?. காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். காங்கிரஸ் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.270 கோடி முடக்கப்பட்டால் எப்படி தோ்தல் நியாயமாக நடைபெறும்? தினசரி செலவுக்காக காங்கிரஸிடம் குறைவான நிதியே உள்ளது. பாஜக அல்லது பிற தேசியக் கட்சிகள் இதுவரையில் வருமான வரி அபராதத்தை செலுத்தியதே இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி மீது மட்டும் அபராதம் விதிக்கப்படுகிறது’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com