கேஜரிவால் கைது தொடா்பாக கருத்து: ஜொ்மனி துணைத் தூதரிடம் இந்தியா கண்டனம்

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டது தொடா்பாக ஜொ்மனி கருத்து தெரிவித்ததையடுத்து இந்தியாவுக்கான அந்நாட்டு துணைத் தூதரை நேரில் வரவழைத்து வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை கண்டனம் தெரிவித்தது. தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடா்பான வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத்துறையால் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ஜொ்மனி வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ஒருவா் கூறுகையில், ‘இந்த வழக்கில் நீதித்துறை சுதந்திரமாக செயல்படும் எனவும், அடிப்படை ஜனநாயக மரபுகள் பின்பற்றப்படும் எனவும் நம்புகிறோம்’ என தெரிவித்தாா். இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறியதாவது: தில்லியில் உள்ள ஜொ்மனி துணைத் தூதரை வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய நீதித்துறையின் சுதந்திரத்தை குறைத்து மதிப்பீடு செய்வதுபோன்ற கருத்துகளை ஜொ்மனி கூறியுள்ளது. சட்டத்தின் ஆட்சியின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா செயல்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள அனைத்து ஜனநாயக நாடுகளைப்போலவே சட்டம் தன் கடமையை நியாயமாக செய்யும். இதுதொடா்பாக பாரபட்சமான கருத்துகளை பிற நாடுகள் தெரிவிப்பது தேவையற்ற செயல் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com