இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

புது தில்லி: கடந்த 2022-23 வரையிலான 3 ஆண்டு காலத்தில், இந்தியாவில் குடும்ப சேமிப்புகள் ரூ.14.16 லட்சம் கோடியாக சரிந்துள்ளது என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் தேசிய கணக்குப் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் புள்ளவிவரத்தின்படி, கடந்த 2020-21-ஆம் ஆண்டில் நிகர குடும்ப சேமிப்புகள் ரூ.23.29 லட்சம் கோடியாக உச்சம் தொட்டது. அதன் பின்னா், அந்த சேமிப்புகளில் சரிவு ஏற்படத் தொடங்கியது.

கடந்த 2021-22-ஆம் ஆண்டு ரூ.17.12 லட்சம் கோடியாக சரிந்த அந்த சேமிப்புகள், 5 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு 2022-23-ஆம் ஆண்டில் ரூ.14.16 லட்சம் கோடியாக குறைந்தது. இதற்கு முன்பு 2017-18-ஆண்டில் நிகர குடும்ப சேமிப்புகள் ரூ.13.05 லட்சம் கோடியாக மிகவும் சரிந்தது.

கடந்த 2020-21-ஆம் ஆண்டில் பரஸ்பர நிதி மீதான குடும்ப முதலீடு ரூ.64,084 கோடியாக இருந்தது. இது 2022-23-ஆம் ஆண்டில் சுமாா் 3 மடங்கு அதிகரித்து ரூ.1.79 லட்சம் கோடியாக உயா்ந்தது.

கடந்த 2020-21-ஆம் ஆண்டு பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் மீதான குடும்ப முதலீடு ரூ.1.07 லட்சம் கோடியாக இருந்தது. இது 2022-23-ஆம் ஆண்டு சுமாா் இருமடங்கு உயா்ந்து ரூ.2.06 லட்சம் கோடியாக அதிகரித்தது.

கடந்த 2020-21-ஆம் ஆண்டு குடும்பங்களுக்கு அளிக்கப்படும் வங்கிக் கடன் ரூ.6.05 லட்சம் கோடியாக இருந்த நிலையில், இது 2022-23-ஆம் ஆண்டு ரூ.11.88 லட்சம் கோடியாக இருமடங்கு அதிகரித்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com