ஒட்டுமொத்த ஆட்டத்தை மாற்றுமா கேஜரிவால் விடுதலை?

ஒட்டுமொத்த ஆட்டத்தை மாற்றப்போகும் கேஜரிவால் விடுதலை
கேஜரிவால் விடுதலை
கேஜரிவால் விடுதலை
Published on
Updated on
1 min read

மக்களவைத் தேர்தல் சூடுபிடித்திருக்கும் நிலையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விடுதலை செய்யப்பட்டிருப்பது, ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றப்போகிறது என்றே தேர்தலை கவனித்துவருவோர் சொல்கிறார்கள்.

தில்லியில் மே 25ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஒட்டுமொத்த வாக்காளர்களையும் சந்தித்து வாக்கு சேகரிக்க கேஜரிவாலுக்கு இரண்டு வார கால அவகாசம் உள்ளது. தில்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது, ஹரியாணாவில் குருசேத்திரம் தொகுதியிலும், பஞ்சாப் மாநிலத்தில் 13 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

கேஜரிவால் விடுதலை
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் எப்போது? வெளியானது அறிவிப்பு

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மாா்ச் மாதம் கைது செய்யப்பட்ட முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக 21 நாள்களுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களில், தில்லி திகாா் சிறையில் இருந்து கேஜரிவால் விடுவிக்கப்பட்டாா்.

நேற்று விடுதலையான நிலையில், இன்று காலை ஹனுமன் கோயிலில் வழிபாடு நடத்திய தில்லி முதல்வர், பிறகு செய்தியாளர்களை சந்தித்துவிட்டு தில்லியில் இரண்டு பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்கவிருக்கிறார். தில்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 25-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது.

ஆம் ஆத்மியின் முன்னணி தலைவரான கேஜரிவால் இல்லாமல் அக்கட்சியின் பிரசாரம் களையிழந்து காணப்பட்ட சூழலில், 50 நாள்களுக்கு பின் சிறையில் இருந்து அவா் வெளியே வந்திருப்பது ஆம் ஆத்மியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் ஆத்மி மற்றும் இந்தியா கூட்டணிக்காக அவர் 21 நாள்கள் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார். மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு ஜூன் 2ம் தேதிதான் அவர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.

அவர் மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டது முதல், நட்சத்திர வேட்பாளர்களின் பிரசாரம் இன்றி ஆம் ஆத்மியின் பிரசாரம் பெரிய அளவில் சூடுபிடிக்காமல் சுமாராகவே சென்றுகொண்டிருந்தது. அதிஷியும் சௌரவ் பரத்வாஜும் ஓரளவுக்கு பிரசாரத்தை நடத்திக்கொண்டிருந்தனர்.

ஒரு பக்கம் கேஜரிவால் மனைவி சுனிதாவும் இந்தியா கூட்டணித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பது, கேஜரிவாலுக்கு நாற்காலி போட்டு காலியாக விடுவது, சிறையிலிருந்து கேஜரிவால் அனுப்பிய கடிதங்களைப் படிப்பது என எத்தனையோ வேலைகளை செய்தாலும், அது அரவிந்த் கேஜரிவால் நேரடியாக வந்து பிரசாரம் செய்வதற்கு ஈடாக இருந்திருக்காது.

அதனை ஆம் ஆத்மியினரும் உணர்ந்திருப்பார்கள். இந்த நிலையில்தான் கேஜரிவால் வெளியே வந்திருக்கிறார். வெயிலைப் போல பிரசாரமும் சூடுபிடிக்கவிருக்கிறது. ஆம் ஆத்மிக்காக அவர் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டால், நிச்சயம் இது ஆம் ஆத்மி மற்றும் இந்தியா கூட்டணியின் பிரசாரத்தில் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றும் போக்காக அமையும் என்றே கணிக்கப்படுகிறது.

ஆம் ஆத்மி தொண்டர்களும் இனி பரபரப்பாக தேர்தல் பணியாற்றுவார்கள் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com