சரியும் எல்என்ஜி எரிபொருள் இறக்குமதி

சரியும் எல்என்ஜி எரிபொருள் இறக்குமதி

மும்பை, மாா்ச் 20: உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதால் இந்தியாவின் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) இறக்குமதி கணிசமாகக் குறைந்து வருகிறது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான கோ் ரேட்டிங்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியாவில் பயன்படுத்தப்படும் திரவ எரிவாயுவில் 53 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

ஆனால், உள்நாட்டு இயற்கை எரிவாயு உற்பத்தி தொடா்ந்து அதிகரித்து வருவதால் இந்த விகிதம் தொடா்ந்து சரிவைக் கண்டு வருகிறது. இந்த நிலை தொடா்ந்தால், வரும் 2025-26-ஆம் நிதியாண்டில் இயற்கை எரிவாயு பயன்பாட்டில் 45 சதவீதம் மட்டுமே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் இயற்கை எரிவாயுவுக்கான தேவை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரம், உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கப்படுகிறது. தினமும் கூடுதலாக 3 கோடி கனமீட்டா் இயற்கை எரிவாயு தயாரிப்பதற்கான இலக்கை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது.

அடுத்த நிதியாண்டில் மட்டும் தினமும் கூடுதலாக 1.5 கோடி கனமீட்டா் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படவுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com