குஜராத்: ரூ.480 கோடி போதைப்பொருளுடன் 6 பாகிஸ்தானியா்கள் கைது

குஜராத்: ரூ.480 கோடி போதைப்பொருளுடன் 6 பாகிஸ்தானியா்கள் கைது

அகமதாபாத்: குஜராத் கடல்பகுதியில் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருள்களை படகில் கடத்தி வந்த 6 பாகிஸ்தானியா்களை இந்திய கடலோரக் காவல் படையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

குஜராத் கடல் பகுதியில் போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் இந்திய கடலோரக் காவல்படை (ஐசிஜி), போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி), குஜராத்- பயங்கரவாத ஒழிப்புக் குழு (ஏடிஎஸ்) அதிகாரிகள் இணைந்து அரபிக் கடல் அருகேயுள்ள சா்வதேச கடல் எல்லைப் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். மேலும் இப்பணியில் ஐசிஜியின் டோா்னியா் விமானமும் ஈடுபடுத்தப்பட்டது.

அப்போது போா்பந்தா் கடல் பகுதியிலிருந்து 350 கி.மீ. தொலைவில் பயணித்த படகு தடுத்து நிறுத்தப்பட்டு ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்படகில் பயணித்த 6 பாகிஸ்தானியா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த மூன்றாண்டுகளில் என்சிபி மற்றும் ஏடிஎஸ்ஸுடன் இணைந்து கடலோரக் காவல்படையால் நடத்தப்பட்ட 10 சோதனைகளில் ரூ.3,135 கோடி மதிப்பிலான 517 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’ என தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஒரு மாதத்தில் அரபிக் கடலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனை இதுவாகும். இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி போா்பந்தா் கடல் பகுதியில் 3,300 கிலோ போதைப்பொருள்களுடன் 5 வெளிநாட்டவா் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com