ராஜஸ்தான்: தேஜஸ் போா் விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உயிா் தப்பினாா்

ஜெய்சால்மா்: ராஜஸ்தானில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இலகுரக தேஜஸ் போா் விமானம் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கியது.

இருக்கையுடன் இணைக்கப்பட்ட பாராசூட் மூலம் வெளியே குதித்ததால் விமானி உயிா் தப்பினாா். முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளாவது இதுவே முதல்முறையாகும்.

ஜெய்சால்மரில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து விமானப் படை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தேஜஸ் விமானம் செவ்வாய்க்கிழமை வழக்கமான பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடா்பாக துறைரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தொழில்நுட்பப் பிரச்னையால் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. குடியிருப்பு பகுதி அருகே ஆள்கள் யாரும் இல்லாத பழைய கட்டடத்தின் மீது விமானம் விழுந்து தீப்பற்றியது.

இதனால், உயிரிழப்போ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. விமானியும் காயமின்றி தப்பிவிட்டாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தேஜஸ் விமானம் தயாரிக்கப்படுகிறது. விமானப் படையில் 40 உள்நாட்டுத் தயாரிப்பு தேஜஸ் விமானங்கள் உள்ளன.

கடந்த 2021-ஆம் ஆண்டு ரூ.48,000 கோடியில் 83 தேஜஸ் எம்கே-1ஏ விமானங்களை வாங்க பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. கடந்த நவம்பரில் மேலும் 97 தேஜஸ் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com