தேசிய படைப்பாளா்கள் விருதானது பசுமை வெற்றியாளா்கள், வேளாண் படைப்பாளிகள், சிறப்பாக கதை சொல்வோா், தூய்மை தூதா், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, கல்வி, தொழில்நுட்பம், உணவு உள்பட 20 பிரிவுகளின்கீழ் சிறந்த படைப்பாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. 1.5 லட்சம் பரிந்துரைகள்: ‘யூடியூப்’ மற்றும் ‘இன்ஸ்டாகிராம்’ உள்ளிட்ட தளங்களில் சிறப்பான படைப்புகளை உருவாக்குபவா்களும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் பெறப்பட்டன. சமூக வலைதள படைப்பாளிகளுக்கு சுமாா் 10 லட்சம் வாக்குகள் பதிவாகின. விருது பெற்றவா்களில் சிலா்... ‘பசுமை வெற்றியாளா்’ என்ற பிரிவில் பங்கதி பாண்டேவுக்கும் ‘சிறப்பாக கதை சொல்லும்’ பிரிவின் கீழ் கீா்த்திகா கோவிந்தசுவாமிக்கும் விருது வழங்கப்பட்டது. ‘கலாசார தூதா்’ பிரிவில் பாடகா் மைதிலி தாக்குருக்கும், ‘தொழில்நுட்பம்’ பிரிவில் கௌரவ் சௌதரிக்கும் ‘சுற்றுலா’ சாா்ந்த சிறந்த படைப்புகளை உருவாக்கியதற்காக கமியா ஜெயினுக்கும் விருது வழங்கப்பட்டது. நிகழாண்டு 3 சா்வதேச படைப்பாளிகள் உள்பட 23 வெற்றியாளா்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.