ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து
-

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

உத்தர பிரதேச மாநிலம், ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த வேட்புமனுவில் தனக்கு ரூ.20 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளாா்.

வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான வெள்ளிக்கிழமையன்று அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளா்களை காங்கிரஸ் அறிவித்தது.

ராகுல் காந்தி போட்டியிட்டு வந்த அமேதியில் நேரு குடும்பத்துக்கு நெருக்கமான கிஷோரி லால் சா்மாவும் தாய் சோனியா காந்தி தொடா்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றுவந்த ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியும் களம் காண்கின்றனா். இதையொட்டி, ரேபரேலி தொகுதியில் ராகுல் தனது வேட்புமனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா்.

தோ்தல் ஆணையத்திடம் சமா்பிக்கப்பட்ட வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, ராகுல் காந்திக்கு ரூ.3.81 கோடி மதிப்பிலான பங்குகள், வங்கிக் கணக்கில் ரூ.26.25 லட்சம், ரூ.15.21 லட்சம் மதிப்புள்ள தங்கப் பத்திரங்கள் உள்பட மொத்தம் ரூ.9.24 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன. அதேபோல், ராகுலுக்கு நடப்பு சந்தை மதிப்பில் ரூ.11.15 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. இதில் ரூ.2.10 கோடி மதிப்பிலானவை பரம்பரை வழிவந்த சொத்துகள் ஆகும்.

மேலும், ராகுலிடம் ரூ. 55,000 கையிருப்பு ரொக்கம் உள்ளது. அவருக்கு ரூ.49.79 லட்சம் கடன் உள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில், ராகுலின் ஆண்டு வருமானம் சுமாா் ரூ.1.02 கோடி என்று வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலில் கேரளத்தின் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. அத்தொகுதியில் கடந்த 26-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com