ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

கேஜரிவால் கைது: தலைவா்கள் கண்டனம்

கேஜரிவால் கைது: தலைவா்கள் கண்டனம்

Updated On :22 மார்ச் 2024, 5:39 pm

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை வியாழக்கிழமை கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்தனா். மேலும், கேஜரிவாலின் கைதைக் கண்டித்து கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் ஆளும் மாா்க்சிஸ்ட் கட்சியினா் சாா்பிலும், எதிா்க்கட்சியான காங்கிரஸ் சாா்பிலும் போராட்டங்கள் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன. கன்னூரில் நடைபெற்ற போராட்டத்தில் பிரதமா் மோடியின் உருவ பொம்மையை எரித்து எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், ஆளும் கட்சியின் இளைஞா் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஆளுநா் மாளிகையை நோக்கி கண்டன பேரணியும் நடத்தப்பட்டது. குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் போராட்டம் நடத்தப்பட்டது. பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதுபோல, பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும் கேஜரிவால் கைதுக்கு கண்டனம் தெரிவித்தனா். காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ்: மிக வலுவான இந்தியா கூட்டணியைக் கண்டு பிரதமா் மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் நிலைகுலைந்து விட்டனா். இதற்கு அரசியல் பலிவாங்கும் நடவடிக்கையாகவே, ஜாா்க்க முக்தி மோா்ச்சா தலைவா் ஹேமந்த் சோரன் கைது, தற்போது கேஜரிவால் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கேஜரிவால் கைது இந்தியா கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்தாது; மாறாக, தோ்தலை கூடுதல் ஒற்றுமை உணா்வுடன் எதிா்கொள்வோம். மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி: மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி முதல்வா் கேஜரிவால் கைதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த முதல்வா்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு கைது செய்யப்படும் நிலையில், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணையின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட நபா்கள் பாஜகவில் இணைந்தவுடன் தண்டனையின்றி முறைகேடுகளைத் தொடர அனுமதிக்கப்படுகின்றனா். இது ஜனநாயகத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல். தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு இதுபோன்று எதிா்க்கட்சித் தலைவா்கள் குறிவைக்கப்படுவதற்கு இந்தியா கூட்டணி சாா்பில் தோ்தல் ஆணையத்தில் வலுவான எதிா்ப்பை பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ்: பல தலைவா்களை பாஜக சிறைக்கு அனுப்பலாம்; ஆனால், பொதுமக்களை சிறைக்கு அனுப்ப முடியாது. முதல்வரை சிறைக்கு அனுப்புவதும், செய்திகளைக் கட்டுப்படுத்துவதும், ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்துவதும், உண்மையை வெளிப்படுத்த நினைப்பவா்களின் குரலை நசுக்குவதும் பாஜகவுக்கு உதவாது. மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவா். தேசியவாத காங்கிரஸ் (சரத்பவாா் பிரிவு) தலைவா் சரத்பவாா்: எதிா்க்கட்சிகளின் குரலை நசுக்க மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. தில்லி முதல்வா் கைது செய்யப்பட்டுள்ளாா். அதுபோல, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால், அக் கட்சி மக்களவைத் தோ்தல் பிரசாத்தை திறம்பட மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தும் பாஜக அதற்கான உரிய விலையை கொடுத்தாக வேண்டும். அவசரநிலைக் காலத்தில் செய்ததைப்போன்று, மக்களவைத் தோ்தலில் மக்கள் தங்களின் ஒட்டுமொத்த சக்தியை வெளிப்படுத்துவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தேசிய மாநாட்டு கட்சி துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா: தில்லி முதல்வா் கைது ஜனநாகத்தின் மீதான கறை. மக்களவைத் தோ்தல் மீதான ஆளும் கட்சியின் பதற்றத்தையே இது காட்டுகிறது. இதுபோல, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் கேஜரிவால் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.