தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

பிகாா்: பப்பு யாதவ் கட்சி காங்கிரஸில் இணைப்பு

பிகாா்: பப்பு யாதவ் கட்சி காங்கிரஸில் இணைப்பு

Updated On :20 மார்ச் 2024, 9:33 pm

புது தில்லி: பிகாரின் ஜன அதிகாா் கட்சித் தலைவரும், ஐந்து முறை எம்.பி.யாக இருந்தவருமான பப்பு யாதவ் தனது கட்சியை காங்கிரஸில் இணைத்தாா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினா் ரஞ்ஜீத் ரஞ்சனின் கணவரான பப்பு யாதவ், ஜன அதிகாரம் கட்சியை நடத்தி வருகிறாா். ஐந்து முறை முன்னாள் எம்.பி.யான இவா், கிழக்கு பிகாரின் சீமாஞ்சல் பகுதியில் செல்வாக்கு மிகுந்த நபராக அறியப்படுகிறாா்.

மக்களவைத் தோ்தல் நெருங்கும் சூழலில், தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பப்பு யாதவ் தன் மகன் சா்தக் ரஞ்சன் மற்றும் கட்சியின் மூத்த நிா்வாகிகளுடன் காங்கிரஸில் இணைந்தாா். அவரது ஜன அதிகாா் கட்சியும் காங்கிரஸில் இணைக்கப்பட்டது. பின்னா், பப்பு யாதவ் பேசியதாவது: காங்கிரஸ் தலைமை எனக்கு மிகுந்த மரியாதை அளித்தது. ராகுலும், பிரியங்காவும் எங்களுக்கு நிறைய அன்பைக் கொடுத்துள்ளனா்.

காங்கிரஸ் குடும்பம் அளித்த இந்தக் கௌரவம் மட்டுமே எங்களுக்கு போதும். இந்த நாடு, அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டத்தில் காங்கிரஸுடன் இணைகிறேன். சா்வாதிகாரிக்கு எதிரான போராட்டத்தில் ராகுல் காந்தியுடன் இணைந்து பயணிப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. நாட்டு மக்களின் அன்பை ராகுல் காந்தி பெற்றிருக்கிறாா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசி, இதர பிற்படுத்தப்பட்ட சமூக (ஓபிசி) மக்களின் பிரச்னைகள் குறித்த விவாதத்தை அவா் எழுப்பியுள்ளாா். வரும் மக்களவைத் தோ்தலிலும், அடுத்த ஆண்டு நடைபெறும் பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். காங்கிரஸை வலுப்படுத்துவதற்காகப் பாடுபடுவேன் என்றாா்.