மறுபரிசீலனை அவசியம்
நம் நாட்டின் இயற்கை எரிவாயு தேவையில் சுமார் 35% உள்நாட்டிலேயே உற்பத்தி ஆகிறது. மீதமுள்ள 65% வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

வணிக சிலிண்டர்

வணிக சிலிண்டர்
பெ.நா. மாறன்
நம் நாட்டின் இயற்கை எரிவாயு தேவையில் சுமார் 35% உள்நாட்டிலேயே உற்பத்தி ஆகிறது. மீதமுள்ள 65% வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
கிணறுகளில் இருந்து நேரடியாக உற்பத்தியாகி வருவது இயற்கை எரிவாயு. கச்சா எண்ணெயில் இருந்து சுத்திகரிப்பு நிலையங்களில் பிரித்தெடுக்கப்படுவது பெட்ரோலிய எரிவாயு. நம் வீடுகளில் சிலிண்டர் வடிவத்தில் கொண்டு வரப்படுவது திரவமயமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு. நம்முடைய எரிவாயு தேவையை நிறைவு செய்ய இரண்டு வகையிலும் இறக்குமதி செய்யப்படுகிறது.
பெரும்பான்மையான அளவு கத்தார் நாட்டிலிருந்து இதுவரையிலும் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. கூடுதலாக எல்பிஜி வளைகுடா நாடுகளில் இருந்தும், எல்என்ஜி அமெரிக்கா, ரஷியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இப்போது, கத்தார் இறக்குமதியில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அதிகப்படியான பாதிப்பை உணர்கிறோம்.
போர் நின்றாலும், மீண்டும் இயல்பான உற்பத்தியும், ஏற்றுமதியும் அந்தந்த நாடுகளில் நடைமுறைக்கு வருவதற்குக் குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும். போர் நின்றாலும், தொடர்ந்தாலும், வேறு நாடுகளில் இருந்து நமக்குத் தேவையான கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதிக்கான சீரான மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு முழு வீச்சில் செய்து கொண்டிருக்கிறது. அதுவரை நிலைமையைச் சமாளிக்க முடிகிற நம்பிக்கையுடன் இருக்கிறது இந்தியா.
மத்திய அரசின் உடனடி நடவடிக்கைகளால் உள்நாட்டின் எரிவாயு உற்பத்தி மொத்தமும் வீடுகளின் உபயோகத்துக்கே வழங்கப்பட ஏற்பாடு ஆனது. சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கூடுதல் சமையல் எரிவாயு உற்பத்திக்கான தொழில்நுட்பங்களை உடனடியாகப் பின்பற்ற வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் காரணமாக பத்து ஆண்டுகளுக்கு முன்பாக 14 கோடி வீடுகளில் மட்டுமே இருந்த சமையல் எரிவாயு இணைப்புகள், இப்போது 33 கோடி வீடுகளில் உள்ளன. நமது தேசத்தின் மொத்த எரிவாயு தேவையில் 85% வீடுகளுக்கான உபயோகம் மட்டுமே.
எல்லா வீடுகளுக்கும் நேரடியாகக் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யப்படும் திட்டம் இப்போது செயலாக்கத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்திய அளவில் சுமார் 1.6 கோடி வீடுகள் சமையல் எரிவாயு விநியோகக் குழாய் இணைப்பு பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் (1.35 லட்சம் வீடுகள் மட்டுமே) நூற்றில் ஒருபங்கு கூட நிறைவடையவில்லை. பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அந்தப் பணி விரைவுபடுத்தப்பட வேண்டும். குழாய் மூலமான எரிவாயு விநியோகம் வந்துவிட்டால் சிலிண்டரின் தேவை இருக்காது. எல்பிஜி இறக்குமதிச் சுமையும் கணிசமாகக் குறையும்.
அடுத்து உள்நாட்டு இயற்கை எரிவாயு உற்பத்தியைப் பெருக்குவதில் அவசர கவனம் தேவை. இந்தியாவில் சுமார் ஏழு அல்லது எட்டு மாநிலங்களில் மட்டுமே கச்சா எண்ணெய் இயற்கை எரிவாயு வளம் இருக்கிறது; நிலப் பகுதிக்கு அடியில் இருக்கும் இருப்பு இந்தியாவிலேயே அதிக அளவு தமிழ்நாட்டில்தான் இருக்கிறது.
ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்துக்குத் தேவையான குழாய் எரிவாயுவின் அளவு முக்கால் கனமீட்டர் அல்லது ஒரு கனமீட்டர் மட்டுமே. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 30 லட்சம் கனமீட்டர் எரிவாயு உற்பத்தி இருக்கிறது.
நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 65 லட்சம் முதல் 90 லட்சம் கனமீட்டர் எரிவாயு உற்பத்தி செய்யும் அளவுக்கான இருப்பு தமிழக பூமிக்கு அடியில் இருக்கிறது. புதுச்சேரி மற்றும் ராமநாதபுரம் கடற்பகுதியில் இதுபோல் பன்மடங்கு அதிகமான இயற்கை எரிவாயு இருப்பு உள்ளது. புதுச்சேரி கடற்பகுதியில் சில கிணறுகள் தோண்டப்பட்டு சோதனை உற்பத்தியும் செய்யப்பட்டுள்ளது. கடற்பகுதி கிணறுகள் என்றால், ஒரு கிணற்றிலிருந்தே குறைந்தபட்சம் ஐந்து முதல் பத்து லட்சம் கனமீட்டர் எரிவாயு உற்பத்தி ஆகும்.
அகில இந்திய அளவில் நாளொன்றுக்கு ஓஎன்ஜிசி-யும் மற்ற தனியார் நிறுவனங்களும் சேர்ந்து சுமார் 6.5 முதல் 7 கோடி கனமீட்டர் எரிவாயு உற்பத்தி செய்கிறார்கள். நமது தேவையோ 33 கோடி வீடுகளுக்கு சுமார் 20 கோடி கனமீட்டர் இயற்கை எரிவாயு.
இந்தத் தேவையை நிறைவு செய்து கொள்ள ஒட்டுமொத்தமாக இறக்குமதி செய்தாக வேண்டிய நிலையில்தான் இருக்கிறோமா அல்லது இறக்குமதி அளவைக் குறைத்து வெளிநாடுகளை எதிர்பார்க்கும் நிலையைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள இயலுமா என்பதைத் திறந்த மனதுடன் ஆராய வேண்டும்.
கச்சா எண்ணெய் எரிவாயு உற்பத்திக்கான துரப்பணம் செய்யக் கூடாது என்ற தடை அடிப்படையில் 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்ட 'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம்' மாதிரியான ஒரு சட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. அப்படி ஒரு சட்டம் கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்படும் அளவுக்கு அப்போதைய தமிழகத்தின் வேளாண் பொருள் உற்பத்திகளில் திடீர்க் குறைபாடும் இல்லை. தமிழ்நாடு அரசு தரவுகளின்படி கடந்த 10 ஆண்டுகளில் காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் வந்திருக்கிறது. பல லட்சம் ஹெக்டேர் வேளாண் நிலத்தில் கச்சா எண்ணெய் எரிவாயு கிணறுகள் தோண்டுவதற்குத் தேவைப்படுவது ஒரு கிணற்றுக்கு ஐந்து ஏக்கர் நிலம் மட்டுமே.
ஓ.என்.ஜி.சிக்கு எதிரான பிரசாரங்கள் 2013 முதல் முழுவீச்சில் நடைபெற்ற காலகட்டத்தில் போராட்டக்காரர்கள் தங்களுடைய புரிதல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தபோது ஓஎன்ஜிசி நிறுவனம் ஆட்சியாளர்களுக்கும், தலைவர்களுக்கும் மக்களுக்கும் தவறான புரிதல் ஏற்பட்டு விடாமல் அவர்களை அடிக்கடி சந்தித்து, பத்திரிகையாளர் சந்திப்புகள் நிகழ்த்தி, அவர்களை அழைத்துச் சென்று சம்பந்தப்பட்ட இடங்களைக் காண்பித்து விளக்கம் சொல்லும் தடுப்பு முயற்சிகளில் முழுவீச்சில் ஈடுபடவில்லை.
'1985-இல் இருந்து மக்களுடன் இருக்கிறோம்; நூற்றுக்கணக்கான ஊராட்சிகளில் நம் கிணறுகள் பரவலாக இருக்கின்றன; கிராம மக்களில் பலரும் நம்முடனேயே பல்வேறு ஒப்பந்தப் பணிகளில் இருக்கிறார்கள்; நம்மைப் பற்றி அவர்கள் நன்கு அறிவார்கள்' என்கிற அதீத நம்பிக்கையில் அலட்சியமாக இருந்து விட்டது அந்த நிறுவனம்.
அப்போதைய சமூக அரசியல் சூழ்நிலையில் சட்டம் இயற்றப்பட்டு விட்டது. அந்தச் சட்டம் வந்ததால் தமிழ்நாட்டில் ஓஎன்ஜிசி-யின் மூலம் வெகுவாக அதிகரித்துக் கொண்டிருந்த கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி (புதிய கிணறுகள் தோண்டப்படாததால்) பாதிக்கும் கீழாகக் குறைந்து பல்லாயிரக்கணக்கான நேரடி, மறைமுக, ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை இழந்ததுதான் மிச்சம்.
இப்போது அந்தச் சட்டம் குறித்த மறுபரிசீலனைக்கான அவசியத்தை மேற்காசியப் போர் ஏற்படுத்தி உள்ளது.
சிறந்த ஆளுமையும் தன்னம்பிக்கையும் கொண்ட ஆட்சித் தலைமைக்கு அழகு, தான் எடுத்த ஒரு கொள்கை முடிவு எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்றால் அந்த முடிவை மறுபரிசீலனைக்கு உள்ளாக்குவதும் அவசியப்பட்டால் திரும்பப் பெறுவதும்தான். வேளாண் சட்டங்கள் விஷயத்தில் பிரதமர் மோடியும், மதமாற்றத் தடைச்சட்ட விஷயத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், தொழிலாளர்களின் பணிநேரத்தை அதிகரிப்பது தொடர்பான மசோதா விஷயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் முடிவுகளைத் திரும்பப் பெற்றதால் அவர்களுடைய ஆளுமைக்கு எந்த சேதாரமும் ஏற்படவில்லை.
வேளாண் மண்டல பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கம் சிதைவுறா வண்ணம் இயற்கை எரிவாயு உற்பத்தியைப் பெருக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட அரசியல் மாச்சரியங்களைக் கடந்து, அறிவியல் பூர்வமான சிந்தனையுடனான முயற்சி தேவை.
எரிவாயு உற்பத்திக்கு வாய்ப்பு இருக்கும் இடங்களில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் போன்ற சட்டபூர்வமான அமைப்புகளின் மேற்பார்வையில் நீரோ காற்றோ மாசுபடாத வகையில் கிணறுகள் தோண்டுவதற்கு அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். மீனவர்களுக்கும் மீன் வளத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் கடல் பகுதியில் எரிவாயு கிணறுகள் பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட வேண்டும். தமிழகத்தின் நிலப் பகுதியிலும் கடற்பகுதியிலும் இருக்கும் இயற்கை எரிவாயுவை முழு அளவில் உற்பத்தி செய்தாலே கணிசமான அளவு இறக்குமதிச் சுமையைக் குறைக்க இயலும்.
சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த அச்சம் கொண்டோரை துறைசார் வல்லுநர்களின் மேற்பார்வையுடன் அபரிமிதமாக கச்சா எண்ணெய் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் ஆந்திரம், குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று தம்முடைய சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்கு புதிய அரசு முன்முயற்சி எடுக்க வேண்டும்.
அந்தச் சட்டத்தால் இந்த ஆறரை ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பலன்கள் என்ன என்று வல்லுநர் குழு கொண்டு ஆராய்ந்து சட்டத்தின் முழுமையான நோக்கம் நிறைவேறவும் அமையப் போகும் அரசு ஆவன செய்ய வேண்டும்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...