வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

உத்தர பிரதேசம் மாநில அமேதி, ரே பரேலி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும்.
வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?
ANI

அமேதி, ரே பரேலி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை இன்னும் அறிவிக்காதது தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளன. வருகின்ற மே 7-ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளன.

இதற்கிடையே, ஐந்தாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும் நேரு குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிகளான அமேதி, ரே பரேலியில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.

ஆனால், காங்கிரஸ் தலைமை இதுவரை வேட்பாளர்களின் பெயரை அறிவிக்காமல் மெளனம் காத்து வருவது கட்சித் தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?
ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

கடந்த தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக இதுவரை சோனியா காந்தி அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் அண்மையில் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டார். எனவே, இந்த தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

அதுபோல, உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் பல ஆண்டுகளாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி கடந்த முறை பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியை தழுவினார். இருப்பினும், கேரள மாநிலம் வயநாட்டில் வெற்றி பெற்று எம்பியானார்.

இந்த நிலையில், மீண்டும் வயநாட்டில் போட்டியிட்டுள்ள ராகுல் காந்தி, இரண்டாவது தொகுதியாக அமேதியில் போட்டியிட கட்சித் தலைமையிடம் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தொழிலதிபரும் ராகுலின் சகோதரி பிரியங்காவின் கணவரான ராபா்ட் வதேரா அத்தொகுதியில் போட்டியிட கோரி சமீபத்தில் போஸ்டா்கள் ஒட்டப்பட்டது மேலும் பரபரப்பைக் கூட்டியிருந்தது.

அதேபோல், ரே பரேலி தொகுதியில் பிரியங்கா காந்தியை வேட்பாளராக நிறுத்த கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இவ்விரண்டு தொகுதிகளுக்கும் வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள் என்பதால் இன்றுக்குள் வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தாக வேண்டும்.

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியிடம் நேற்றே கட்சித் தலைவர்கள் இறுதி ஆலோசனை நடத்தி முடித்துள்ளதாகவும், இன்று மாலைக்குள் வேட்பாளர்கள் பெயரை காங்கிரஸ் அறிவிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐந்தாம் கட்ட தேர்தல் மே 20-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அமேதியில் பாஜக வேட்பாளராக மீண்டும் ஸ்மிருதி இரானி களமிறக்கப்பட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

ரே பரேலியில் காங்கிரஸின் வேட்பாளர் பெயர் வெளியான பிறகு பாஜக ஏற்கெனவே தேர்வு செய்து வைத்துள்ள மூன்று முக்கிய நபர்களின் ஒருவரை வேட்பாளராக அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று மாலைக்குள் அமேதி, ரே பரேலியின் வேட்பாளர்கள் பெயரை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com