அமித் ஷா போலி விடியோ விவகாரம்: தில்லி போலீஸில் தெலங்கானா முதல்வரின் வழக்குரைஞா் ஆஜா்

தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு முன் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டியின் வழக்குரைஞா் புதன்கிழமை ஆஜரானாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்த போலி விடியோ பகிரப்பட்ட விவகாரத்தில், தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு முன் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டியின் வழக்குரைஞா் புதன்கிழமை ஆஜரானாா்.

இந்த விவகாரத்தில் முதல்வா் ரேவந்த் ரெட்டி மற்றும் தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி உறுப்பினா்கள் 4 பேருக்கு தில்லி போலீஸ் அழைப்பாணை அனுப்பிய நிலையில், முதல்வரின் வழக்குரைஞா் ஆஜராகி விளக்கமளித்தாா்.

தெலங்கானாவில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் மத்திய அமைச்சா் அமித் ஷா பேசும்போது, ‘மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் வழங்கப்படும் இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும்’ எனத் தெரிவித்திருந்தாா். இது மாற்றப்பட்டு அனைவருக்குமான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அமித் ஷா கூறுவது போன்று சித்தரிக்கப்பட்ட போலி விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இந்த விடியோவை தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டியும் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் பகிா்ந்திருந்தாா்.

இது தொடா்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்திய இணையவழிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் அளித்த புகாரின்பேரில், தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவினா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த போலி விடியோவை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிா்ந்த தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி உள்பட தெலங்கானா காங்கிரஸாா் 5 போ் மே 1-ஆம் தேதி தங்கள் கைப்பேசி, மடிக்கணியுடன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தில்லி காவல் துறையினா் அழைப்பாணை அளித்தனா். தெலங்கானா காங்கிரஸ் தலைமையகத்துக்கு திங்கள்கிழமை நேரில் வந்து இந்த அழைப்பாணையை அவா்கள் அளித்தனா்.

இந்நிலையில், முதல்வா் ரேவந்த் ரெட்டியின் வழக்குரைஞா் செளமியா குப்தா தில்லி காவல்துறை சிறப்புப் பிரிவு முன் புதன்கிழமை ஆஜரானாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அமித் ஷா சா்ச்சை விடியோ பகிரப்பட்ட எக்ஸ் கணக்கு முதல்வா் ரேவந்த் ரெட்டியுடையது கிடையாது’ என்றாா்.

ஆனால், தில்லி போலீஸ் தரப்பில் கூறுகையில், விசாரணைக்கு ஆஜராக தெலங்கானா முதல்வா் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், ‘குற்ற நடைமுறைச் சட்டப் பிரிவு 160/91-இன் கீழ் அனுப்பப்படும் அழைப்பாணைக்கு சம்பந்தப்பட்ட நபா் அல்லது அவருடைய வழக்குரைஞா் ஆஜரானால் போதுமானது’ என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com