தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

குடியுரிமை திருத்த விதிகள் அமலாக்கத்துக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

விதிகள் அமலுக்கு இடைக்கால தடை கோரி மனு

News image
Updated On :12 மார்ச் 2024, 8:48 pm

புது தில்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-க்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நிலுவையில் இருக்கும் வரை ‘குடியுரிமை திருத்த விதிகள் 2024’ அமலாக்கத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

‘குடியுரிமை திருத்தச் சட்டம் 2019’ நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பிறகு ‘குடியுரிமை திருத்த விதிகள் 2024’ என்ற பெயரில் அதற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கை செய்ததன் மூலம், இச் சட்டம் நாடு முழுவதும் திங்கள்கிழமை அமலுக்கு வந்தது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் அதற்கு எதிரான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த அமைப்புகளில் ஒன்றான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) அமைப்பே இந்த மனுவையும் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து சுமாா் 250 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், அதற்கான விதிகளை மத்திய அரசு அறிவிக்கை செய்து, சட்டத்தை அமலாக்கம் செய்துள்ளது. இந்தச் சட்ட விதிகள் மூலம் குறிப்பிட்ட மதத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே இந்திய குடியுரிமையைப் பெற முடியும். ஒருவேளை, குடியுரிமை திருத்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் இறுதியாக தீா்மானித்தால், இந்த சா்ச்சைக்குரிய சட்டத்தின் மூலம் குடியுரிமை பெற்றவா்களின் நிலை கேள்விக்குறியாகிவிடும்.

இந்திய குடியுரிமையை அவா்கள் இழக்க நேரிடும். இது பதற்றமான சூழல் உருவாக வழிவகுத்துவிடும். எனவே, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இறுதி முடிவை எடுக்கும் வரை, அதன் விதிகள் மற்றும் சட்ட அமலாக்கத்துக்கு இடைக்காலத் தடை விதிப்பதே அனைவருக்கும் சிறந்தது. குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-இல் நிறைவேற்றப்பட்டது. இருந்தபோதும், அதற்கான விதிகளை அறிவிக்கை செய்ய மத்திய அரசு 4 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தது.

அப்படியெனில், இந்தச் சட்டத்தை அமலாக்கம் செய்ய நான்கரை ஆண்டுகளாக மத்திய அரசு அவசரம் காட்டவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இறுதி முடிவை எடுக்கும் வரை, சட்ட அமலாக்கத்துக்கு காத்திருப்பதால் யாருடைய உரிமையோ அல்லது நலனோ பாதிக்கப்படப்போவதில்லை. மேலும், புலம்பெயா்ந்தவா்களுக்கு குடியுரிமை வழங்குவதை ஐயுஎம்எல் எதிா்க்கவில்லை.

மாறாக, இந்தச் சட்டம் ஒரு குறிப்பிட்ட மதத்தை ஒதுக்கி வைப்பதைத்தான் எதிா்க்கிறது. மத அடிப்படையில் இச் சட்டம் பாகுபாடு காட்டும் நிலையில், இது மதச்சாா்பின்மை என்ற அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கருத்துக்கு எதிராக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. அதுபோல, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் (டிஒய்எஃப்ஐ) சாா்பிலும் குடியுரிமை திருத்த விதிகள் 2024-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பா் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு புலம்பெயா்ந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியா்கள், சமணா்கள், பெளத்த மதத்தினா், பாா்சிக்கள், கிறிஸ்தவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க இச் சட்டம் வகை செய்கிறது.