60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

எரிபொருள் நிரப்புவதை தவிர வேறெங்கும் ஆம்புலன்ஸை நிறுத்தவில்லை என்று ஓட்டுநர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
ஓட்டுநர் அருண் குமார்
ஓட்டுநர் அருண் குமார்

கொல்லத்தில் இருந்து ராய்கஞ்ச் வரை 2,870 கி.மீ. தொலைவை 60 மணிநேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றர்.

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள மைநாகப்பள்ளி கிராமத்தில் வசித்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த போதினி பஹான்(வயது 60) பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.

சொந்த ஊரான மேற்கு வங்கத்தில் உள்ள ராய்கஞ்ச் நகருக்குச் செல்வதே அவரது கடைசி ஆசையாக இருந்தது. விமானத்தில் அவரை அழைத்துச் செல்ல அதிகளவில் செலவாகும் என்பதால் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்ல அவரது மகன் முடிவெடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, கருநாகப்பள்ளியை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அருண் குமார்(வயது 28) போதினியை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லும் பணியை ஏற்றுக் கொண்டார்.

கடந்த ஏப்ரல் 22 காலை 7 மணியளவில் மைநாகப்பள்ளியில் இருந்து போதினியுடன் புறப்பட்ட ஆம்புலன்ஸ் ஏப்ரல் 24 மாலை 4.30 மணியளவில் ராய்கஞ்ச் சென்றடைந்தது.

சுமார் 2,870 கிலோ மீட்டர் தொலைவை தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா மற்றும் ஒடிஸா மாநிலங்கள் வழியே வெறும் 60 மணிநேரத்தில் கடந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அருண்.

ஓட்டுநர் அருண் குமார்
கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

இந்த பயணம் குறித்து ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்துக்கு அருண் அளித்த பேட்டியில் கூறியதாவது:

“ஏற்கெனவே நான் மேற்கு வங்கத்துக்கு சென்றுள்ளேன். அதனால், அந்த வழி எனக்கு பரிச்சயமானது தான். நோயாளியை அவரின் ஊருக்கு பாதுகாப்பான அழைத்துச் செல்வதே எனது முக்கிய பொறுப்பாக இருந்தது. எனது நவீன ஆம்புலன்ஸுக்கு நன்றி, மிக எளிதாக 2,800 கி.மீட்டரை கடந்தோம். சாலைகளும் நன்றாக இருந்ததால், எரிபொருள் நிரப்புவதற்காக மட்டுமே ஆம்புலன்ஸை நிறுத்தினேன்.

சிறிது நேரம் ஆம்புலன்ஸை நிறுத்தும் போது நோயாளி சாப்பிடுவார், நான் ஆம்புலன்ஸின் நிலையை சரி பார்ப்பேன். எனது பயிற்சியும், அர்ப்பணிப்பும் பணியை முடிப்பதில் கவனம் செலுத்த வைத்தது.

நோயாளி தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்ததால் என்னால் அதிக நேரம் உணவுக்காக எடுத்துக் கொள்ள முடியவில்லை. எரிபொருள் நிரப்பும்போது 10 - 15 நிமிடங்கள் மட்டுமே நிறுத்தமுடிந்தது. அப்போது, சிற்றுண்டு மட்டுமே எடுத்துக் கொண்டேன். ராய்கஞ்சில் கொடுத்த வரவேற்பு மகிழ்ச்சிகரமாக இருந்தது. அவர்கள் தங்கும் இடத்தையும் ஏற்பாடு செய்திருந்தனர். ஒருநாள் ஓய்வுக்கு பிறகும் மீண்டும் ஏப்ரல் 26-ஆம் தேதி கேரளம் வந்தடைந்தேன்.” எனத் தெரிவித்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொல்லத்தில் உள்ள கருநாகப்பள்ளியில் உள்ள எமிரேட்ஸ் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் அருண் பணியாற்றி வருகிறார். அருணின் இந்த சேவைக்கு போதினியின் மகன் செளதீஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com