400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

400 பெண்களை வன்கொடுமை செய்த பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்
நரேந்திர மோடி / ராகுல் காந்தி
நரேந்திர மோடி / ராகுல் காந்தி

ஷிவ்மோகா: கர்நாடக மாநிலத்தில் 400 பெண்களை வன்கொடுமை செய்த ஹசன் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்காக பிரசாரம் செய்து வாக்குக் கேட்ட பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியிருக்கிறார்.

மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த ஹசன் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா 400 பெண்களை வன்கொடுமை செய்து, அதனை விடியோ எடுத்து வைத்துள்ளார். அவருக்காக மக்களிடம் வந்து வாக்குக் கேட்ட பிரதமர் மோடி, அதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ராகுல் மிகக் காட்டமாகப் பேசியிருக்கிறார்.

கர்நாடக மாநிலம் ஷிவ்மோகாவில், காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி, மிகமோசமான பலாத்காரக் குற்றவாளிக்காக வாக்கு கேட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இந்நாட்டில் உள்ள பெண்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நரேந்திர மோடி / ராகுல் காந்தி
கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான எச்.டி. தேவகௌடாவின் பேரனான பிரஜ்வல், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மாநில அரசு, சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

33 வயதாகும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல், பல பெண்களை வன்கொடுமை செய்யும் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் கடந்த ஒரு சில நாள்களாக வேகமாகப் பரவி வருகிறது. இவர்தான், ஹசன் தொகுதியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர். ஏப்ரல் 26ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்துள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம், கடந்த ஆண்டுதான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருந்தது.

இந்த நிலையில்தான் ராகுல் காந்தி இவ்வாறு பேசியிருக்கிறார். பிரஜ்வலுக்காக வாக்கு சேகரித்த பிரதமர் மோடி, இந்நாட்டின் தாய் மற்றும் சகோதரிகளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும், பிரஜ்வல் 400 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை விடியோ எடுத்து வைத்திருக்கிறார். இது வெறும் பாலியல் வழக்கு மட்டுமல்ல, மிக மோசமான பாலியல் வன்கொடுமைச் சம்பவம் என்று ராகுல் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக மக்கள் முன்னிலையிலேயே பிரதமர் நரேந்திர மோடி, ஒரு மிகப்பெரிய குற்றவாளியை ஆதரித்துப் பேசி வாக்கு சேகரித்துள்ளார். மோடி, கர்நாடக மக்களிடம், நீங்கள் வன்கொடுமை குற்றவாளிக்கு வாக்களித்தால், அது எனக்கு உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார், பிரஜ்வல் பற்றி பிரதமர் மோடிக்கு நன்கு தெரியும், ஆனால், அவர் உங்களிடம் அவருக்காக ஓட்டு கேட்டுள்ளார்.

பிரதமருக்கு மட்டுமல்ல, பாஜகவின் அனைத்து தலைவர்களுக்கும் பிரஜ்வல் ஒரு வன்கொடுமை குற்றவாளி என்று தெரிந்திருக்கும், ஆனாலும் அவர்களும் பிரஜ்வலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்திருக்கிறார்கள்.

இந்தியாவின் ஒவ்வொரு பெண்ணையும் பிரதமர் மோடி இழிவுபடுத்தியிருக்கிறார். எனவே, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என அனைவரும் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும், உலகிலேயே, ஒரு பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்காக வாக்கு சேகரித்திருப்பது இவர்களைத் தவிர வேறு யாருமிருக்காது என்றும் ராகுல் கூறியுள்ளார்.

இதுதான் பாஜகவின் அடையாளம், ஆட்சிக்கு வருவதற்காக, அவர்கள் யாருடனும் கூட்டணி வைத்துக்கொள்வார்கள், என்னவேண்டுமானாலும் செய்வார்கள் என்றும் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com