கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

பிற்பகல் 2.30 மணிக்கு அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து உச்சநீதிமன்றம் முடிவு.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

அப்போது, ”கலால் கொள்கை வழக்கில் கேஜரிவாலுக்கு தொடர்பிருப்பதாக கண்டுபிடிக்க 2 ஆண்டுகள் ஆனதா? தொடக்கத்தில் அவர்மீது அமலாக்கத்துறை கவனம் செலுத்தவில்லை?” என்று அமலாக்கத்துறை தரப்பிடம் கேட்டனர்.

தொடர்ந்து, ஒருவரை கைது செய்வதற்கு முன்பு ஆதாரங்களை உறுதி செய்திருக்க வேண்டும், போதிய ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே கைது செய்ய முடியும், கேஜரிவால் வழக்கில் பல இடங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்த நீதிபதிகள் வாக்குமூலங்களில் கேஜரிவால் பெயர் உள்ள ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும், கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பேசிய நீதிபதிகள், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கேஜரிவால், தேர்தல் நடைபெறுவதால் அவர் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது. அவர் வேறெந்த வழக்கிலும் சம்பந்தப்படவில்லை என்பதால் இடைக்கால ஜாமீன் வழங்க பரிசீலனை செய்யலாம்” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டால் முதல்வர் அலுவலகத்துக்கு சென்று அரசுப் பணிகளை மேற்கொள்வது சரியாக இருக்காது எனத் தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் பிரசாரத்துக்காக மட்டும் இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை செய்வதாக தெரிவித்து வழக்கின் விசாரணையை 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.

இதற்கிடையே, தேர்தல் பிரசாரத்தை உரிமையாக கருத முடியாது என்றும் அரசியல் காரணங்களுக்காக ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா வாதிட்டார்.

அரசியல் காரணங்களுக்காக கேஜரிவாலை கைதுச் செய்யவில்லை என்றும், ஆதராங்களின் அடிப்படையில் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஒத்துழைக்காததால்தான் கைது செய்ததாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இன்று பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணை முடிக்கவுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்த நிலையில், குறைந்தபட்சம் இன்று முழுவதும் வாதிட வேண்டியுள்ளதாக மேத்தா தெரிவித்தார்.

ஆனால், பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்குவதாகவும், 30 நிமிடங்கள் வாதிட நேரம் ஒதுக்குவதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

உச்சநீதிமன்றம்
இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. தற்போது நீதிமன்றக் காவலில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 15ம் தேதி அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம், கேஜரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு கேட்டுக் கொண்டது.

அப்போது தேர்தல் நேரம் என்பதால் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் ஜாமீன் வழங்கினால் என்ன நிபந்தனைகள் விதிக்கலாம் என்பது தொடர்பாக விரிவான வாதத்திற்கு தயாராக வாருங்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மே 7ஆம் தேதி அமலாக்கத்துறை வாதமும் தொடரும் எனக்கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com